No menu items!

மிஸ் ரகசியா – கள்ளக்குறிச்சி கலவரம் காரணம் யார்?

மிஸ் ரகசியா – கள்ளக்குறிச்சி கலவரம் காரணம் யார்?

ஆபீஸில் தனது அறையில் வழக்கமாக விறைத்துப் போகும் அளவுக்கு ஏசியை வைக்கும் ரகசியா, இன்று ஏசியை அணைத்துவிட்டு ஃபேனின் கீழ் உட்கார்ந்திருந்தார்.

“என்ன ஆச்சு குளிருதா? ஏசியை ஆஃப் பண்ணி வைச்சிருக்கே?”

“குளிரெல்லாம் ஒண்ணுமில்லை. கரண்ட் பில் ஜாஸ்தியாய்டும்ல. ரேட்டையெல்லாம் ஏத்திவிட்டுருக்காங்க. அதுக்காகத்தான் இப்பவே ஏசி இல்லாம வாழ பிராக்டீஸ் பண்றேன்.” சிரித்தாள் ரகசியா.

“இப்படி திடீர்னு கரண்ட் பில் ஏத்தினதால அரசுக்கு கெட்ட பெயர் வராதா?”

“பல நாள் ஆலோசனை பண்ணி, வேற வழியில்லாம இந்த கட்டண உயர்வை கொண்டு வர்றதா அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லி இருக்கார். அதோட மத்திய அரசின் நெருக்கடியும் மின் கட்டண உயர்வுக்கு ஒரு காரணம்னும் அவர் சொல்லியிருக்கார். அதேநேரத்துல வெறும் அறிக்கையா முடிக்க வேண்டிய விஷயத்தை இப்படி பிரஸ் மீட்டெல்லாம் வச்சு அமைச்சர் பெருசு படுத்திட்டதா மின்துறை அதிகாரிகள் நினைக்கறாங்க.”

”வெறும் அறிக்கைனா அதுல அரசியல் பேச முடியாதுல. செய்தியாளர் சந்திப்புனா போகிற போக்கில பல விஷயத்தை பேசிறலாம். மத்திய அரசு கட்டாயத்தினால்தான் ஏத்துறோம்னு சொன்னதை பாஜக ரசிக்கல போல.”

”ஆமா ரசிக்கல. ஆனா மின் வாரியத்தோட கடன் அதிகமாகிட்டே போகும்போது கட்டணத்தை உயர்த்தாம இருக்கிறது சரியில்லனு தொடர்ந்து மத்திய அரசுகிட்டருந்து அழுத்தம் வந்துட்டே இருந்திருக்கு. அதை சுட்டிக் காட்டுறதுல எரிச்சல் வருது.”

“கட்டணத்தை ஏத்துனா தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? எதிர்க் கட்சிகள் கட்டண உயர்வை கேள்வி கேக்குறாங்களே?”

“2024ல்தான் நாடாளுமன்றத் தேர்தல், அதுக்குள்ள இந்தப் பிரச்சினையை மறந்துடுவாங்கனு ஆளும் கட்சி நினைக்குறாங்க. அது மட்டுமில்லாம இவங்க மின் கட்டணத்தைதான் உயர்த்துறாங்க, ஆனா மத்திய அரசு கேஸ் விலை, பெட்ரோல் விலை, அரிசிக்கு ஜிஎஸ்டினு ஏகப்பட்டதை ஏத்திருக்கே. அதெல்லாம் இவங்க சொல்லுவாங்க.”

”சரி கள்ளக்குறிச்சி விஷயத்துல முதல்வர் ரியாக்‌ஷன் என்ன?”

“கள்ளக்குறிச்சி கலெக்டரையும் எஸ்.பி.யையும் மாத்திட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் முன்கூட்டியே இந்த சம்பவம் நடக்காம தவிர்த்திருக்கணும்னு சொன்னார் போல. முதல்வர் இதை நிர்வாக ரீதியான பிரச்சினையாக மட்டும் பார்க்கல. அரசியல் ரீதியாகவும் இதை பார்க்கிறார்.”

“எப்படி?”

“இந்த சம்பவத்தை தூத்துக்குடி சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார். அது போன்ற ஒரு சூழலை உருவாக்க முயற்சித்திருக்காங்க. ஆனால், காவல்துறை அமைதி காத்து துப்பாக்கி சூடு எதுவும் நடத்தவில்லை. கலவரம் இன்னும் கொஞ்சம் அதிகரிச்சிருந்தாலும் துப்பாக்கிச் சூட்டுல முடிஞ்சிருக்கும். அப்படி நடந்திருந்தா அது ஆட்சிக்கு அவப் பெயரை கொண்டு வந்திருக்கும்னு கட்சிக்காரங்ககிட்ட பேசுனதா ஒரு தகவல் இருக்கு. அது மட்டுமில்லாம இறந்த மாணவியின் தரப்பில் உச்ச நீதிமன்றம் வரை வழக்கை கொண்டு செல்கிறார்கள் என்றால் அவர்கள் பின்னணியில் பெரிய சக்தி இருக்கிறது என்பது தெரிகிறது நாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இன்னும் இது மாதிரி நிறைய முயற்சிகள் ஆட்சிக்கு எதிரா நடக்கும்னு சொல்லி கட்சிக்காரங்களை எச்சரிக்கையா இருக்கும்படி சொல்லியிருக்காராம்.”

”அது சரி, ஆனா கலவர சூழலை உருவாகாம தடுத்துருக்கலாமே? அதை கவர்மெண்ட் மிஸ் பண்ணிடுச்சே.”

“ஆமா, அது இயல்பா நடந்ததா அல்லது அதிகாரிகள் வேண்டுமென்றே செய்தார்களா என்றும் திமுக யோசிக்கிறது. டிஜிபி டபிள் கேம் ஆடுகிறாரோ என்று சந்தேகப்படுகிறார்களாம். கொஞ்ச மாசம் முன்னால டெல்லியில் நடந்த காவல்துறை அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் பிரதமரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார் டிஜிபி. அதையும், இப்போதைய அவர் செயல்பாட்டையும் இணைச்சுப் பார்க்கிறாங்க. அதே மாதிரி உளவுத் துறையும் பொறுப்பா செயல்படலனும் திமுகவுல வருத்தம் இருக்கு. உளவுத் துறை அதிகாரி தன் பிரச்சினையை சமாளிக்க நேரத்தை செலவிடுறாரு என்ற குற்றச்சாட்டு முதல்வர்கிட்ட போயிருக்கு. விரைவில் காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம்”

“அமைச்சர்களும் விரைந்து செயல்படலையே.”

“அப்படி சொல்ல முடியாது. அமைச்சர் கணேசன் சென்று பாதிக்கப்பட்ட தரப்பை சந்தித்து பேசியிருக்கிறார். ஆனால், அமைச்சர்களிடையே கூட பிரச்சினை இருக்கிறது. செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு பேசியதை அந்தப் பகுதியை சார்ந்த இன்னொரு செல்வாக்கான அமைச்சர் ரசிக்கவில்லை. இவர் ஏன் இதில் தலையிடுகிறார் என்று நெருங்கியவர்களிடம் கூறினாராம்.”

“அந்த அமைச்சர் ஏன் அந்த விவகாரத்தில் தலையிட்டாராம்?”

“அதற்கும் காரணம் இருக்கிறது. அந்தப் பள்ளியைச் சார்ந்தவர்களுக்கும் அந்த அமைச்சருக்கும் சொத்துக்கள் சமாச்சரத்தில் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். அந்தப் பகுதியில் அமைச்சருடைய நிலமும் இருக்கிறதாம்.”

“பள்ளிக்கூட சொந்தக்காரர்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ்னு சொன்னாங்க. திமுக அமைச்சரோட தொடர்புனு நீ சொல்ற.”

“தொழில்னு வந்துட்டா கட்சி கிடையாது. இது அடிப்படையான விதி. நான் அந்தப் பகுதில கேள்விப்பட்டதைதான் சொன்னேன். இன்னும் முழுவிவரம் தெரிய வரல.”

”ஸ்கூல் மேல தப்பு இல்லையா, அந்தப் பகுதி மக்களுக்கு அந்த ஸ்கூல் மேல பல வருஷ கோபம்; அதான் கலவரமா வெடிச்சிருக்குனு சொல்றாங்களே?”

“ஏற்கனவே அந்த ஸ்கூல்ல இது மாதிரியான மர்ம சம்பவங்கள் நடந்திருக்கு. ஆனா அதையெல்லாம் தாண்டி அந்த ஸ்கூல்ல மூவாயிரம் பசங்க படிக்கிறாங்க. ஊர்க்காரங்க பிள்ளைங்களே படிக்கிறாங்க. அதனால கோபம் இருந்தாலும் இந்த அளவு கலவரமா முடிஞ்சிருக்குமான்றது சந்தேகம்தான்.”

“சரியான சந்தேகம்தான்.”

“அதேநேரத்தில் தன் மீதான வழக்குகளில் இருந்து தப்புவது எப்படி என்பது பற்றியே சதா சிந்தித்துக்கொண்டு இருந்ததால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் டேவிட்சனால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்று பேசப்படுகிறது. அத்துடன், தனக்கு கீழ் அவர் பதவியில் வைத்துள்ள பெண் அதிகாரி அத்தனை திறமையானவர் இல்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உளவுத்துறையின் தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். அதனால், அவர்கள் மீது முதல்வர் ஏக கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் மாவட்ட அளவிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளும் விரைவில் மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.”

“திறமையான அதிகாரிகளுக்கு பதவி கிடைத்தால் சரி. ஆனா இந்த சம்பவத்தினால அதிமுக, பாஜக குஷியா ஆகியிருப்பாங்களே.”

“இல்ல. அதிமுகவுக்கு அவங்க பிரச்சினையே தலைக்கு மேல இருக்கு. பாஜகவுக்கு உட்கட்சிப் பிரச்சினை ஜாஸ்தியாகிட்டு இருக்கு. அண்ணாமலை எது சொன்னாலும் அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுகிறார் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன். சமீபத்தில் தன்னிடம் மனு கொடுக்க வந்த ஏழைத் தாயை அடித்ததற்காக வருவாய்த்துறை அமைச்சர் 24 மணி நேரத்தில் ராஜினமா செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம்னு அண்ணாமலை அறிவிச்சார். ஆனா அதுக்கு நேர்மாறா ‘இது இயல்பா நடந்த விஷயம். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்’னு நயினார் நாகேந்திரன் அமைச்சருக்கு ஆதரவா கருத்து தெரிவிச்சிருக்கார். இதுல அண்ணாமலைக்கு செம கடுப்பு. ஆனா ஒண்ணும் சொல்ல முடியல.”

“ஓஹோ?”

“இதேபோல் சென்னையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களை அழைத்து கூட்டம் போட்டுள்ளார் அண்ணாமலை. இந்தக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜனும் கலந்து கொண்டார். தொண்டர்கள் எப்படி கட்சி வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் அவர் வகுப்பு எடுக்க, அப்போது குறுக்கிட்ட வேளச்சேரி நிர்வாகி ஒருவர், ‘உங்கள் பொறுப்பில் எத்தனை மண்டலங்கள் உள்ளன? எத்தனை நிர்வாகிகள் இருக்கிறார்கள்? அவர்களில் சிலர் பெயரை உங்களால் சொல்ல முடியுமா?’ என்று கரு நாகராஜனிடம் குறுக்கு கேள்வி கேட்டுள்ளார். இதற்கு கரு.நாகராஜன் விழிக்க, ‘நாங்க கட்சி வேலைய ஒழுங்காதான் பார்க்கிறோம் நீங்கதான் சரியில்லை’ என்று சொல்லியிருக்கிறார் அந்த நிர்வாகி. ஒரு நமுட்டுச் சிரிப்புடன் இதைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தாராம் அண்ணாமலை.”

“தேசிய கட்சிகள்னாலே கோஷ்டிப் பூசல் இருக்கத்தான் செய்யும் போலிருக்கு.”

“தேசிய கட்சிகள் மட்டுமல்ல. மாநில கட்சிகளிலும் பூசல்கள் இருக்குது. தருமபுரி எம்.பி. செந்தில்குமார் மீது இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கடும் கோபத்தில் இருக்கிறார். ‘நான் ஆதீனம், கோயில் குடமுழுக்குன்னு போய் திமுக இந்து விரோத கட்சி அல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால், இவர் தேவையில்லாமல் பூமி பூஜையில் குழப்பம் செய்திருக்கிறார். பாதிரியார் எங்கே, இமாம் எங்கே, பெரியாரிஸ்ட் எங்கே என்று கலாட்டா செய்து இந்துக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்’ என்று சக உடன்பிறப்புகளிடம் பொருமுகிறாராம். திமுகவுக்கு ரெண்டு பிம்பமும் தேவைப்படுகிறது. ஆன்மீக அரசியலும் வேண்டியிருக்கிறது. பெரியார் அரசியலும் தேவைப்படுது என்ன செய்ய?”

“அதிமுக விவகாரம் பற்றி ஏதும் அப்டேட் இருக்கிறதா?”

”எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டதில் எஸ்.பி. வேலுமணி ரொம்ப அப்செட்டாம். ஆனால், இதுவும் ஒரு வியூகம்தான். ஓபிஎஸ்ஸின் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்தவர்தான் ஆர்.பி. உதயகுமார். கவுண்டர்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் அதிமுகவை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்ற கருத்தை மாற்ற இந்த முயற்சி என்கிறார்கள் அதிமுகவினர்.”

”ஓபிஎஸ் தரப்பு எப்படி இருக்கிறது?”

“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் எடப்பாடியை விட ஓ.பிஎஸ்ஸிடம் அதிக கரிசனம் காட்டுகிறார்கள். எடப்பாடியார் இடைக்காலப் பொதுச் செயலாளர் ஆனதற்கு டெலிபோனில்தான் வாழ்த்து சொன்னார் அண்ணாமலை. ஆனால், அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கொரோனோவால் பாதிக்கப்பட்டபோது, அவர் விரைவில் குணமாக ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினோ, அதிமுக ஒருங்கினைப்பாளர், எதிர்கட்சித் துணைத் என்றெல்லாம் குறிப்பிட்டு ஓபிஎஸ் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். ஆனால், அண்ணாமலை வாழ்த்து சொன்னதை ரசித்த ஓபிஎஸ் தரப்பு, முதல்வர் வாழ்த்து சொன்னதை ரசிக்கவில்லை. ஏற்கனவே திமுக ஆதரவு என்ற பிம்பம் இருக்கிறது. இந்த சமயத்தில் வேண்டுமென்றே வாழ்த்து சொல்கிறார் என்று கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.”

“மருத்துவ சிகிச்சைக்கு பிறகு முதல்வர் மீண்டும் ஃபுல் பார்முக்கு திரும்பிவிட்டாரா?”

“அப்படித்தான் திமுகவினர் சொல்கிறார்கள். சில பல காரணங்களால் கட்சி நிர்வாகிகள் முதல்வரை சந்திக்க முடியவில்லை என்ற முணுமுணுப்பு இருந்து வந்தது. இப்போது கட்சி பிரச்சனையை பற்றி பேச ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை முதல்வர் ஏற்படுத்தி இருக்கிறார். துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் அந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக கட்சி பிரச்சனைகளை தலைமை கழகத்தில் எப்போதும் இருக்கும் பூச்சி முருகனிடம் நிர்வாகிகள் சொல்வார்கள். அவர் தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார். இப்போது குழு உறுப்பினர் யாராவது இருந்தால் அவர்களிடம் அனுப்பி வைக்கிறார் பூச்சி முருகன். பெரும்பாலான புகார்கள் சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சித் தலைவர், கவுன்சிலர் மீதுதான் வருகிறதாம். உடனே குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு டோஸ் விட்டு எச்சரிக்கை செய்கிறார்களாம்.”

’கட்சிக்காரர்களிடம் நல்ல தொடர்பில் இருந்துதானே கலைஞர் கட்சியை வளர்த்தார், அதே வழியில் முதல்வரும் செல்கிறார்.”

“ஆமாம், அவரை விட ஒரு படி மேலே சின்னவர் கட்சியினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்று உற்சாகமாய் சொல்கிறார்கள் உடன் பிறப்புகள்” என்று சிரித்துக்கொண்டே கூறி சிட்டென்று பறந்தாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...