No menu items!

இரவின் நிழல் – சினிமா விமர்சனம்

இரவின் நிழல் – சினிமா விமர்சனம்

வாழ்க்கையில் பிரச்சினைகள் முன்னோக்கி இழுத்து செல்ல, பொறுமையிழக்கும் ஒருவர் தன் வாழ்க்கையை பின்னோக்கி நினைத்து பார்ப்பதே ‘இரவின் நிழல்’ படத்தின் ஒன்லைன்.

உலக சினிமாவின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே போக்கில் பயணிக்கும் திரைக்கதையை ஒரே ஷாட்டில் எடுத்த படங்களாகவே கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஆனால் உலகிலேயே முதல் முறையாக Single Shot Non Linear Movie-ஐ எடுத்து சாதித்து காட்டியிருக்கும் படமாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ வெளிவந்திருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம்; பாடல்கள் மற்றும் இயக்கம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களில் ஒரிஜினல் மியூசிக்கை வழங்கியிருக்கிறார்.

ஏறக்குறைய 96 நிமிடம் 36 விநாடிகள் ஓடும் இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார் ரா.பார்த்திபன். இதற்காகவே பார்த்திபனுக்கும் அவருடன் இந்த சாதனையை நிஜமாக்கிய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட ’’இரவின் நிழல்’ படக்குழுவைச் சேர்ந்த 340 பேருக்கும் வாழ்த்துகள்.

’இரவின் நிழல்’ படத்தின் முதல் பாதியாக, அப்படத்தின் மேக்கிங்கை ஒரு அரை மணிநேர படமாக காட்டியிருக்கிறார்கள். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால், இதில் நடிப்பவர்களோ அல்லது கேமராவை கையாளும் ஒளிப்பதிவாளரோ அல்லது இதர தொழில்நுட்ப கலைஞர்களோ யாராவது ஒருவர் ஒரு சின்ன தவறு செய்துவிட்டால் கூட, முதலிருந்து அனைத்து காட்சிகளையும் படமெடுக்க வேண்டிய கட்டாயம். இதை மேக்கிங் படத்தில் புரிய வைத்திருக்கிறார் பார்த்திபன். கடைசியில் 23-வது டேக்கில் படம் ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட உற்சாகமாகிறது ‘இரவின் நிழல்’ படக்குழு.

ஒட்டுமொத்த கதையும் ஒரே லொகேஷனில், பிரத்தியேகமாக போடப்பட்டிருக்கும் செட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே செட்டுக்குள் 59 ப்ளாக்குகள். காட்சியின் பின்னணியை காட்டுவதற்கேற்ப செட் போட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்த காட்சிகள் வருவதற்குள்ளாகவே நடிக்கும் நட்சத்திரங்கள் உடை மாற்றுவது உள்பட எல்லா சமாச்சாரங்களையும் செய்து முடித்தாக வேண்டும் என்பதே பெரிய சவால்.

இப்படத்தை ஸ்டெடி கேம் மற்றும் கிம்பல் ஆகியவற்றை வைத்து ஷூட் செய்திருக்கிறார்கள். 35 எம். எம் லென்ஸ், சோனி வெனிஸ் கேமரா என படத்திற்கு அவசியமான தொழில்நுட்ப சமாச்சாரங்களை பயன்படுத்தி இதை சாதித்து இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான புது முயற்சிக்கு விமர்சனத்தில் இத்தகைய தகவல்கள் பற்றி எழுதுவது தவறில்லை என்பதால் குறிப்பிட்டிருக்கிறோம்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் மோனோலாக்கில் திரைக்கதை நகர்வதால், படம் முழுக்க அவரும் நிழலாக தொடர்கிறார். வழக்கம் போல் பார்த்திபனின் அடாவடி ஆர்ப்பாட்டம். பிரிகிதா சாகா, ப்ரியங்கா ரூத், ஸ்நேகா குமார் என மொத்தம் மூன்று கதாநாயகிகள். இதில் பிரிகிதா சாகா நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள். ஸ்நேகா குமாருக்கு குரும்புத்தனமான முகம். அறிமுகப்படத்திலேயே துணிச்சலுடன் இதழ் முத்தம் கொடுத்து நடித்திருக்கிறார். ப்ரியங்கா ரூத் தனது கதாபாத்திரத்தின் இயலாமையை அழகாய் வெளிக்காட்டியிருக்கிறார். ரோபோ சங்கர் இரண்டு காட்சிகளில் சாமியாராக ரோபாவை போல் வந்து போகிறார். வரலக்‌ஷ்மி ரோபோ சங்கருக்கு ஜோடி.

வரலக்‌ஷ்மி நடித்திருக்கிறார் என்றதும் அந்த கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமோ என்று நமக்குள் இருக்கும் லாஜிக் டயஸ்னோஸ்டிக்ஸ் சென்ஸ் யோசிக்க வைக்கிறது. ஆனால் யோசிப்பதற்குள்ளாகவே அவரை தீர்த்து கட்டி விடுகிறார்கள். இதேபோல் இன்னும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தால் போதும், வரலக்‌ஷ்மிக்கு சீரியல்களில் வாய்ப்புகள் நிச்சயம்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. ஆர்தர் ஏ வில்சனின் கேமராவும், அவரது ஸ்டெடி கேம் டீமும், கிம்பல் டீமும் சிங்கிள் ஷாட் என்ற கான்செப்டை சாத்தியமாக்கி இருக்கின்றன. கதை நிகழும் லொகேஷனில் இருக்கும் ஒவ்வொரு ப்ளாக்குக்கும் மாறும் போது, அந்தந்த காட்சிக்கேற்ற லைட்டிங்கும் மாறும் என்பதால், அதை சமாளித்து, அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆகாமல் எடுப்பது என்பது பெரும் உழைப்பு. அதற்கு லைட்டா மனம் விட்டு பாராட்டாமல் நல்ல ப்ரைட்டாகவே வாழ்த்தலாம்.

’பாவம் செய்யாதிரு மனமே’ பாடல் உருக வைக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் லேட்டஸ்ட்
ஒரு அசத்தலான முயற்சியில் பல பலங்கள் என்பது பாராட்டுக்குரியது. ஆனால் காட்சிகள் 1970, 80 களில் நடப்பது போல் காட்டுவதாலோ என்னவோ, அவற்றில் அந்த காலத்தின் மேக்கிங் ஸ்டைல் இருக்கிறது. கேமரா தொடர்ந்து மாரத்தான் போட்டியில் ஓடுவது போல் தொடர்ந்து பயணிப்பதால், சில காட்சிகளில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை முழுவதும் காட்டாமல், அடுத்த என்ன அடுத்து என்ன என்பது போல் பரபரக்கிறது.

‘இரவின் நிழல்’ ஒரு மாபெரும் முயற்சி. டைரக்‌ஷனும் எடிட்டிங்கும் நன்கு அறிந்த ஒருவராலேயே இந்தளவிற்கு யோசிக்க முடியும். அதை பிரமாதமாக செய்து காட்டியிருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

’இரவின் நிழல்’ கவனத்தை ஈர்க்கும் பார்த்திபனின் சுழல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...