No menu items!

நியுஸ் அப்டேப்: பள்ளியில் மாணவர்களுடன் பாடத்தை கவனித்த முதல்வர்

நியுஸ் அப்டேப்: பள்ளியில் மாணவர்களுடன் பாடத்தை கவனித்த முதல்வர்

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு, திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

கொரோனா பெருந்தொற்றினால் தமிழகப் பள்ளிகள், 19 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு,  வகுப்புகள் இல்லாத நிலையில் மாணவர்களின் கற்றலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக, தமிழ்நாடு அரசு, 2022-23ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தொடர்ந்து ‘எண்ணும் எழுத்தும்’’ மாதிரி வகுப்புகளை முதலமச்சர் பார்வையிட்டார். பின்னர், திருவள்ளூர் வடகரை அரசு பள்ளியில் ஆய்வு செய்த முதலமைச்சர், 10-ம் வகுப்பு தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும்போது வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கவனித்தார்.

கொடுங்கையூர் விசாரணை கைதி மரணம்: மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை

சென்னை கொடுங்கையூரில் நேற்று போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரெட்ஹில்ஸ் ராஜசேகர் (வயது 33) என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற உயரதிகாரிகள் விசாரணையைத் தொடர்ந்து, கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், முதன்மை காவலர்களான ஜெயசேகரன், மணிவண்ணன் முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல்நிலையத்தில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கெல்லீஸ் சிறார் நீதிமன்ற 12-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து புகார் இருந்தால் தெரிவிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த மாதம் 7, 8ஆம் தேதிகளில், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையால் உருவாக்கப்பட்ட 5 பேர் அடங்கிய குழுவினர் கோயிலுக்கு வருகை புரிந்தனர். ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுவதாக கூறிய தீட்சிதர்கள் கோயில் கணக்கு வழக்குகளை அவர்களுக்கு காண்பிக்க மறுத்தனர். வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றம் மூலம் சட்டரீதியாக அமைக்கப்பட்ட குழுவினருக்கு மட்டுமே கணக்கு வழக்குகளை காண்பிக்க முடியும் எனவும் கூறினர்.

இந்நிலையில், இன்று இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகின்ற 20ஆம் தேதி 21ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்குள் பக்தர்கள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜர்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில்  ராகுல் காந்தி இன்று ஆஜரானார். முன்னதாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு பேரணியாக ராகுல் காந்தி சென்றார். பின்னர், விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜரான நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அரசு இணைய தளங்களை முடக்கிய ஹேக்கர்கள்: நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு

இந்தியாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70-க்கும் மேற்பட்ட இணைய தளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம், தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை அமைப்பு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், நாக்பூரிலுள்ள அறிவியல் கல்வி நிறுவனம், டெல்லி பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட பல அமைப்புகளின் இணையதளங்கள் கடந்த சில நாட்களில் முடக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் மட்டும் 50க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

நபிகள் நாயகம் பற்றி பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா பேசியதை கண்டித்து இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர். டிராகன்ஃபோர்ஸ்மலேசியா என்ற பெயரில் இணையதளங்களை முடக்கியுள்ள அவர்கள், “உங்களுக்கு உங்கள் மதம்! எனக்கு என் மதம்!” என ஆடியோ மற்றும் வாசகங்களை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...