No menu items!

மிஸ் ரகசியா – வீரமணியை சந்திக்காத பேரறிவாளன்

மிஸ் ரகசியா – வீரமணியை சந்திக்காத பேரறிவாளன்

முதல்வரின் தஞ்சை விசிட்டை கவர் செய்யப் போயிருந்ததால் இந்த வாரத்துக்கான செய்திகளை தனித்தனி தலைப்பிட்டு வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார் ரகசியா.

வீரமணியை பேரறிவாளன் சந்திக்காதது ஏன்?

பேரறிவாளன், முதல்வரை கட்டிப்பிடித்தது முதல் தினகரன் நெடுமாறன் என்று எல்லோரிடமும் போய் பார்த்து நன்றி சொன்னார். ஆனால், திக தலைவர் வீரமணியை மட்டும் சந்திக்கச் செல்லவில்லை. பேரறிவாளனை வீரமணியின் அலுவலகத்தில்தான் சிபிஐ பிடித்து அழைத்துச் சென்றது. அப்போது தனக்கு ஏதாவது வில்லங்கம் வந்துவிடுமோ என்று வீரமணி உதவிக்கு வராததுதான் இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

உதயநிதி தீர்மான ரகசியம்

‘அமைச்சரவையில் கூட்டல் கழித்தல் சீக்கிரம் இருக்கு; எனவே, உதயநிதியை அமைச்சராக்க தீர்மானம் போடலாம்’ என்று கல்வி அமைச்சர் சொல்ல, திருச்சியில் உடன்பிறப்புகள் அதைச் செயல்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இது மற்ற சில மாவட்டங்களிலும் பரவத் தொடங்கியது. இது உதயநிதியை கொஞ்சம் அப்செட் ஆக்கி இருக்கிறதாம். எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருக்கும் நேரத்தில் அப்பாவுக்கு தர்ம சங்கடம் கொடுக்கக் கூடாதே என்று நினைத்திருக்கிறார் உதயநிதி. அதனால்தான் தனது அமைச்சர் பதவிக்காக மேற்கொண்டு எந்த மாவட்டத்திலும் தீர்மானம் போடவேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேநேரத்தில் இப்போது இல்லாவிட்டாலும், ‘மாமன்னன்’ படத்தின் வேலைகள் முடிந்ததும் நிச்சயம் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அறிவாலயத்தில் பேசிக்கொள்கிறார்கள். அவருக்கு பதவி வழங்கும்போது டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி. ராஜாவுக்கும் பதவி நிச்சயம் என்றும், பெரிய கருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பதவிக்கு ஆபத்து வரலாம் என்றும் அறிவாலயத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

தலைமையின் அறிவுரை

இந்த முறை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கொஞ்சம் டென்ஷனாகத்தான் பேசியுள்ளார் சூரிய கட்சித் தலைவர். “உள்கட்சி தேர்தல் உள்குத்து விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். இதுபற்றிய எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் தொண்டர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் இல்லை என்றால் நானும் இல்லை நீங்களும் இல்லை கட்சியும் இல்லை” என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறாராம் தலைவர். மேலும், இனிமேலாவது தொண்டர்கள் கேட்கும் சிபாரிசுகளை செய்துகொடுக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளாராம்.

அழகிரிக்கு ஆறுதல்

“உதய்பூரில் நடந்த சிந்தனை அமர்வு கூட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி என்று தீர்மானமெல்லாம் போட்டீர்கள். ஆனால், ராஜ்யசபா எம்பி பதவியை ப. சிதம்பரத்துக்கு ஒதுக்கியுள்ளீர்களே.. கட்சிகாக உழைத்ததற்கு இதுதான் பலனா. சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம் எல் ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டிய எனக்கு இதுதான் பரிசா?” என்று சோனியா காந்தியிடம் உருக்கமாகக் கேட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைர் அழகிரி.

இதைக் கேட்ட சோனியா காந்தி, “நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனா பாருங்க இந்த தாமரை கட்சி அப்பா – மகன் இருவரையும் வெச்சி செய்யறாங்க.  இப்ப நாம அவங்களுக்கு ஆதரவாய் இருக்க வேண்டாமா? அடுத்த தடவை பார்த்துக்கலாம்” என்று முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே பல பெரிய தலைகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து காணாமல் போய்க்கொண்டு இருக்க, அழகிரியும் அந்த ரூட்டை பிடித்துவிடக்கூடாதே என்பதால் அவரை கன்வீன்ஸ் செய்வதில் அதிக அக்கறை காட்டியுள்ளார் சோனியா காந்தி.

பாஜகவினரின் கோபமும் அண்ணாமலையின் பதிலும்

கருணாநிதி சிலையை வெங்கையா நாயுடு திறந்துவைத்ததால் ஒருசில கூட்டணி கட்சித் தலைவர்கள் அதைப் புறக்கணித்தனர். ஆனால், இதுபற்றி அறிவாலயம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதேநேரத்தில் கருணாநிதி சிலையின் கீழே பொறிக்கப்பட்ட 5 பொன்மொழிகளில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்ற பொன்மொழியும் உள்ளது. “இந்தியை உசத்தி பேசும் கட்சியின் தேசிய தலைவர் இப்படி ஒரு வாசகம் உள்ள சிலையை திறக்கலாமா” என்று கமலாலயத்தில் கொஞ்சம் கசமுசா. ஆனால், இதெல்லாம் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தப்பட்டது; கண்டுக்காதீங்க என்றாராம் ஐபிஎஸ்

பாட்டாளி மாடல்

2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்று தலைவராக பதவியேற்றபோது முழங்கிய அன்புமணி ராமதாஸ், கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து வருகிறார். “2026-ல் நமது ஆட்சி அமையும் என்ற பிரச்சாரத்தை இப்போது முதலே செய்யவேண்டும். நான் உட்பட நாம் அனைவரும் ஒவ்வொரு கிராமமாக போகவேண்டும். கிராமத்து வீட்டில் தங்க வேண்டும். குழந்தைகளுடன் விளையாட வேண்டும். பெரியவர்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று கட்சியின் பிரச்சார பிளானைப் பற்றி விளக்கி வருகிறார்.

தனது திட்டத்துக்கு ‘பாட்டாளி மாடல்’ என்று பெயரும் வைத்துள்ளார். ஏற்கெனவே குஜராத் மாடல், திராவிட மாடல் என்று இருக்க இப்போது புதிதாக பாட்டாளி மாடல் வந்து தமிழக அரசியலை களைகட்ட வைத்துள்ளது.

அப்செட்டில் இடதுசாரிகள்

ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா முதல்வரை சந்திக்க இருந்தார். ஆனால், இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் திமுக அவசரமாக காங்கிரஸுக்கு ஒரு சீட் ஒதுக்கி மீதியுள்ள 3 சீட்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் திமுக மீது இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

மேயர்களுக்கு உத்தரவு

மாநகராட்சிகளில் உள்ள சின்னச் சின்ன வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும். டெண்டர் விடுவது போன்ற வேலைகளை மேலிடம் பார்த்துக்கொள்ளும். இதெல்லாம் மேயர் அதிகாரத்தில் இல்லை என்பதை மாவட்ட அமைச்சர்கள் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனியாக மேலிடம் சொல்லி விட்டதாம்

அண்ணாமலைக்கு எதிர்ப்பு

பத்திரிகையாளரை அவமதித்தது உள்ளிட்ட அண்ணாமலையின் சில நடவடிக்கைகள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லையாம். அவருக்கு எதிராக கட்சித் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள்.

அலர்ட் அதிமுக

பாஜகவை இப்படியே வளரவிட்டால் நமக்கு ஆபத்து. இப்போதாவது அவர்களை கழற்றிவிட்டு நாம் போராட்ட பாதையை முன்னெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் அதிமுக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார் பொன்னையன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...