No menu items!

நியூஸ் அப்டேட்: மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நியூஸ் அப்டேட்: மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர் ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவலநிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும். இது தொடர்பாக பிரதமரின் அவசர தலையீட்டை கோருகிறேன்” என்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் – இந்திய பிரதமர் சந்திப்புக்கு அமெரிக்கா பாராட்டு

உஸ்பெகிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்ட அவர், போருக்கான நேரம் இதுவல்ல என்றும் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த ரஷிய அதிபர் புதின், போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், நீண்ட காலமாக ரஷியாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புதினிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நல குறைவால் இன்று காலமானார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது முதிர்வின் காரணமாக 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி காலமானார்.

சேடப்பட்டி முத்தையா, 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார். 1977, 1980, 1984, 1991 ஆகிய 4 முறை சேடப்பட்டி தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த சேடப்பட்டி முத்தையா 1999இல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியும் வகித்தார். 2006இல் அதிமுகவிலிருந்து விலகிய பின்னர் திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா எனும் மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர், இளைய மகன் மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாஞ்சாங்குளத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் கடையில் திண்பண்டம் வாங்க சென்ற சிறுவர்களுக்கு கொடுக்க முடியாது என்று சிறுவர்களிடம் ஜாதி தீண்டாமையை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரை கைது செய்தனர் . மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்பநாபன் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நீரா ராடியா தொலைபேசி உரையாடலில் குற்ற நோக்கம் இல்லை: வழக்குகளை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தொழிலதிபர்களின் சார்பில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பெரும் புள்ளிகளோடு நீரா ராடியா பேசியதாக வெளியான ஆடியோ இந்திய அரசியலையே உலுக்கியது. இந்த உரையாடல்கள் தொடர்பாக வருமான வரித்துறை 14 வழக்குகளை பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியது. நீரா ராடியாவின் 8,000 தொலைபேசி உரையாடல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இதில் நீரா ராடியா- தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய ஆடியோ டேப்பும் அடங்கும்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 8,000 தொலைப்பேசி உரையாடல்களை ஆய்வு செய்து முடித்துள்ளதாகவும் நீரா ராடியாவின் உரையாடலில் எந்தவிதமான குற்ற நோக்கமும் இல்லை என்றும் விசாரணையை கைவிடுவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...