No menu items!

நியூஸ் அப்டேப்: முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

நியூஸ் அப்டேப்: முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது. அப்போது, “நேற்று காலையும் மாலையும் முதல்வர் வீட்டில் இருப்பவர்களிடம் பேசினேன். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அட்மிட் ஆனது குறித்து சிறிது நேரம் முன்புதான் தெரிவித்தார்கள். வீட்டில்  இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் அட்மிட் ஆகியிருப்பார். முதல்வர் ஸ்டாலின் மூன்று ஊசிகளுமே செலுத்தி இருக்கிறார்” என்றார்.

அதிமுகவை சேர்ந்த முனுசாமிக்கு குவாரி வழங்கப்பட்டதாக பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, “பொன்னையன் பைத்தியகாரன் மாதிரி பேசுறார். அவர் முன்பு மாதிரி இல்லை, ஒரு மாதிரி ஆயிட்டார். அதிமுக முனுசாமியின் குவாரிக்கு நாங்கள் ஒரு முறை  சீல்  வைத்திருக்கின்றோம். போன மாதம் புதியதாக 20  குவாரிகள் டெண்டர் விட்டதில் அதிகபட்ச தொகை செலுத்தி முனுசாமி குவாரி  எடுத்திருக்கிறார்” என தெரிவித்தார்.

ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே: மக்களவையில்வார்த்தைத் தடைகுறித்து கமல் காட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, மக்களவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பேச்சுரிமைக்கு எதிரான இந்நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளை சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காதது குடியரசையும் அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும். பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கிறதா? வள்ளுவரைப் பற்றிப் பேசும் பிரதமருக்கு ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ கதியை சுட்டிக்காட்ட யாருமில்லையா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே!” என்று கூறியுள்ளார்.

சிறுமி கரு முட்டை விற்பனை விவகாரம்: 4 மருத்துவமனைகளை மூட நடவடிக்கை

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சென்னை, தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “16 வயது சிறுமியிடம் இருந்து சினை முட்டையை எடுத்து ஈரோடு, சேலம், ஓசூர் பகுதிகளில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு வணிக ரீதியில் விற்பனை செய்ததாக வெளியான தகவல் குறித்த  விசாரணையில் அந்த ஒரே சிறுமியிடமிருந்து மட்டும் மாதம் தோறும் பலமுறை சினை முட்டை எடுத்துள்ள அதிர்ச்சியான தகவல் தெரியவந்தது. இந்த விசாரணை அடிப்படையில் ஈரோடு சுதா மருத்துவமனை, சேலம் சுதா மருத்துவமனை, பெருந்துறை ராம் பிரசாத் மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை மற்றும் திருவனந்தபுரம் ஸ்ரீ கிருஷ்ணா, திருப்பதி மத்ருத்வா மருத்துவமனை என 6 மருத்துவமனைகள் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறி செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இதில் தமிழகத்திலுள்ள மேற்கூறிய நான்கு மருத்துவமனைகளிலும் இருக்கிற உள்நோயாளிகளை உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து அனுப்பிவிட்டு பிறகு உரிய வழி முறைகளின் படி சட்ட விதிமுறைகளின் படி அந்த மருத்துவமனைகளை நிரந்தரமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகள் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதற்கு இணை இயக்குநர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ச

இலங்கையில் இருந்து தமது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் தப்பிய கோட்டாபய ராஜபக்ச நேற்று அதிகாலை மாலத்தீவு சென்றார். கோட்டாபய விமானம் மாலத்தீவில் தரையிறங்கிய தகவல் வெளியானதும் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி மாலத்தீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்த கோட்டாபய இன்று சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் கோட்டாபய சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் மாலத்தீவில் இருந்து பயணம் செய்த விமானத்தின் படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. கோட்டாபய ஏற்கெனவே சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக பல முறை சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக இப்போதும் மருத்துவ காரணங்கள் என்ற பெயரிலேயே சென்றிருப்பதாகவும், தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச சவுதி அரேபியா செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அமெரிக்காவில் பணவீக்க விகிதம் வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாக பிரபல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் வங்கி ஆய்வாளர் கிறிஸ்டினா கிளிப்டன், ‘‘அமெரிக்காவின் பணவீக்க வேகம் அதிகரித்து வருவது மந்தநிலையைத் தூண்டுகிறது. மந்தநிலை அச்சங்கள் டாலர் மதிப்பை உயர்த்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜூலை மாதத்தில் பெடரல் 100-அடிப்படை புள்ளிகள் உயர்த்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏஎம்பியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஷேன் ஆலிவர், “அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்து வரும் சூழலை கவனித்தால் வேகமாக பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்கிறது. ஏறக்குறைய 90 சதவிகிதம் அதிகமான வட்டி அதிகரிப்பை காண முடிகிறது. பெடரல் வங்கி 75 அடிப்படை புள்ளிகள் வரை செல்ல வாய்ப்புண்டு. இன்னும் அதிக எண்ணிக்கையில் சென்றால் 100 புள்ளிகள் நோக்கி செல்ல வாய்ப்பும் உள்ளது. பணவீக்கத்தை மீண்டும் குறைக்க மத்திய வங்கிக்கு இதுபோன்ற நடவடிக்கை அவசியமாகிறது” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...