வாத்தி (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
தனியார் பள்ளி நிர்வாகிகளின் சதியை மீறி கிராமப்புறத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ஒரு வாத்தியாரின் கதைதான் வாத்தி. இந்த கதைக்குள் ஏழை – பணக்காரர், ஜாதி பாகுபாடுகளைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
கல்விக் கொள்ளையைப் பற்றிய கதையைக் கொண்ட படத்தில் நடிக்க முன்வந்திருக்கும் தனுஷைப் பாராட்ட நினைத்தாலும், அவரே ஒரு பள்ளி மாணவன் போல் தெரிவதால் சில இடங்களில் நெருடுகிறது. அதேபோல் ஆந்திர – தமிழக எல்லையில் உள்ள கிராமம் என்ற பெயரில் காட்டப்பட்டுள்ள கிராமம், இரு மாநிலத்தின் கிராமங்களைப் போலும் இல்லாமல் செட்டிங் போல தெரிவதும் நெருடுகிறது. பல இடங்களில் தெலுங்கு டப்பிங் படத்தை பார்ப்பது போல் உள்ளது. இருப்பினும் தனுஷுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
பொம்மை நாயகி (தமிழ்) – ஜீ5
குழந்தைகள் மீதான பாலியன் வன்கொடுமைகளை முன்வைத்து பல படங்கள் வந்துள்ளன. இதில் லேட்டஸ்டாக வந்திருக்கும் படம்தான் பொம்மை நாயகி. டீக்கடையில் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளி யோகிபாபு. மனைவி, மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அவருக்கு ஒரு பிரச்சினை வருகிறது. சிறுகுழந்தையான அவரது மகளுக்கு பாலியல் வன்கொடுமை நடக்க, சம்பத்தப்பட்டவர்களை தண்டிக்க போராடுகிறார். அந்த போராட்டம் வெற்றி பெறுகிறதா என்பதுதான் படத்தின் கதை.
காமெடி மட்டுமின்றி சீரியஸ் நடிப்பும் தனக்கு வரும் என்பதை ‘மண்டேலா’ படத்தின் மூலம் நிரூபித்தவர் யோகிபாபு. இப்போது ‘பொம்மை நாயகி’ படத்தின்மூலம் அவர் மீண்டும் அதை நிரூபித்துள்ளார்.
அலோன் (Alone – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
‘கடுவா’, ‘காப்பா’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஷாஜி கைலாஷ் மோகன்லாலை வைத்து இயக்கிய படம் ‘அலோன்’. தமிழில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்தசெருப்பு’ படத்தைப் போல்தான் இந்தப் படமும். இதில் ஆரம்பம் முதல் கடைசிவரை மோகன்லால் மட்டுமே ஸ்கிரீனில் இருப்பார்.
கொரோனா காலகட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் தனியாக வசிக்கிறார் மோகன்லால். அந்த அபார்ட்மெண்டில் அவருக்குச் சில அமானுஷ்ய சத்தங்கள் கேட்கின்றன. இதன்மூலம் அங்கு அதற்கு முன் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டதை உணரும் மோகன்லால் விசாரணையைத் தொடங்குகிறார். போனிலேயே நடக்கும் விசாரணையில் பல்வேறு விஷயங்களை கண்டுபிடிக்கிறார். விசாரணையை அடிப்படையாகக் கொண்ட என்றபோதிலும் படம் முழுவதும் ஒரு நடிகர் மட்டுமே வருவது சோர்வைத் தருகிறது.
ராக்கெட் பாய்ஸ் 2 (Rocket Boys 2 – இந்தி வெப்சீரிஸ்) – சோனி லைவ்
சோனி லைவ் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியான ராக்கெட் பாய்ஸ் வெப் சீரிஸின் 2-வது பாகம்தான் இந்த தொடர். ஹோமி பாபா, விக்ரம் சாராபாய், அப்துல்கலாம் ஆகியோர் இந்தியாவை அணுசக்தி நாடாக்க எப்படியெல்லாம் போராடினார்கள், அதற்கு அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பதை அடிப்படையாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டுள்ளது.