No menu items!

அதிமுக Vs பாஜக – பொன்னையன் கருத்தும் அரசியலும்

அதிமுக Vs பாஜக – பொன்னையன் கருத்தும் அரசியலும்

அதிமுகவை தள்ளிவிட்டு அந்த இடத்துக்கு பாஜக வர முயல்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியிருக்கிறார். பாஜகவை அதிமுக விமர்சிக்காத நிலையில் திடீரென்று வந்துள்ள பொன்னையனின் கருத்து அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

”பாஜகவின் வளர்ச்சி அதிமுகவுக்கும் நல்லதல்ல, தமிழ் நாட்டுக்கும், திராவிட சித்தாந்தத்துக்கும் நல்லதல்ல’ என்றும் அதிரடியாக குறிப்பிட்டிருக்கிறார். அதிமுகவின் அம்மா பேரவையின் நிர்வாகிகள் கூட்டத்தில் இப்படி அதிரடியான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் பொன்னையன்.

பாஜக குறித்து இதற்கு முன்பும் அதிமுகவிலிருந்து விமர்சனங்கள் வந்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு காரணம் பாஜகவுடனான கூட்டணிதான், அதனால் சிறுபான்மையினர் அதிமுகவுக்கு வாக்குகளை அளிக்கவில்லை என்று அப்போது அதிமுகவில் இருந்த அன்வர் ராஜா தெரிவித்திருந்தார். பாஜகவுடன் கூட்டணி என்பது அதிமுகவுக்கு தோல்வியைத் தரும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அதிமுக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தயாரிப்பில் இருந்த போதும் பாஜக கூட்டணி குறித்து அதிமுகவினர் சந்தேகங்களை கிளப்பிக் கொண்டே இருந்தனர்.

திமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது இனி தமிழ் நாட்டு அரசியல் திமுகவுக்கும் பாஜகவுக்கும் என்று கூற அதிமுகவினர் அதிருப்தி அடைந்தனர். ஆனால் பாஜகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகிறது என்பதை வி.பி.துரைசாமியின் கருத்து கோடிட்டு காட்டியது.

வி.பி.துரைசாமியின் அந்தக் கருத்துக்கு அந்த சமயத்தில் எதிர்கருத்து கூற கூட அதிமுகவில் அப்போது யாருக்கும் துணிவில்லை.

‘வி.பி.துரைசாமி சொந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார். பாஜகவின் கருத்தல்ல அது’ என்று சப்பைக்கட்டு கட்டினார் ஜெயக்குமார்.

ஆனால் அதிமுகவினரிடம் பாஜகவின் மேல் கோபம் மட்டும் தொடர்ந்தது.
பாஜகவை நேரடியாக விமர்சிக்க முடியாத, விரும்பாத அதிமுக தனது கூட்டங்களில் மறைமுகமாக விமர்சித்து வந்தது. 2020ம் டிசம்பரில் ராயப்பேட்டையில் நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தேசியக் கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

‘ஒரு வரலாற்று உண்மையைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்திய அரசியல் வரலாறும், தமிழக அரசியல் வரலாறும் மாறுபட்டவை. இது பெரியார் பிறந்த மண். 1967-ல் இந்தியா முழுவதும் தேசியக் கட்சிகள் ஆட்சி செய்த நேரம்.

திமுக வெற்றி பெற்ற பின்னர் கடந்த 50 ஆண்டுகாலமாக எந்த ஒரு தேசியக் கட்சியும் தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவுக்கு திராவிட இயக்கம்தான் இங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இதை இப்பொழுது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைகிற சில அரசியல் கருங்காலிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தைச் சீரழித்துவிட்டது என்று சில கருங்காலிகள் சொல்கிறார்கள். சில தேசியக் கட்சிகள் சொல்கின்றன. சில சந்தர்ப்பவாதிகள் சொல்கிறார்கள். பெரியார் காலத்திலிருந்து இந்த இயக்கத்தை ஒழித்துக்கட்ட முயன்று வரும் கூட்டம், இந்தத் தலைவர்களை வீழ்த்தவேண்டும் என ஒரு சமூகம், ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது.’ என்று கடுமையாக தேசியக் கட்சிகளை விமர்சித்தார். ஆனால் அவர் விமர்சித்தது தேசியக் கட்சிகள் என்று பொதுவாக அல்ல அந்த உரை பாஜகவுக்குதான் என்று அரசியல் ஆர்வலர்களுக்குப் புரியும்.

இப்படி தொடர்ந்த அதிமுக – பாஜக உறவு, சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வியில் மேலும் மோசமடைந்தது. தேர்தல் தோல்விக்கு காரணம் பாஜகவுடனான கூட்டணிதான் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது சர்ச்சையானது.

உடனே ட்விட்டரில் பாஜகவுக்கு ஆதரவான கருத்தை பதிவிட்டார் ஓபிஎஸ். அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டது இதுதான் ’பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் “அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும்”. இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை’. ஜூலை 7ஆம் தேதி இந்த டிவிட்டர் பதிவு வந்தது. ஆனால் பிப்ரவரி 2022ல் நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி இல்லை. அதிமுக கூட்டணியிலிருந்த அனைத்துக் கட்சிகளும் தனித்து நின்றன.

இப்போது இரண்டு மாதங்களாக தமிழ் நாட்டில் பாஜக பல போராட்டங்களை முன்னெத்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு எதிராக கடுமையான கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களையும் கூறி வருகிறார். பாஜகவின் இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க் கட்சி என்ற பிம்பத்தை கட்டமைக்கப்படுகிறது.

பிரதான எதிர்க் கட்சியாக இப்போது இருக்கும் அதிமுக பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது கட்சியினரின் வருத்தம். எரிச்சல். கோபம். ஆனால் இந்த உணர்வுகளை வெளிக்காட்ட முடியாத அச்சமும் அதிமுகவிடம் இருக்கிறது.


ஆளும் திமுகவை கடுமையாக எதிர்க்கவும் அச்சம். இதுவரை 6 முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றிருக்கிறது.

இப்படி திமுக மீதும் அச்சம், பாஜக மீதும் அச்சம் என்ற நிலையில் கட்சியை எப்படி வளர்க்க முடியும் என்று அதிமுக முன்னணியினர் கருதுகிறார்கள்.

பொன்னையன் கருத்துக்கு எதிர்வினையாற்றும் பாஜகவினர் கருத்துக்களையும் முக்கியமாய் கவனிக்க வேண்டியுள்ளது.

சட்டப் பேரவையில் அதிமுக பிரதான எதிர்க் கட்சியாக இருந்தாலும் களத்தில் பாஜகதான் பிரதான எதிர்க் கட்சியாக செயல்படுகிறது என்கிறார் பாஜகவின் கரு.நாகராஜன்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் ’அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். சசிகலா இணைந்தால் அதிமுக வலுவடையும்’ என்று கூறிவிட்டு, ‘சசிகலா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்’ என்று சசிகலா ஆதரவு கருத்துக்களை குறிப்பிட்டிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் சசிகலா பெயரைக் குறிப்பிடாமல் சின்னம்மா என்றே குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது.

கூட்டணிக் கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடுவதாகதான் நயினார் நாகேந்திரனின் கருத்தாகதான் இதைதான் கருத வேண்டும். ஆனாலும் இதுவரை அதிமுகவிடமிருந்து இதற்கு எதிர்வினை வரவில்லை. பொன்னையன் கருத்துக்கு பாஜகவினர் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதிலளிக்கவில்லை என்பது அதிமுகவின் அச்சத்தைத்தான் காட்டுகிறது.

இந்த அச்சமும் பதற்றமும் இருக்கும் வரை அதிமுகவினால் மீண்டும் இழந்த இடத்தை பிடிக்க இயலாது என்பது அரசியல் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...