No menu items!

கோப்ரா – சினிமா விமர்சனம்

கோப்ரா – சினிமா விமர்சனம்

பிரபல நாவல் எழுத்தாளர் லீ சைல்ட் உருவாக்கிய கதாபாத்திரம் ‘ஜேக் ரீச்சர்’. செம ஸ்மார்ட்டான ஒரு ஆக்‌ஷன் பர்ஸனாலிட்டி. ஒரு அசைன்மெண்ட் கொடுத்தால், எவ்வளவு பெரிய இடத்து கையாக இருந்தாலும் திட்டம் போட்டு பக்காவாக தூக்கிவிடுவார். இப்படியொரு தடாலடியான கேரக்டரான இந்த ஜேக் ரீச்சருக்கு பாஸ்போர்ட், பேங்க் அக்கெளண்ட், மொபைல் ஃபோன், இமெயில் உள்பட எதுவும் இருக்காது. அவ்வளவு ஏன் அவருக்கென்று சொந்தமாக ஒரு அட்ரஸ் கூட கிடையாது. இப்படி எல்லாவிதமான தொடர்பு எல்லைகளுக்கும் அப்பால் இருக்கிற ஒரு அதிரடி ஹேண்ட்சம் ஹீரோவாக இந்த ஜேக் ரீச்சரை எழுத்தாளர் லீ சைல்ட் உருவாக்கி இருப்பார்.

இப்பொது ஜேக் ரீச்சர் புராணம் எதற்கு? ‘கோப்ரா’ படத்திற்கும் இந்த ஜேக் ரீச்சருக்கும் என்ன சம்பந்தம்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில், ‘கோப்ரா’ படத்தைப் பார்க்கும் போதுதான் புரியும்.

ஜேக் ரீச்சர் கதாபாத்திரத்திற்கு மதியழகன் என்று பெயரை மாற்றி தமிழில் பேச வைத்து, ஹிந்தியில் வெளியான ‘தூம்-3’ படத்தின் இண்டர்வல் ப்ளாக்கை கொஞ்சம் டிங்கரிங் வேலைப் பார்த்து அலேக்காக தூக்கி வைத்து, காதல், மோதல், சென்டிமென்ட், ஆள்மாறாட்டம் என வெள்ளித்திரையில் அடித்து தொங்கவிட்ட கமர்ஷியல் சமாச்சாரங்களை கணிதம், கான்செப்ட்டோடு கலந்தடித்து ’கோப்ரா’வாக கொடுக்க ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

ஸ்காட்லாந்தில் அந்நாட்டு இளவரசர் அவரது திருமணத்தின் போது கொல்லப்படுகிறார். இந்தியாவில் ஒடிசா முதலமைச்சர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த இரண்டு கொலைகளுக்கும் ஒரேயொரு தொடர்பு இருக்கிறது. கணக்கில் கில்லாடியான ஒருத்தரால்தான் ஒவ்வொரு மணித்துளியையும், கணக்கிட்டு இப்படி பக்கவாக கொலை செய்ய முடியும் என்று ‘கோப்ரா’ தியரி மூலம் தெரிய வருகிறது. அந்த ஜீனியஸ் கொலைக்காரன் ஒரு தமிழன் என்ற அசத்தலான பில்டப்புடன் படம் தொடங்குகிறது.

யார் அந்த ஜீனியஸ் கொலைக்காரன் என்ற கண்டுப்பிடிக்க இண்டர்போலில் இருந்து இர்ஃபான் பதான் சென்னைக்கு பறந்து வருகிறார். அவர் கொலையாளியைக் கண்டுப்பிடித்தாரா என்பதே ‘கோப்ரா’.

நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் ஒன் மேன் ஷோவாக கலக்குவதற்கு நல்ல வாய்ப்பு. அதை நன்றாகவே புரிந்து கொண்டு கணக்கில் புலியாக வரும் விக்ரம் ஆக்‌ஷனிலும் பாய்ச்சல் காட்டியிருக்கிறார். விக்ரமிற்கு எட்டு கெட்டப்புகள். விக்ரமிற்கு கனகச்சிதமாக பொருந்துவதால் மூன்று ரசிக்க வைக்கின்றன. ப்ரோஸ்தெடிக் முகம் வளைந்து, மூக்கு நெளிந்து இருப்பதால் இதெல்லாம் தேவையா என்று மீதி கெட்டப்புகள் யோசிக்க வைக்கின்றன.

’கேஜிஎஃப் -2’ படத்தில் கிடைத்த பாப்புலாரிட்டியே போதும். கோப்ராவை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்துவிட்டார்கள் போல. ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவும் வாய்ப்பில்லை. காதலில் கவர்ந்திழுக்கும் காட்சிகள் இல்லை. ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் விக்ரமிற்கும் இடையே கெமிஸ்ட்ரிக்கு ஏகப்பட்ட வறட்சி.

கிரிக்கெட்டில் ஒரு ரவுண்ட் வந்த இர்ஃபான் பதானுக்கு, ஓபனிங் படத்திலேயே ’பெஸ்ட் ப்ளேயர் ஆஃப் த மூவி’ அவார்ட் கொடுக்கலாம். விளம்பர படங்களில் நடித்த அனுபவமா என்று தெரியவில்லை. நன்றாக நடித்திருக்கிறார். இனி நடிகராக இர்ஃபான் பதானை அடையாளம் காணலாம்.

வில்லனாக ரோஷன் மேத்யூஸ். ஸ்டைலாக இருக்கிறார். ஆனால் ஃபேஷன் ஷோவில் வரும் வில்லனை போலவே வந்து போகிறார்.

மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்த் இருவரின் நடிப்பிற்கும் கோப்ரா ஒரு காஸ்ட்லியான விசிட்டிங் கார்ட்.

கே.எஸ்.ரவிக்குமார் சுரேஷ் மேனன் இருவரையும் நடிக்கவிடாமல் சீக்கிரமே கொன்றுவிடுகிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ‘தீரா’, ‘தும்பி’ ஆகிய இரண்டு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் பின்னணி இசை ஹை டெசிபலில் காதுகளைப் பதம் பார்க்கிறது. கோப்ராவில் பழைய ஏ.ஆர். ரஹ்மான் என்று கேட்க வைத்திருக்கிறார்.

படத்தின் ப்ளஸ் புவனேஷ் ஸ்ரீனிவாசன், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும், திலீப் சுப்பராயனின் ஆக்‌ஷன் காட்சிகளும். ஆனால் எடிட்டர் ஜான் ஆப்ரஹாம் மனசாட்சியே இல்லாமல் படத்தை மூன்று மணிநேரம் மூன்று நிமிடம் ஓடவிட்டு படம் பார்க்கும் நம்மை சோதித்து இருப்பது மைனஸ்.

பிரம்மாண்டமான பில்டப். ஆனால் அதை தக்க வைத்து கொள்ளாத திரைக்கதை என்பதால் முதல் பாதியில் இருக்கும் சுவாரஸ்யமும், இண்டர்வல் ப்ளாக்கில் இருக்கும் விறுவிறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக டல்லடித்து போய்விடுகிறது.

சீறிப்பாய வேண்டிய அஜய் ஞானமுத்துவின் இந்த ‘கோப்ரா’ லாஜிக்கே இல்லாத காட்சிகள், ஹாலுசினேஷன் காட்சிகளில் இருக்கும் குழந்தைதனம், என்ன சொல்ல வந்தோம் என்பதில் இருக்கும் குழப்பம் ஆகியவற்றினால் மண் பாம்பு போல ஊர்கிறது.

‘கோப்ரா’ – பல் பிடுங்கிய பாம்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...