இலங்கையின் புதிய அதிபராக ரனில் விக்ரமாசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் பதவியில் இருந்து கோட்டபய ராஜபக்சே விலகினார். அவரைத் தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரனில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் ரனில் விக்ரமசிங்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தமுள்ள 225 எம்பிக்களில் அவருக்கு ஆதரவாக 134 எம்பிக்கள் வாக்களித்தனர். இதன்மூலம் 2024 நவம்பர் மாதம் வரை அவர் இலங்கையின் அதிபராக தொடரவுள்ளார்.
இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை
இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இந்த சூழலில், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், “இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், அங்கிருக்கும் இந்தியர்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொண்டு, அதன்பின்னர் தங்களது பயணம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளது.
தேவைப்பட்டால் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
தயிர், பனீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி, கட்ந்த 18-ம் தேதி முதல் 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து நாடாலுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தயிர், ரொட்டி, பனீர் போன்ற பொருட்களின் மீதான ஜிஎஸ்டி உயர்வை திரும்பப் பெறக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
வீட்டிலிருந்து வேலை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அதிகபட்சமாக ஓராண்டு காலம் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கலாம். 50 சதவீத ஊழியர்களுக்கு இந்த வசதியை அனுமதிக்கலாம் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வீட்டிலிருந்து பணி புரிவோருக்கு தேவையான இணைய வசதி, உபகரணஙகள் என அனைத்தையும் அந்தந்த நிறுவனங்கள்தான் செய்து தர வேண்டும். மேலும் அலுவலகம் சார்ந்த உபகரணம் எதையாவது வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நிர்வாகத்தின் அனுமதி தேவை.
ஒருவேளை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய அனுமதிக்க நிறுவனம் விரும்பினால் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக பட்டியலிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் ஜூலை 28-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணி வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளோடு அவர்களின் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர். மன அழுத்தம் இல்லாமல் நன்றாக ஆடுமாறு அப்போது வீரர்களுக்கு மோடி அறிவுரை கூறினார்.