No menu items!

நியூஸ் அப்டேட்: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

நியூஸ் அப்டேட்: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

சர்வதேச முதலீட்டு சந்தையில் உருவாகியுள்ள மந்த நிலையால் இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பு குறைவது மட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 77 ரூபாய் 83 காசுகளாக சரிந்திருக்கிறது. இந்திய பங்கு சந்தைகளில் உள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருவதும், கச்சா எண்ணெய் விலை உயர்வும், உள்நாட்டு பணவீக்கம் அதிகரிப்பும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

தமிழக கோவில்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதிகள்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 43 கோடியே 68 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கோவில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்படி மதுரை, மீனாட்சி சுந்ததேஸ்வரர் கோவில், ரூ. 14.76 கோடி மதிப்பீட்டில் வீரவசந்தராயர் மண்டபம், திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டும் பணிகள், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், ஆன்மிகச் செம்மல் ஆளவந்தார் அறக்கட்டளையில் 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைணவ பிரபந்த பாடசாலை கட்டும் பணி, சென்னை, கொசப்பேட்டை, கந்தசாமி மற்றும் ஆதி மொட்டையம்மன் கோவில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி என மொத்தம் 43 கோடியே 68 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கோவில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் 9 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கோவில்களில் கட்டப்பட்டுள்ள அன்னதானக்கூடம், வணிக வளாகம், முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் ஓய்வுக்கூடம், திருக்குளம் புதுப்பித்தல், திருமண மண்டபம், வாகனப் பாதுகாப்பு மண்டபத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடம் போன்ற முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளை கட்டிடங்கள் இடிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு சொந்தமான அறக்கட்டளை கட்டிடங்களில் சில அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே இருந்தனர். 

இந்நிலையில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பாக ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஜூன் 10-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை இடித்துவிட்டு, 15ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தரப்பிற்கு உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, இன்று அடிகளார் திருமண மண்டபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியை கோயில் நிர்வாகமே அகற்றிகொள்ள அரசு தரப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு பகுதிகள் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டு வருகிறது.

மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்

தூத்துக்குடி பசும்பொன் நகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 20), திரு.வி.க நகரை சேர்ந்த சு. மாரிமுத்து (23), நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த ஜெபசிங் (23) இவர்கள் மூவரும் நண்பர்கள். கூலி வேலை செய்து வரும் இவர்கள் நேற்று காலையில் நடந்த ஒரு நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் இரவு 10 மணி அளவில் தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை அதிகமானதால் மூவரும் அங்கேயே படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கிச் சென்ற ரயில், தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த இருவர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஒருவரின் தலை துண்டானது. தண்டவாளத்தின் அருகில் தூங்கியதால் ஜெபசிங் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்: அர்ஜுன் சம்பத்

மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் அர்ஜுன் சம்பத் இன்று மனு அளித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசியல்வாதிகளாலும் சினிமா ரசிகர்களாலும் மதுரை ஆதீனம் அச்சுறுத்தப்படுகிறார். இந்து சமயத்திற்கு ஒரு வில்லங்கம் என்றால் மதுரை ஆதினம் குரல் கொடுப்பார். அப்படி குரல் கொடுப்பதால் அதிமுக, பாஜக ஆதரவாளார் என்பதெல்லாம் கிடையாது.

விஜய் ரசிகர்கள் ஆதீனத்தின் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர். விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். சு. வெங்கடேசனும் மதுரை ஆதீனத்தை மிரட்டுவது போல் பேசி வருகிறார். அவருக்கும் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். மதுரை ஆதீனத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும் என்பது எங்களது எண்ணம். மாநில அரசு கொடுக்கவில்லை என்று சொன்னால் மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...