No menu items!

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது

சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இன்று (மே 31) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை: நைஜீரியாவில் முதல் பலி

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு நடப்பு ஆண்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. நைஜீரியாவில் சந்தேகத்திற்குரிய வகையிலான 66 பேரில் 21 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது. அவர்களில் ஒரு நோயாளி மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார். 40 வயது கொண்ட அவருக்கு இணை நோய்களும் இருந்தன என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

காங்கோ நாட்டில் குரங்கு அம்மை நோய்க்கு 9 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி காங்கோ நாட்டின் சன்குரு பகுதியின் சுகாதார பிரிவு தலைவரான டாக்டர் அய்மி அலங்கோ, “நாட்டில் 465 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. காங்கோவில் வசிப்போர் வன பகுதிக்கு சென்று இறந்த குரங்கு, வவ்வால் மற்றும் எலிகளின் உடல்களை எடுத்து வந்து உணவாக சாப்பிட்டதில் குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளது’’ என கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை குறைக்காவிட்டால் மாவட்டம்தோறும் போரட்டம்: முற்றுகை பேரணியில் அண்ணாமலை பேச்சு

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்து அறிவித்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. தொடர்ந்து, மாநில அரசுகளும் உள்ளூர் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால், ‘மத்திய அரசின் விலைக் குறைப்பால் மாநில அரசு வருவாயும் குறையும். மேலும், மத்திய அரசு இதுவரை பலமுறை உயர்த்திவிட்டு தற்போது அதில் 50% மட்டும் குறைத்து, மாநிலங்களைக் குறைக்கச் சொன்னால் எப்படி செய்ய முடியும்?” என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து, இன்று கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, இன்று எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.

பாஜவினரின் பேரணியையொட்டி, தலைமை செயலகத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, “தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் மாவட்டம்தோறும் அறப்போரட்டம் நடத்துவோம். போட்டி திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான். இறுதியில் எப்படியும் பாஜக தான் வெல்லும். பாஜக தொண்டர்கள் கைதுக்கும் போராட்டங்களுக்கும் தயாராக இருங்கள்” என்று கூறினார்.

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

தமிழகத்தில் 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. திமுக சார்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், அதிமுக சார்பில் சி.வி. சண்முகம், தர்மர், காங்கிரஸ் கட்சி சார்பில் ப. சிதம்பரம் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இத்தேர்தலுக்கு மனு தாக்கல் செய்துள்ள சுயேச்சை வேட்பாளர்களை எம்.எல்.ஏக்கள் யாரும் முன்மொழியாததால் அவர்களின் மனுக்கள் ஏற்கப்படாது. எனவே, மேற்கண்ட 6 பேரும் ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

பெரியார் பல்கலை. தொலைதூர படிப்புகள் செல்லாது: யுஜிசி அறிவிப்பு

பல்கலைக்கழக மானியக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டம் மற்றும் ஆன்லைன் வழியிலான கல்வித் திட்டங்களுக்கு 2020ஆம் ஆண்டு வரை அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு பல்கலைக்கழக மானியக் குழுவின் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த கல்வித் திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இது முற்றிலும் விதிமீறல்.

அடுத்த இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு இந்த கல்வித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. எனவே, பெரியார் பல்கலையில் தொலைதூர கல்வி திட்டம் மற்றும் ஆன்-லைன் வழிக் கல்வித் திட்டங்களில் மாணவர்கள் சேர வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...