No menu items!

ப்ரா முக்கியமா? தேர்வு முக்கியமா? கேரளாவில் நீட் அசிங்கம்

ப்ரா முக்கியமா? தேர்வு முக்கியமா? கேரளாவில் நீட் அசிங்கம்

நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்துதான் வரும். ஆனால் இந்த முறை கேரளாவில் இருந்து வந்திருக்கிறது. நீட் தேர்வை எழுதச் சென்ற பெண் தேர்வர்களின் உள்ளாடையை கழற்றச் சொன்ன விவகாரம் அம்மாநிலத்தில் பற்றி எரிகிறது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வின்போது அங்கு நடந்தது என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்..

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 543 நகரங்களில் 3,800-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக நடக்கும் நீட் தேர்வின்போது மாணவர்கள் முறைகேடுகள் செய்வதை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. முழுக்கை சட்டை போடக்கூடாது என்பதிலிருந்து பெரிய பட்டன் வைக்கக் கூடாது என்பது வரை பல கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியாக கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் உள்ள மார்த்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற பெண் தேர்வர்களின் உள்ளாடையை கழற்றச் சொல்லியிருக்கிறார்கள் அங்கிருந்த மேற்பார்வையாளர்கள். சுமார் 90 பெண்கள் தங்களை உள்ளாடைகளை கழற்றி வைத்துவிட்டு நீட் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்த சம்பவம் இப்போது பெரிய பிரச்சினையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சம்பவம் நடந்த மையம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொல்லம் பகுதியிலுள்ள அயூரில் உள்ள மார்த்தோமா கல்லூரி மையத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அங்கு என்ன நடந்தது? பாதிக்கப்பட்ட மாணவியே சொல்கிறார்.

“தேர்வுக்கு முன்னதாக, அதில் பங்கேற்க வந்திருக்கும் மாணவிகளை ஸ்கேன் செய்யப் போவதாக கூறினார்கள். சரி சாதாரணமாக ஸ்கேன் செய்து விட்டுவிடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் ஸ்கேன் செய்வதற்காக வந்திருந்த மாணவிகளை 2 வரிசையாக பிரித்தார்கள். இதில் உலோக பட்டன்களைக் கொண்ட உள்ளாடைகளை அணிந்த மாணவிகள் ஒரு வரிசையிலும், பிளாஸ்டிக் பட்டன்களைக் கொண்ட உள்ளாடைகளை அணிந்த மாணவிகள் மற்றொரு வரிசையிலும் நிற்க வைக்கப்பட்டனர். நான் உலோக பட்டன்களைக் கொண்ட உள்ளாடைகளை அணிந்திருப்பதாக சொன்னதும், என்னை அதற்குரிய வரிசையில் நிற்கவைத்தனர். எங்களுக்கு எதுவும் புரியவில்லை.

ஸ்கேனிங் அறைக்குள் சென்றதும், எங்கள் உள்ளாடைகளை (ப்ரா) கழற்றி அங்குள்ள மேஜையின் மீது வைக்குமாறு கட்டளையிட்டனர். நாங்கள் தயங்கியபோது, ’90 சதவீதம் மாணவிகள் உள்ளாடையை கழற்ற வேண்டியுள்ளது. இதில் தயங்குவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் எதிர்காலத்தைவிட உள்ளாடை முக்கியமா? நேரத்தை வீணாக்காமல் உள்ளாடையை கழற்றிவிட்டு தேர்வெழுதச் செல்லுங்கள்’ என்று அங்கிருந்த பாதுகாவலர்கள் அவசரப்படுத்தினர்.

பின்னர் அந்த ப்ராக்கள் அனைத்தையும் ஒன்றாக கட்டிவைத்தனர். உள்ளாடை அணியாமல் தேர்வெழுத சென்றோம். மிகுந்த அவமானமாக இருந்தது. துப்பாட்டாவும் அனுமதி இல்லை என்பதால் எங்கள் முடியை முன்பக்கம் இழுத்துப் போட்டுக் கொண்டோம். எங்களுடன் ஆண்களும் தேர்வு எழுதினார்கள். மிக மோசமான அனுபவம்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் அந்த மாணவி.

இதே சம்பவத்தைப் பற்றிக் கூறும் மற்றொரு மாணவி, “தேர்வுக்கு பிறகு எங்களை ஒரு அறைக்கு அழைத்து, எங்கள் உள்ளாடைகளை திருப்பிக் கொடுத்தனர். அதை கையில் எடுத்துக்கொண்டு செல்லுமாறு கட்டாயப் படுத்தினர். அவற்றை அணிவதற்குக்கூட எங்களுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. அந்த அறையும் ஒரே இருட்டாக இருந்தது. எங்களுடைய உள்ளாடைதானா என்பதை கூட பார்க்க இயலவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது அவமானத்தால் அழுத மாணவிகளைப் பார்த்து, ‘எதற்காக அழுகிறீர்கள்?’ என்று அங்குள்ள காவலர்கள் மிரட்டியதாகவும் சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தந்தை போலீஸில் முதல் புகார் அளித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு புகார்கள் வந்திருக்கின்றன.

மருத்துவராகும் கனவோடு தேர்வு எழுத வந்த மாணவிகளை இவ்வாறு நடத்தியது கேரளாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் வாகனங்கள் உள்ளிட்ட உடமைகளை மாணவர் அமைப்பினர் சேதப்படுத்தினர். கேரள பெண்கள் உரிமை அமைப்பும் இந்த விஷயத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது.

இப்போது ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மூவர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பெண்கள். மற்ற இரு பெண்களும் அந்தக் கல்லூரியின் தூய்மைப் பணியாளர்கள்.

இச்சம்பவத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து, ‘அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பெண்களை சிறுமைப்படுத்துவது போல் இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது. இது வெட்கக்கேடான சம்பவம்’ என்று மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த மையத்தின் தேர்வு மேற்பார்வையாளர் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து தேசிய தேர்வு முகமைக்கு (National Testing Agency) கூறியிருக்கிறார். ‘உள்நோக்கத்தோடு இந்த புகார்கள் கூறப்படுகின்றன’ என்று தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள விளக்கத்தில், ” கேரளாவில் நீட் எழுத வந்த மாணவியிடம் உள்ளாடையை களைய சொன்னதாக எந்த புகாரும் எங்களுக்கு நேரடியாக வரவில்லை. செய்தி நிறுவனங்கள் மூலம்தான் இதுதொடர்பான தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. நீட் தேர்வின் ஆடைக்கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் இதுபோன்று கூறப்படவில்லை” என்று தெரிவித்திருந்தது.

அங்கே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள், ‘தேர்வு எழுத வருபவர்கள் எந்த வித உலோகத்தையும் அணிந்திருக்க கூடாது என்ற கட்டுப்பாடு இருந்ததால்தான் இப்படி நடவடிக்கை எழுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரிக்க தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் பணித்துள்ளது.

ஏற்கனவே நீட் தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள் இருக்கிறது. இதில் இது போன்ற சம்பவங்கள் நீட் தேர்வின் மீது கோபத்தை அதிகரிக்க செய்கின்றன. இதை மத்திய அரசு உணர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...