No menu items!

நியூஸ் அப்டேட்: பாஜகவில் சசிகலா இணைந்தால் வரவேற்போம் –  நயினார் நாகேந்திரன்

நியூஸ் அப்டேட்: பாஜகவில் சசிகலா இணைந்தால் வரவேற்போம் –  நயினார் நாகேந்திரன்

‘பாஜகவுக்கு சசிகலா வந்தால் வரவேற்போம்” என்று பாஜக தமிழக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சசிகலாவை சேர்த்துவிட்டால் அதிமுக இன்னும் வலுவாக இருக்கும். பாஜகவுக்கு அவர் வந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அவரது வருகை பாஜகவினருக்கு உறுதுணையாக இருக்கும். அதிமுகவில் அவர் இல்லையென்றால், பாஜகவில் இணைவதற்கான முயற்சிகளை  நாங்கள் முன்னெடுப்போம்” என்றார்.

விஐடியில் 163 பேருக்கு கரோனா தொற்று

சென்னையில் உள்ள விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரோனா பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கேளம்பாக்கத்தில் விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளது. கல்வி நிறுவன வளாகத்தை நேரில் ஆய்வு செய்தோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம். உணவு அரங்கு , விடுதி அறை என அனைத்திலும பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு கரோனா பாதித்தவர்களில்  99% பெரை ஓமிக்ரான் பிஏ2 வகை தான் தாக்கியுள்ளது. பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அஞ்சப்போவது இல்லை: காங்கிரஸ்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், “அமலாகக்கத் துறையின் சம்மனுக்கு அஞ்சப்போவது இல்லை. பாஜகவின் இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அடி பணிய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மனு சங்வி, “போலியாக புனையப்பட்ட வழக்குகள் மூலம் கோழைத்தனமான சதிச்செயலில் வென்று விட முடியாது என்பதை மோடி அரசு உணர வேண்டும். இத்தகைய வழக்குகள் மூலம் சோனியா காந்தி, ராகுலை பயமுறுத்த முடியாது” என்றார்.

தென்மேற்கு பருவ மழை 103 சதவீதமாக இருக்கும்;  இந்திய வானிலை மையம் தகவல்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை 103 சதவீதமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யு சூசய் மொகபத்ரா செய்தியாளர்களிடம் பேசும்போது, “தற்போதைய தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) சராசரி மழைப் பொழிவு 103 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் பருவ மழை பொழிவு 99 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், தற்போது கூடுதல் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யும்” என்று கூறினார்.

பாடகர் கேகே உடலில் காயங்கள்: போலீஸார் விசாரணை

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே), மே 31-ஆம் தேதியன்று, மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் கேகே, அழைத்துச் செல்லப்பட்ட தனியார் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் பேசும்போது, அவருடைய முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் அவை விடுதி அறையில் கீழே விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார். மேலும், அந்த அதிகாரி, “கேகே இரவு பத்து மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்”, என்றார்.

இதைத்தொடர்ந்து கேகேயின் மரணம் இயற்கைக்கு மாறான மரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் கொல்கத்தா காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...