No menu items!

சிறுகதை: அவனை விட்ராதே! – சுபா

சிறுகதை: அவனை விட்ராதே! – சுபா

ரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக பூக்கள் எங்கிருந்தோ எறியப்பட்டு அவனது கால்களுக்குக் கீழே விழுந்தன. காலில் மிதிபட்டுக் கசங்கின.

அந்த மலர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மணத்தைப் பரப்பினவோ, அவை கசங்கியபின் அவ்வளவுக்கவ்வளவு சகிக்கமுடியாத துர்நாற்றத்தைப் பரப்பின.

ஸ்ரீநாத் சுற்றுமுற்றும் பார்த்தான். பூஞ்செடிகள் எதுவும் தெரியவில்லை. வான் நோக்கினான். பூக்கள் எங்கிருந்தும் பறந்தும் வரவில்லை.

அப்படியானால் பூக்கள் எங்கிருந்து வீசி எறியப்பட்ட மாதிரி வீழ்கின்றன? யார் பறித்து அவன் கால்களுக்கு முன் போடுகிறார்கள்?

ஸ்ரீநாத்துக்கு சடக் என்று விழிப்பு கொடுத்தது ச்சே. கனவு! வியர்த்து விட்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தான்.

என்ன கனவு இது? இதற்கு என்ன அர்த்தம்?

தூக்கம் முற்றிலும் கலைந்துவிட்டது. படுக்கையை விட்டு எழுந்து, அவசரம் அவசரமாகத் தயாராகி வீட்டை விட்டு வெளியே வந்தான். ஃபுல்காவைப் பிய்த்து சிக்கன் கிரேவியில் தோய்த்து வாயில் போட்டுக்கொண்டான். அந்தேரி இரயில் நிலையம் நோக்கி நடந்தான்.

அந்தேரி – சர்ச்கேட் ஃபாஸ்ட்டில் இன்று ட்யூடி. எஞ்சின் கம்பார்மென்டில் ஏறினான். இயந்திரத்துக்கு உயிரூட்டினான். சற்று நேரம் ரீங்காரம். அந்த ரீங்காரத்தை ரசித்தான். தினம் அதே ரீங்காரம்தான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாகக் கேட்பது போல் அந்த ரீங்காரம் அவனை அவ்வளவு வசீகரிக்கும்.

கடைசிப் பெட்டியை நோக்கி கண்களைத் திருப்பினான். பச்சை மேலும் கீழுமாக ஊசலாடியது. பிளாட்ஃபாரத்தைப் பார்த்தான். கடைசி வினாடியில் ஒன்றிரண்டு பேர் ரயிலை நோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தார்கள்.

ஹாரனை அலற விட்டான். ‘பாங்க்…’ உறங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்று பயந்து பாய்ந்தோடியது. ஸ்ரீநாத் புன்னகைத்தான். சிவுக் என்று இழுபட்டு ரயில் குலுக்கலுடன் நகர்ந்தது.

ற்று நேரத்தில் நிகழ இருந்த அந்த முக்கியமான சம்பவத்துக்குப் பிரதான சாட்சியான லலிதா, மின் தொடரில் சர்ச் கேட்டிலிருந்து அந்தேரி சென்று கொண்டிருந்தாள். அவளது கால்களுக்கு அருகில், ரயில் பெட்டியின் ஓரத்தில் இருந்து ஏதோ ஒன்று நெளிந்து நெளிந்து வருவதைக் கண்டாள்.

கொஞ்சம் உற்றுப் பார்த்தாள். பூரான்! அவளது கால்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பாப்ரே! லலிதாவைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. தன்னிச்சையாய் தனது ஒரு செருப்புக் காலை உயர்த்தினாள். பூரானை ஓங்கி மிதித்துத் தேய்த்தாள். பூரான் கூழாகியது. அப்படியே செருப்பாலேயே அதன் மிச்சமிருந்த சடலத்தை நகர்த்தி, பெட்டிக்கு வெளியே தள்ளினாள். அந்தச் சடலம் காணாமல் போனது. லலிதாவின் படபடப்பு சற்றே அடங்கியது.

சுற்றிலும் நோக்கினாள். இருக்கை கிடைத்த பெண்கள் ஹனுமான் சாலீசா, பாபா சத் சரித பாராயணம் செய்துகொண்டிருந்தார்கள். ஒருத்தி மாமியாரைத் திட்டிக்கொண்டிருந்தாள். ஒரு கன்னிப்பெண் வெட்கம் சொட்ட, சொட்டப் புன்னகையுடன் தோழியிடம் சன்னக்குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுடைய காதல் கதையாகத்தான் இருக்கும்! பாபா படத்துடன், சாம்பிராணி புகையைப் பரவ விட்டபடி ஒரு பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள். நிறைய பேர் செல்ஃபோனில் ஆழ்ந்திருந்தார்கள்.

இந்த மின்சார இரயில் போக்குவரத்து அவளுக்கு பிடிபடவில்லை. இரண்டு நிமிடத்திற்கு ஒரு ரயிலை இயக்கினாலும் கொடுக்காய்புளி மரத்தில் காய்கள் தொங்குவது போல மக்கள் கூட்டம் எப்படி சேருகிறது. சர்ச் கேட்டிலிருந்து அந்தேரி போய் சேருவதற்குள் வியர்வையில் நனைத்து, உடம்பால் பிழிந்து, சூட்டினால் காய வைத்து.. இத்தனைக்கும் அது மகளிருக்கான தனிப் பெட்டி.

ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றது. புயல் போல் மாணவிகள் படை உள்ளே நுழைந்தது. படபட வென சிறகுகளை அடிக்கும் பட்டாம்பூச்சிகள் போல மராத்தியில் சல சல வென்ற சத்தம். அடேடே… அந்த பெண் எங்கே? பாபா படத்துடன் சாம்பிராணி புகை போட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாளே?

புகைந்து கொண்டிருந்த ஒரு சாம்பிராணிக் கட்டி இருக்கையின் அடியில் விழுந்ததைக் கூட கவனியாமல் சென்ற நிலையத்தில் அவள் இறங்கியதை லலிதா பார்க்கவில்லை.

‘ஓ’வென்ற அலறல் கேட்டு திடுக்கிட்டுக் கண் திறந்தாள் லலிதா. ‘தீ, தீ’ என்று சில பெண்களும் ‘பாம், பாம்’ என்று சில பெண்களும் பெட்டியின் வாயிலை நோக்கி ஒடிக் கொண்டிருந்தார்கள். லலிதா பார்த்து கொண்டிருந்த போதே அந்தப் பட்டாம்பூச்சிகள் அனைத்தும், திடீரென ஈசல்களாக மாறி அடுத்திருந்த தண்டவாளத்தில் தட், தட் என்று விழுந்தன.

ஸ்ரீநாத்துக்கு ஒன்றும் புரியவில்லை காலியாக இருந்த தண்டவாளத்தில் திடீரென கொத்து கொத்தாக பெண்கள் விழுவதா? உணர்வுக்கு வந்து வேகமாகச் சென்றுகொண்டிருந்த வண்டியை நிறுத்த ஸ்ரீநாத் செயல்படுவதற்கு முன்பே தலை தனியாக உடல் தனியாக கால் தனியாக என்று அந்தப் பூக்கள் சின்னாபின்னமாகின.

இன்னும் சில பூக்கள், கடந்து சென்ற அவனது இரயில் பெட்டியில் மோதி செம் பூக்களாய் விழுந்து கொண்டிருந்தன. ஐயோ.. அந்தக் கனவு!

ஸ்ரீநாத்தும் லலிதாவும் சில மாதங்களுக்குப் பிறகு ஒரே மருத்துவமனையில் இருந்து ஒரே நாள் தனித்தனியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சொந்த பந்தம் இல்லாத ஸ்ரீநாத் ரிஷிகேஷ் சென்றான். அங்கு திரிந்து கொண்டிருந்த ஒரு சன்னியாசியின் தாடியைப் பிடித்து இழுத்து, “ஏன்?” என்று கண்களில் ரத்தச் சிகப்பும் வெறியுமாக வினவினான்.

அவர் சிரித்தார். “கோழியை சாகடிக்கறப்ப வலிக்கலை இல்ல? அது ஒனக்கு உசிரா தெரியலை இல்ல? எத்தனை கோழியோட ஆத்தாவும் அப்பனும் தாரமும் தங்கச்சியும் மகளும் மகனும் போயிருப்பாங்கன்னு என்னைக்காவது தோணிச்சா ஒனக்கு? ஏன்னு கேட்டியா? இப்ப கேக்கறே? போ… அவன் கிட்ட கேளு. ஏன், ஏன், ஏன்னு விடாம கேளு. சொல்லுவான்.”

பன்னிரண்டு ஆண்டுகளில் ஸ்ரீநாத் தன் பெயரை மறந்தார். அந்தக் கேள்வியுடனேயே அலைந்தார். எங்கோ உட்கார்ந்தார். பசியா, தாகமா, குளிரா, வெயிலா? எதுவும் தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் உள்ளே எரிமலை வெடித்தது. குழம்பு உச்சந்தலையைத் துளைத்துக் கொண்டு பீறிட்டு வழிந்தது. சிரித்தார். சிரித்தார். சிரித்தார்.

எதிரே நின்றவளைப் பார்த்தார். நரை. திரை. உதடுகள் கீழ் நோக்கிக் கோணியிருந்தன.

“ஏன் சுவாமி ஏன்?” என்று கேட்டாள்.

“பாம்பு, பல்லி, பூரான், தேளு இதுங்களை எல்லாம் சாகடிக்கறப்ப வலிக்கலை இல்ல? அது ஒனக்கு உசிரா தெரியலை இல்ல? எத்தனை உசிருங்களோட ஆத்தாளும் அப்பனும் தாரமும் தங்கச்சியும் மகளும் மகனும் போயிருப்பாங்கன்னு என்னைக்காவது தோணிச்சா ஒனக்கு? பன்னெண்டு வருஷத்துக்கு முன்னால நானும் ஏன்னு கேட்டேன். எனக்குத் தெரிஞ்சிருச்சி… ஏன்னு தெரிஞ்சிரிச்சி” என்று வெற்றுக்கால்களுடன் அந்தப் பனிப்பாறையில் நின்று கூத்தாடினார் சுவாமி.

எதிரில் நின்றவள் முகத்தில் ஆனந்த ரேகை. அவரது தாடியைப் பிடித்து உலுக்கினாள்.

“ஏன் சுவாமி? ரயில் பைத்தியம் கேக்கிறேன். ஏன் சுவாமி ஏன்?”

“லலிதாம்பா. நான் சொன்னா ஒனக்குப் புரியாதுடி! அதோ அங்கே இருக்கானே. அவனைக் கேளு. அவன் சொன்னாத்தான் புரியும். அவனை விட்ராதே.. கெட்டியாப் பிடிச்சிக்க… போ.. போ..”

சாமியார் அவளை உதறி விட்டு விறு விறுவென நடந்தார். அவள் அவரையே முறைத்துக் கொண்டிருந்தாள். 

ஓவியம்: வேல்

suba
சுபா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...