No menu items!

நியூஸ் அப்டேட்: பெண்களுக்கு விரைவில் ரூ.1000 உரிமைத் தொகை – முதல்வர் ஸ்டாலின்

நியூஸ் அப்டேட்: பெண்களுக்கு விரைவில் ரூ.1000 உரிமைத் தொகை – முதல்வர் ஸ்டாலின்

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “சட்டமன்றத்தில் என்னென்ன உறுதி மொழி, வாக்குறுதி கொடுத்தோமோ அதை எல்லாம் நிறைவேற்றுவதுதான் தி.மு.க ஆட்சி. ஆனால், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்கிறார். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தில் கையெழுத்திட்டேன். அதன்மூலம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். இதுதவிர பால் விலை குறைப்பு என பலவற்றையும் நிறைவேற்றி உள்ளோம்.

பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும். நிதி நிலைமை சரியானவுடன் அந்த தொகையானது வழங்கப்படும். நான் கலைஞரின் மகன். சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின்” என்றார்.

நான் இயேசு அல்ல; அடிச்சீங்கன்னாதிருப்பி அடிப்பேன் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு பதிலளித்துத்தான் நான் ட்வீட் போட்டேன். தமிழக அரசியலில் சாபக்கேடு அண்ணாமலை என்று அவர் என்னை பேசவில்லையா? அரசியலில் இல்லாவிட்டால் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும். வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலை போட்டு படுத்து உறங்க முடியும். ஆனால், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனாலோ, முதலமைச்சராலோ வீட்டை விட்டு வெளியே வந்து இதனை செய்யமுடியுமா? என்னை அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் இயேசு அல்ல; என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன். நான் தன்மானமிக்க அரசியல்வாதி. கண்ணியமாக பேசித்தான் இந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. யாருடைய கை காலையும் பிடித்து நான் இந்த பதவிக்கு வரவில்லை. எனக்கு பதவியை கொடுத்துள்ளார்கள், பணியை செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி: 62 ஆம் ஆத்மி எம்.எல்..க்களில் 58 பேர் ஆதரவு

டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளை பாஜக செய்வதாகவும் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றசாட்டியிருந்தார். தொடர்ந்து நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை சட்டப்பேரவையில் நடத்துவதற்கு அர்விந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார்.  இதன்படி டில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 62 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் 58 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

மொத்தம் 70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பாஜகவுக்கு 8 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு வாக்களிப்பார்களா என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், எம்எல்ஏக்களில் 58 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு வந்த போலீஸ்காரரை கடித்து வைத்த பெண்: சென்னையில் கைது

சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் செல்வி. இவரும் திருவெற்றியூரைச் சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரும் காதலித்து வந்த நிலையில் 2 வருடங்களுக்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது அதில் இருந்து ரேவேந்திர குமாரிடம் செல்வி பணம் நகை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறி, ரேவேந்திர குமார் வீட்டில் இவர்களது திருமணத்தை நிறுத்திவிட்டார்கள். இதனால் செல்வி திருவெற்றியூரில் உள்ள காதலன் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்றும் இது போல் அவர் வந்தபோது ரேவேந்திர குமார் வீட்டில் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலீசாருடனும் செல்வி தகராறில் ஈடுபட்டதுடன் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து தாக்கி உள்ளார். மேலும், போலீஸ்காரர் கையை கடித்து வைத்துள்ளார். இதனையடுத்து செல்வியை கைது செய்த போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாகிஸ்தான் வெள்ளத்தால் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி 30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுனிசெப் அமைப்பு அறிக்கையில், “பாகிஸ்தானில் அண்மையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரால் பரவும் நோய்கள், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு, போதிய உணவின்றி ஊட்டச்சத்து குறைபாடு என பல்வேறு வழிகளிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 30 லட்சம் குழந்தைகளாவது மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தேவைப்படும் சூழலில் உள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...