No menu items!

நியூஸ் அப்டேட்: மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் – முதல்வர் தொடங்கி வைத்தார்

நியூஸ் அப்டேட்: மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் – முதல்வர் தொடங்கி வைத்தார்

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “புதுமைப் பெண் திட்டத்தால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும், பாலின சமத்துவம் ஏற்படும், குழந்தை திருமணங்கள் குறையும். பெண்கள் அடங்கிபோகத் தேவையில்லை. ரூ.1,000 இலவசமாக வழங்கப்படவில்லை. அது அரசின் கடமை. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை கொண்ட பெண்களே… கல்வியின் துணை கொண்டு உலகை வென்றிட துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன்” என்று கூறினார்.

இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் ‘புதுமைப் பெண்’ – அரவிந்த் கெஜ்ரிவால்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் தமிழ்நாடு அரசின் ‘புதுமைப்பெண்’ திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம்தான் புதுமைப் பெண் திட்டம்.  திறமை இருந்தும், வறுமை காரணமாக மாணவியர் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. புதுமைப்பெண் திட்டம் இந்த இடைநிற்றலை தவிர்க்கும்.

இந்தியா முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்தா விட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே” என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

மகசேசே விருதை மறுத்தது ஏன்: ஷைலஜா டீச்சர் விளக்கம்

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாக பொதுசேவை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ஆசியாவின் நோபல் பரிசு என்று புகழப்படுவது உண்டு.

இந்த விருது, கொரோனாவை சிறப்பாக சமாளித்ததற்காக கேரள முன்னாள் சுகாதார அமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கே.கே. ஷைலஜாவுக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால், இதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதுபற்றி விளக்கம் அளித்துள்ள ஷைலஜா டீச்சர், “தனிப்பட்ட திறனுக்காக இதை நான் பெற விரும்பவில்லை. நான் செய்த சேவையெல்லாம் கூட்டு முயற்சி. அதைத் தனிப்பட்ட முறையில் நான் பெறுவது சரியாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.

ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர் ரமோன் மகசேசே என்பதால், அவரது பெயரால் வழங்கப்படுகிற விருதினை ஷைலஜா நிராகரித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார்.

புதிய கட்சியை அறிவித்தார் குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள குலாம் நபி ஆசாத், ஜம்மு சைனிக் காலனியில் நேற்று தனது ஆதரவாளர்களின் முதல் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், “எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியின் பெயர் மற்றும் கொடியை ஜம்மு காஷ்மீர் மக்கள் முடிவு செய்வர். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் கட்சிக்கு இந்திய பெயரை வைப்பேன். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, மாநில மக்களுக்கு நில உரிமை, வேலைவாய்ப்பு கிடைக்க செய்வதில் எனது கட்சி கவனம் செலுத்தும்” என்று கூறினார்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் சென்னையில் நடந்த லெஸ்பியன் திருமணம்

தமிழ்நாட்டில் மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சுபிக்ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும் வங்கதேசத்தைச் சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் மரபான முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில், சுபிக்ஷா தமிழ்நாட்டு முறைப்படி சேலை அணிந்து கொண்டும் டினா தாஸ் பைஜாமா அணிந்துகொண்டும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர். சுபிக்ஷாவின் குடும்ப முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது.

மதுரையிலிருந்து கத்தார் நாட்டுக்கும் அங்கிருந்து கனடாவிலுள்ள கல்கரிக்கும் இடம் பெயர்ந்தவர்கள் சுபிக்ஷாவின் குடும்பம். சுபிக்ஷாவின் தாய் பூர்ண புஷ்கலா, தற்போது கல்கரி நகரில் குழந்தைகளுக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.

டினா தாஸ், வங்கதேசத்தின் வடகிழக்கில் உள்ள மூல்விபசார் என்ற சிறிய நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவருடைய சகோதரி, திருமணமாகி கனடாவின் மான்ட்ரியல் நகரத்தில் வசித்து வந்தார். அவரோடு, கடந்த 2003ஆம் ஆண்டு தனது பெற்றோருடன் சென்று தங்கினார் டினா தாஸ். சிறு வயதிலிருந்து பெண்கள் மீது ஈர்ப்பு கொண்டிருந்தார் டினா தாஸ். இதை ஒரு நோயாகக் கருதிய அவருடைய பெற்றோர், 19 வயதில் ஆண் ஒருவரோடு திருமணம் செய்து வைத்தனர். நான்கு ஆண்டுகளில் அந்த உறவை முறித்துக் கொண்டவர், இப்போது சுபிக்ஷாவை திருமணம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...