No menu items!

நியூஸ் அப்டேட்: அது பொன்னையன் பேசியதுதான் – குமரி கோலப்பன்

நியூஸ் அப்டேட்: அது பொன்னையன் பேசியதுதான் – குமரி கோலப்பன்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்றும், ஒற்றைத் தலைமைக்கு வர கே.பி. முனுசாமி முயற்சி மேற்கொண்டதாகவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகி கோலப்பன் என்பவருடன் பேசியதாக வெளியான ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, “நான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ அது; நான் பேசியது இல்லை” என்று பொன்னையன் விளக்கம் அளித்திருந்தார். அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது குரல் போன்றே மிமிக்ரி செய்யப்பட்டுள்ளதாகவும் பொன்னையன் குறிப்பிட்டார்

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கோலப்பன், “ஆடியோவில் இருப்பது பொன்னையன் குரல் தான். கடந்த 9-ம் தேதி பொன்னையனுடன் நான் பேசினேன். ஆடியோவில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொன்னையனுடயது தான். பொன்னையனை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆடியோவை பதிவு செய்யவில்லை” என்றார்.

17-ம் தேதி ஈபிஎஸ் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை வானகரத்தில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த கட்டமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் நேற்று தகவல் வெளியாகினது.

இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணியன் சுவாமி வழக்குவிசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான கடல் பகுதியில் ராமர் பாலம் இருப்பதாகவும், இந்தப் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரியும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை வரும் 26-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஹால் டிக்கெட்டை திருப்பி அளிக்காவிடில் விடைத்தாள் திருத்தப்படாது: நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு வரும் 17ஆம் தேதி தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஹால் டிக்கெட்டில் தேர்வுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், “தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டையும் தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தேர்வர்களின் விடைத்தாள் திருத்தப்படாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நாளை மறுநாள் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், “இன்று (13.07.2022) வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (14.07.2022) மற்றும் மறுநாள் (15.07.2022) கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...