No menu items!

சிகரெட் – புகையை மறந்தவனின் கடிதம்

சிகரெட் – புகையை மறந்தவனின் கடிதம்

ஹலோ சார், மேடம்,

நீங்க சிகரெட் பிடிக்கறவரா? அதை விடணும்னு நினைக்கிறவரா? அதை விட முடியாம சனியன் மாதிரி கூட வருதேனு நினைக்கிறவரா? என் அனுபவத்தைப் படியுங்கள். இன்னைக்கு World No-Tobacco Day, இதை கண்டிப்பா படிக்க வேண்டிய நாள்.

சிகரெட் எனக்கு அறிமுகமானது பத்தாவது படிக்கும்போது. அதுக்கு காரணம் திலீப்னு என் சீனியர். 12வது படிச்சிக்கிட்டு இருந்தான். ஸ்கூலுக்கு வரும்போதே சைக்கிள்ல தம் அடிச்சிக்கிட்டுதான் வருவான். ஸ்கூல் பக்கத்துல வர வரைக்கும் தம்மடிப்பான். ஸ்டாண்ட்ல சைக்கிளை நிறுத்திட்டு பாக்கெட்டை எடுத்து வாயில போட்டுக்கிட்டு கிளாஸ்க்கு போவான். வாத்தியாருங்க எல்லோருக்கும் தெரியும். ஆனா யாரும் அவனை கேக்க மாட்டாங்க. அவங்க அப்பா பிசினஸ் மேன். பணக்காரன். சிம்பிளா தண்ணி தெளிச்சு விட்ட பையன்.

சில சமயம் அவன் கூட சில பொண்ணுங்களும் சைக்கிளை ஓட்டிக்கிட்டு வருவாங்க. ஸ்கூல் வாசல்ல ‘பை’ சொல்லிட்டு கிளம்புவான்.

சில நாள் அவன் கார்ல வந்து இறங்குவான். இறங்கினதும் ஸ்கூலுக்கு போகமாட்டான். பக்கத்துல இருக்கிற பெட்டிக் கடைக்குதான் போவான். மறைஞ்சு நின்னுலாம் தம்மடிக்க மாட்டான். கடை வாசல்ல நின்னு ஸ்டைலா தம்மடிப்பான். அவனைப் பாத்தாலே எங்களுக்குலா ஆச்சர்யமா இருக்கும். எல்லா பசங்களுக்கும் அவன் ஒரு ஹீரோ மாதிரி. கரெக்ட்…அவனை மாதிரி ஆகணும்னுதான் 10வதுல தம்மடிக்க ஆரம்பிச்சேன். முதல் தடவை அடிக்கும்போது இருமல்லாம் வரல. வாயெல்லாம் நாத்தம்தான் வந்துச்சு. ஆனாலும் கடைல சிகரெட் வாங்கி அடிச்சு நிக்கும்போது ஒரு பெரிய மனுஷ தோரணையைத் தந்தது. அது பிடிச்சிருந்தது. சிகரெட்டும் என்னை பிடிச்சிக்கிட்டது.

வீட்டுக்குத் தெரியாம ஆரம்பிச்சது, வீட்டுக்கு தெரிஞ்சு திட்டு வாங்கியும் தொடர்ந்துச்சு. காலேஜ் படிக்கும்போதுதான் சிகரெட் அதிகமாச்சு. கைகளில் சிகரெட் இன்னொரு விரலா மாறிடுச்சு. அதுவும் தன்னோட வேலையைக் காட்ட ஆரம்பிச்சது.

ஒரு நாள் இரவு இருமல் எடுக்க ஆரம்பித்தது. லேசான ஜூரம் இருந்தது. மறுநாள் அதிகமானது. மூச்சிறைத்தது. மாலை டாக்டரிடம் போனேன். மாத்திரை கொடுத்தார். வீசிங் மாதிரி இருக்குனார். ரெண்டு நாள் மாத்திரை சாப்பிட்டும் சரியாகல. எப்படி சரியாகும்? டாக்டரிடம் சிகரெட் பிடிக்காமல் போய்விட்டு வெளியில் வந்ததும் தொண்டை எரிச்சலையும் பொருட்படுத்தாமல் ஹால்ஸ் போட்டுக்கொண்டு ஒன்றுக்கு இரண்டாக சிகரெட் புகைத்தால் எப்படி சரியாகும்?

மூன்று நாள் கழித்து மீண்டும் டாக்டர். எக்ஸ்ரே எடுக்க சொன்னார். எக்ஸ்ரேயில் நுரையீரலில் கறுப்பு படர்ந்திருந்தது.

‘சிகரெட் பிடிப்பியா?’ என்றார் டாக்டர்.
‘எப்பவாது’ பொய் சொன்னேன்.

‘எக்ஸ் ரே அப்படி காட்டலையே. பாரு கறுப்பா இருக்கு’னாரு.

‘சிகரெட்டை உடனே விடு. இல்லனா லங்ஸ் தாங்காது. சீக்கிரம் போய் சேர்ந்துடுவே’ என்று கடுமையாக சொன்னார்.

உடனே முடிவெடுத்தேன், இந்த டாக்டரிடம் போகக் கூடாது என்று.

ஆனாலும் லேசாய் பயம் இருந்தது.

விட்டுத்தான் பார்ப்போமே என்று தோன்றியது. ஒருநாள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துப் பார்த்தேன். மாலையில் நண்பர்கள் வந்தார்கள். உடம்பு சரியில்லை என்று தவிர்த்தேன். அவர்கள் விடவில்லை. மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிவிட்டுப் போகலாம் என்றார்கள். தவிர்க்க இயலவில்லை. மொட்டை மாடியில் ஒருவன் சிகரெட்டை பற்ற வைக்க, அதன் வாசம் இழுத்தது. ஆனால் மனதை இறுக்கமாக வைத்துக் கொண்டேன். நோ.

ஒருநாள் முழுவதும் சிகரெட் இல்லாமல் கழிந்தது. இருமல் குறைந்தது. மீண்டும் கல்லூரி. சிகரெட் பிடிக்க மாட்டேன் என்று சொல்வதே ஸ்டைலாக இருந்தது. நண்பர்கள் நீட்டும்போது விட்டுட்டேன் மச்சி என்று பெருமையாக சொன்னேன்.

ஆனால் இந்தப் பெருமையெல்லாம் ஒரு வாரம்தான். மீண்டும் ஒரு மாலை நேரத்தில் கல்லூரி ஹாஸ்டலில் பாட்டிலைத் திறந்த போது ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். அதன் பிறகு சிகரெட்டுடன் வாழ்க்கை தொடர்ந்தது.

அதன்பிறகு பலமுறை சிகரெட்டை விட முயன்றிருக்கிறேன். ஒரு வாரம், ஒரு மாதம்… 50 நாள்…இப்படி…ஆனால் முழுமையாக விட்டதேயில்லை.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, பிறந்தநாள், அம்மா பிறந்த நாள், தங்கை பிறந்த நாள்…இப்படி பல நாள்கள் சிகரெட் விடுவதின் துவக்க நாட்களாக இருக்கும்.

சிகரெட்டை நிறுத்திய முதல் நாள் வாய் நமநமவென்று இருக்கும். கால்கள் கடையை நோக்கி இழுக்கும். முக்கியமாய் டீ குடித்தப் பிறகு, உணவு உண்ட பிறகு..சிகரெட் நினைப்பு வந்து தாக்கும்.

இரண்டாம் நாள் இந்த எண்ணங்கள் தீவிரமாகும். மூன்றாம் நாள் சிகரெட் பிடிக்காமல் வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம் என்ற எண்ணம் தலைதூக்கும். சிகரெட் பிடித்து பல ஆண்டுகள் வாழ்ந்த உறவுக்காரர்கள், பிரபலங்கள் முகங்கள் நினைவுக்கு வரும். நான்காம் நாள் வாழ்க்கையை அனுபவி, வாழ்வது கொஞ்ச நாள் பிடித்த மாதிரி வாழ் போன்ற வாக்கியங்கள் மூளையை அழுத்தும். சிகரெட்டை நோக்கி தள்ளும். இப்படி ஒவ்வொரு நாளும் அழுத்தங்களும் இழுப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

ஒருவாரம் கடந்துவிட்டால் உடல் பலவீனமானது போல் ஒரு உணர்வு வரும். சிகரெட் பிடித்தால்தான் பழைய எனர்ஜி கிடைக்கும் என்ற எண்ணம் பலப்படும். கைகள் நடுங்குவது போல் தோன்றும்.

’மச்சி, சிகரெட் பிடிக்காமல் இருந்து என்னத்தை சாதிக்கப் போற…வா ஒரு தம்மைப் போட்டு ஃப்ரெஷ் ஆகு’ என்ற நண்பனின் இழுப்பில் சிகரெட் நிறுத்திய முடிவு உடையும்.

இப்படி நாட்கள் அளவில் விட்டுக் கொண்டிருந்த நான் ஒரு முறை மூன்றாண்டுகள் சிகரெட்டை விட்டிருந்தேன். ஆனால் மூன்று ஆண்டுகள் மட்டுமே. அலுவலக மாற்றம் காரணமாக டெல்லியில் ஒரு வருடம் தனியே இருக்க வேண்டியிருந்தது. நண்பர்கள் அதிகம் கிடையாது. தனி அபார்ட்மெண்ட். தனிமை. இரவு பக்கத்து ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும்போது சிகரெட் ஆசை தோன்றியது. மூன்றாண்டு விரதம் முடிந்தது. தினம் ஒரு பாக்கெட் சிகரெட் காலியானது. மது கலந்த மாலைகளில் எண்ணிக்கை கூடியது.

அதன்பிறகு இரண்டாண்டுகள் தொடர் சிகரெட். ஆனாலும் தினம் தினம் சிகரெட்டை விட வேண்டும் என்ற யோசனை தோன்றிக் கொண்டே இருக்கும்.

ஒருநாள் காலை நண்பன் ஒருவன் சீரியசாக இருப்பதாக செய்தி வந்தது. மருத்துவமனைக்கு சென்றேன். ஐசியுவில் கிடத்தியிருந்தார்கள். ரத்த அழுத்தம். மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அழுத்தம் அதிகரித்து நினைவு தப்பியிருக்கிறது.

அவன் மனைவி தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள். மருத்துவர்கள் யாரும் தைரியம் தரவில்லை. இரண்டு மூன்று நாள்கள் பார்ப்போம் என்று பீதியைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள். மனைவியின் அழுகை. அம்மாவைப் பார்த்து எட்டு வயது மகனின் தேம்பல்கள். அந்த நண்பன் தொடர் சிகரெட் புகைப்பவன். வீட்டிலும் புகைப்பான். புகை இல்லாமல் இருக்க இயலாது. இப்போது நினைவின்றி படுத்திருக்கிறான்.

ஆஸ்பத்திரிக்கு எதிரே பெட்டிக் கடைகள் இருந்தன. சிகரெட்டும் இருந்தது. ஆனால் பிடிக்கும் எண்ணம் எனக்கு வரவில்லை. சிகரெட் இனி வேண்டாம் என்று நினைத்தேன். கிட்டத்தட்ட 11 வருடங்கள் கடந்துவிட்டன. இன்று வரை புகைக்கவில்லை.

சிகரெட்டை விட சில குறிப்புகள்:

சிகரெட்டை விடுவதற்கு நாள் நட்சத்திரம் பார்க்க கூடாது. அந்த நொடியில் எடுக்கப்படும் முடிவாக இருக்க வேண்டும்.

சிகரெட்டை விட்ட நாள்களை எண்ணிக் கொண்டிருக்க கூடாது. ஒரு வாரம், பத்து நாள் என்று காலண்டரைப் பார்க்கக் கூடாது.

சிகரெட் புகைக்கும் நண்பர்களுடன் சுற்றுவதை முதல் பத்து நாள்கள் தவிர்ப்பது நல்லது.

பத்து நாள்கள் புகைப்பதை நிறுத்தியதும் உடலில் மாற்றங்கள் ஏற்படும். தலைவலிக்கும். இருமல் வரலாம். சோர்வு அதிகரிப்பது போன்ற உணர்வு வரும். இவையெல்லாம் மாயமான்கள். புறக்கணிக்க வேண்டும்.

ஒரு மாதம் கடந்ததும் நண்பர்கள் உசுப்பேத்துவார்கள். ஒரு மாசம் விட்டதுக்கு பார்ட்டி என்பார்கள். ஒரு பியர் உள்ளே போனதும் சிகரெட்டை நீட்டுவார்கள். நாளையிலிருந்து மீண்டும் விரதத்தை நடத்து என்பார்கள். அசைந்து கொடுத்துவிடாதீர்கள்.

இரண்டு மாதங்கள் கழித்ததும் நன்றாக பசிக்கும். நிறைய சாப்பிடலாம். உடல் பலம் பெறுவது போல் தோன்றும். மிக முக்கியமாய் மாடிப்படி ஏறும்போது மூச்சிறைக்காது.

ஆறு மாதங்கள் போனாலும் சிகரெட் ஆசை போகாமல்தான் இருக்கும். நண்பர்கள் புகைக்குபோது புகைக்காமல் பழகியதால் இனி தனிமை உங்களுக்கு எதிரியாக மாறும். தனித்து இருக்கும்போது ஒரு தம் போடலாமா என்ற உணர்வு வரும். மதிக்காதீர்கள்.

சிகரெட்டை விட்டாயிற்று என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இனி சிகரெட்டைத் தொட்டால் அசிங்கம் என்பது மனதில் பதிந்திருக்கும். ஆனாலும் சிகரெட் உங்களை உந்தும், யாருக்கும் தெரியாமல் ஒதுக்குப் புறமாய் நின்று ஒரு இழு இழுத்துவிடு என்று ஆசைக் காட்டும். ஆனால் அசராதீர்கள். இந்தக் காலக் கட்டத்தில்தான் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தனியே மறைத்து புகைத்து பழக்கப்படுத்திக் கொண்டால் உங்களால் ஜென்மத்துக்கும் சிகரெட்டை விட முடியாது.

இரண்டு வருடங்கள் ஓடினாலும் மனதிலும் உடலிலும் சிகரெட் ஈர்ப்பு இருந்துக் கொண்டே இருக்குமாம். சுமார் 7 வருடங்கள் சிகரெட்டை விடுபவர்கள்தாம் முழுமையாக சிகரெட்டை புறக்கணித்தவர்கள் என்று ஆய்வு சொல்கிறது.

சிகரெட்டை விட்டதால் உடலில் ஏற்படும் நல் மாற்றங்களும் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும். கன்னத்தின் டொக்கு மறைந்து, உதட்டின் கறுப்பு குறைந்து முகம் மலரத் தொடங்கும். கண்ணாடியைப் பார்த்தால் உங்களுக்கே உங்களைப் பிடிக்கும்.

சிகரெட்டைப் பிடித்து தெருமுனையில் நண்பர்களுடன் நிற்பது கெத்து அல்ல, சிகரெட் பிடிக்கும் நண்பர்களுடன் சிகரெட் பிடிக்காமல் நிற்பதுதான் கெத்து என்பதை உணர்வீர்கள்.

சரி, ஐசியுவில் இருந்த நண்பர் எப்படியிருக்கிறார் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

அந்த நண்பர் இப்போது இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறார் சிகரெட் இல்லாமல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...