No menu items!

காங்கிரஸ் தலைவராகிறாரா அஷோக் கெலாட்?

காங்கிரஸ் தலைவராகிறாரா அஷோக் கெலாட்?

ஒரு பக்கம் உற்சாக நடை போட்டு காங்கிரசை ராகுல் காந்தி இழுத்து சென்றுக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் காங்கிரஸ் வழக்கம்போல் குழப்பத்தில் இருக்கிறது.

அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 17ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. முடிவுகள் 19ஆம் தேதி வெளிவரும் என்று நாள் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது தீர்மானமாகவில்லை.

தமிழ்நாடு உட்பட பல காங்கிரஸ் கமிட்டிகள் ராகுல் காந்தியை தலைவராக்க தீர்மானம் போட்டிருக்கின்றன. ஆனால் அவர் இதுவரை அசைந்துக் கொடுக்கவில்லை. நிம்மதியாக நடந்துக் கொண்டிருக்கிறார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு ஏறக்குறைய இல்லை என்ற முடிவுக்கே காங்கிரஸ் கட்சியினர் வந்துவிட்டார்கள்.

சசி தரூர் போட்டியிட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. நேற்று அவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் தலைமைத் தேர்தல் குறித்து சோனியாவுடன் விவாதித்ததாக தரூர் தெரிவித்திருக்கிறார். தலைவர் பதவிக்கு போட்டியிருப்பது நல்லது சோனியா காந்தி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைவர் பதவிக்கு தேர்தலை சோனியா விரும்புவதற்கு காரணங்கள் இருக்கின்றன. தேர்தல் நடந்தால்தான் கட்சி உயிர்ப்புடன் இருப்பது தெரியும். போட்டியில்லா தேர்தல் என்பது எதிர்க் கட்சிகளின் விமர்சனத்துக்குள்ளாகும். போட்டியிருந்தால் கட்சியினர் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள் என்று சோனியா கருதலாம். இந்தத் தேர்தலில் தான் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் தேர்தல் நடுநிலையாக நேர்மையாக நடைபெறும் என்று சோனியா சசிதரூரிடம் கூறியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

சோனியாவை சசிதரூர் சந்தித்ததன் மூலம் அவர் போட்டியாளர் என்று கருதப்படுகிறார். ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றொரு போட்டியாளாராக இருப்பார் என்று செய்திகள் சொல்லுகின்றன.

தனது ஆதரவாளர்களிடம் அசோக் கெலாட் பேசும்போது ’உங்களைவிட்டு தள்ளிப் போய்விட மாட்டேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சித் தலைவராக டெல்லிக்கு அவர் செல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதால் கெலாட் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார். இன்று சோனியா காந்தியை சந்திக்கும் அஷோக் கெலாட். அங்கிருந்து கேரளா சென்று ராகுல் காந்தியை பாதயாத்திரையில் சந்திக்கிறார்.

இதில் என்ன சுவராசியம் என்றால் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு சச்சின் பைலட் இன்று கேரளாவிலிருந்து கிளம்புகிறார். அவர் கிளம்பியதும் அஷோக் கெலாட் அங்கு செல்கிறார். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசியலில் சச்சின் பைலட்டுக்கும் அஷோக் கெலாட்டுக்கும் ஆகாது. இருவரின் மோதல் உச்சக் கட்டத்தை அடைந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியே கவிழும் நிலைக்கு சென்றது. சோனியா, ராகுல் சமாதானதம் செய்ததால் ஆட்சி தப்பியது.

அஷோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட் பொறுப்பேற்க வாய்ப்பிருக்கிறது. ராஜஸ்தான் காங்கிரசில் இளம் உறுப்பினர்கள் முன்னுக்கு வருவார்கள்.
காங்கிரஸ் தலைமை தேர்தலில் அஷோக் கெலாட்டுக்கும் சசி தரூருக்கும் இடையேதான் போட்டியிருக்கும் என்பது இன்றைய சூழல். இதில் அஷோக் கெலாட் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள்தாம் அதிகம்.

சசி தரூர் மெத்த படித்தவர். அறிவுஜீவி என்று அறியப்பட்டவர். ஆனால் அவருக்கு தொண்டர்கள் செல்வாக்கு கிடையாது. அது மட்டுமில்லாமல் தலைமைக்கு எதிராக கிளம்பிய ஜி23 தலைவர்கள் பட்டியலில் அவரும் உண்டு. அவர் தனிப்பட்ட வாழ்க்கையும் சர்ச்சையிலானது.

ஆனால் அஷோக் கெலாட் பழுத்த அரசியல்வாதி. 71 வயதாகிறது. அரசியலில் பல இறக்கங்களையும் ஏற்றங்களையும் பார்த்தவர். முழுமையான காங்கிரஸ்காரர். மிக முக்கியமாக நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவர். நம்பிக்கையானவர்.

சசி தரூர் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு அஷோக் கெலாட்டுக்குதான் என்ற பேச்சு காங்கிரசில் இருக்கிறது. காரணம், கெலாட்டுக்கு சோனியாவின் ஆசிர்வாதம் உண்டு.

அஷோக் கெலாட்டால் காங்கிரசை சீர்படுத்திவிட முடியுமா? முன்னேற்றிவிட முடியுமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இன்று காங்கிரஸ் பூஜ்யத்தில் இருக்கிறது. இனி எடுக்கப்படும் ஒவ்வொரு அடியும் முன்னேற்றம்தான். அந்த விதத்தில் காங்கிரசை முன்னேற்ற அஷோக் கெலாட்டால் முடியும்.

அஷோக் கெலாட் தலைவரானால், ராகுல் காந்திக்கு என்ன பொறுப்பு?

காங்கிரசின் முகமாகவும் குரலாகவும் ராகுல் இருப்பார். கட்சிப் பணிகளை அஷோக் கெலாட் பார்த்துக் கொள்வார்.

சோனியா காந்தி என்ன செய்வார்?

ராகுலையும் பார்த்துக் கொள்வார். அஷோக் கெலாட்டை பார்த்துக் கொள்வார்.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் ராஜமாதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...