No menu items!

மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்?

மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார்?

இலங்கையில் மிக சமீப நாட்கள் வரைக்கும் உச்சபட்ச அதிகாரத்துடன் இருந்த ஒரு குடும்பம் என்றால் அது ராஜபக்ச குடும்பம்தான். ஒரு மாதத்துக்கு முன்பு வரைக்கும் அரசியலில் பலம் மிக்க குடும்பமாக இருந்தது. ராஜபக்ச சகோதரர்கள், அவர்களது புதல்வர்கள் என குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர் பதவிகளை வகித்து வந்தனர். இப்போது, மக்கள் கையில் மாட்டினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என ஆளுக்கொரு பக்கமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தின் தலைவரான மகிந்த ராஜபக்ச எங்கே இருக்கிறார் என்பதே ஒரு மாதமாக புதிராக உள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. விலை உயர்வு ஒரு பக்கம் இருக்க, அந்த விலை கொடுத்து வாங்க தயாரானாலும் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலையால் கொதித்தெழுந்த மக்கள் அப்போது அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்சவும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கடந்த மே மாதம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பல இடங்களில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. போராட்டத்தை அடக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் கொதித்து எழுந்த மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின. பிரதமர் இல்லம் கொளுத்தப்பட்டது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். கொழும்புவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து மே 9ஆம் தேதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது பதவி விலகல் கடிதத்தை அன்றைய அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். அன்றிலிருந்து இன்றுவரை மகிந்த ராஜபக்ச எங்கே தங்கியிருக்கிறார் என்பது ரகசியமாகவே உள்ளது.

முதலில், மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் திரிகோணமலையில் உள்ள கப்பற்படை தளத்தில் தஞ்சம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின. சிங்களர்கள் பகுதியில் இருப்பதைவிட தமிழர்கள் பகுதியில் இருப்பதே பாதுகாப்பானது என்னும் அடிப்படையிலேயே திரிகோணமலை துறைமுகத்தை மகிந்த குடும்பம் தெரிவு செய்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்த திரிகோண மலை கப்பற்படை தளம் போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது திரிகோண மலை. இங்கு இலங்கையின் மிகப்பெரிய கப்பற்படை தளம் உள்ளது. ஆழம் அதிகமுள்ள இந்த துறைமுகம் போர்க்கப்பல்கள், நீர்முழ்கி கப்பல்கள் நிறுத்தி வைக்க சரியான இடமாக கருதப்படுகிறது. பெரிய வளங்கள் இல்லாத நிலையிலும் அமெரிக்கா, சீனா உட்பட பல வல்லரசு நாடுகள் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த விரும்புவதற்கு இந்த துறைமுகமே முக்கிய காரணம். ஏனெனில், தென்னாசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக திரிகோணமலையே கருதப்படுகிறது. இந்த துறைமுகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களால் இந்தியப் பெருங்கடலில் அதிகாரம் செலுத்துவது சுலபம். மூன்று பக்கம் மலைகளால் சூழ்ந்த இந்த துறைமுகத்தில் ஒரு பக்கம் இருக்கிற கப்பலில் இருந்து மற்றொரு பக்கம் இருக்கிற கப்பலைக்கூட பார்க்க முடியாது.

எனவேதான், மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் இந்த திரிகோண மலை கப்பற் படை தளத்தை மகிந்த ராஜபக்ச குடும்பம் தேர்வு செய்ததாக சொல்லப்பட்டது. நாட்டில் இருந்து இதுவரை வெளியேறவில்லை என்றால், இப்போதும் மகிந்த குடும்பத்தினர் இங்கேதான் தங்கியிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...