கோவை-சென்னை இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையை நாளை (8-ந் தேதி) மாலை பிரதமர் மோடி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார். இதற்கிடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதன்கிழமையை தவிர மற்ற 6 நாட்களிலும் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட காங்கிரஸ் முடிவு
பிரதமர் மோடி தமிழக வருகையை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிரதமர் மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக வழக்கறிஞர் நியமனம்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா, 1991-1996 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. அவரது வீடுகளில் நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோா்ட்டு கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தீர்ப்பு கூறியது. 2017ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இதையடுத்து அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் அனைவரும் தண்டனை அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களை கர்நாடக அரசு ஏலம் விட நீதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் கிரண் எஸ் ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் வழக்கறிஞர் மேற்கொள்வார் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் வேகம் எடுக்கிறது: 6 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு
இந்தியா முழுவதும் புதிய வகை கொரோனாவான ‘எக்ஸ்பி.பி.1.16’ தாக்கம் அதிகரிப்பதால், தொற்று பரவல் தொடர்ந்து வேகம் எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்து 4 ஆயிரத்து 435 என பதிவானது. நேற்று இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்தனர்.
போலி வீடியோ விவகாரம்: பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் போலி வீடியோ வெளியிட்ட உத்தரப்பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான பிரசாந்த் உம்ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் பிரசாந்த் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், 15 நாள்களுக்கு தினமும் காலை 10.30 மணியில் இருந்து 5.30 மணிக்குள் தமிழ்நாட்டு காவல் நிலையத்தில் ஆஜராகவேண்டும் என்று கூறியிருந்தது. இந்த நிபந்தனையை தளர்த்திய உச்ச நீதிமன்றம், திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு ஆஜராகவேண்டும். பிறகு விசாரணை அதிகாரி கேட்கும்போது கேட்கும் நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பிரசாந்த் உம்ரா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 (கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆத்திரமூட்டுதல்), பிரிவு 153 ஏ (வெறுப்பை வளர்க்கும் பேச்சு), பிரிவு 504 (அமைதியைக் கெடுப்பதற்குத் தூண்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பது), பிரிவு 505 (பொதுவெளியில் சில்மிஷம் செய்யும் சாத்தியமுள்ள அறிக்கை) ஆகியவற்றின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.