உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 30-ல் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்ச்சி விகிதத்தை உயர்த்துதல், ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல், உயர்கல்வி மேம்பாடு, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த 17ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டம் முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜாவிற்கு கடந்த வாரம் மயக்கம் ஏற்பட்டது. மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டதால், மதுரையிலேயே ஒரு நாள் தங்கி விட்டு சென்னை திரும்பினார். அதன் பின் தன்னுடைய நீலாங்கரை இல்லத்தில் பாரதிராஜா ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சென்னையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அவர் இருப்பார் என பாரதிராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவருடன் சோனியா காந்தி சந்திப்பு
இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக கடந்த மாதம் 25-ம் தேதி திரௌபதி முர்மு பதவியேற்றார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள குடியரசு தலைவர் மாளிகை, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்துள்ளது.
நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்
கடுமையான இந்துத்துவா கருத்துக்களுக்கும் இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவிப்பதிலும் பெயர் பெற்றவர், தெலுங்கானா எம்எல்ஏ ராஜா சிங். நபிகள் நாயகம் குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தெலுங்கானாவில் இவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதனையடுத்து, தெலுங்கானா காவல்துறையினரால் ராஜா சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று அவர் பாஜக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் மத்திய ஒழுங்குக் குழுவின் செயலாளரான ஓம் பதக் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துகளை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இது பாரதிய ஜனதாவின் அரசியலமைப்பின் விதியை தெளிவாக மீறுவதாகும். மேலும், விசாரணை நிலுவையில் உள்ளதால், நீங்கள் கட்சியிலிருந்தும், உங்கள் பொறுப்புகள் அல்லது பணிகளில் இருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தகவல்
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA), செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் தண்ணீர் இருந்ததை சுட்டிக்காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மேற்கொண்ட செவ்வாய் கிரக ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில், இந்த தண்ணீர் மேப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அந்த கிரகம் முழுவதும் தண்ணீர் இருந்துள்ளதை அறிந்துகொள்ள முடிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களின் எதிர்கால வசிப்பிடமாக இந்த கோள் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த வரைபடம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.