No menu items!

பிடிஆரை குறி வைக்கும் பாஜக – மிஸ் ரகசியா

பிடிஆரை குறி வைக்கும் பாஜக – மிஸ் ரகசியா

அலுவலகத்துக்குள் ரகசியா நுழையும்போதே உற்சாகமாய் வந்தாள்.

“என்ன உற்சாகம்? சென்னை வெப்பம் குறைந்து மழை வந்த உற்சாகமா?” என்றோம்.

“மழை வந்தால் சென்னையில இருக்கிறவங்களுக்கு இப்பலாம் உற்சாகம் வர மாட்டேங்குது. பயம்தான் வருது. நோண்டி போட்டிருக்கிற குழியில விழுந்துடுவோமானு” என்று சிரித்தாள்.

“சிரிப்புக்கு காரணத்தை சொல்லாம சிரிச்சுக்கிட்டு இருக்கியே?”

“ரஜினி கூட இருந்த அர்ஜூன மூர்த்தியை நினைச்சேன். சிரிப்பு வருது” என்றாள் ரகசியா.

“யாரு ரஜினி கூட இருந்தவரா? மீண்டும் பாஜக போய்ட்டாரே”

”ஆமாம். அதான் சிரிப்பு வருது. பாஜகவிலருந்து விலகி ரஜினி கட்சில சேர்ந்ததே ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதி. ரஜினி கூடவே இருந்து கவனித்துகொள்ள பாஜகவால் அனுப்பப்பட்டவர்தான் அர்ஜூன மூர்த்தி. திடீர்னு நான் அரசியலுக்கு வரலைன்னு ரஜினி சொன்னதும் அவருக்கு கஷ்டமாகிடுச்சு. உடனே பாஜகவுக்கு வந்தா நல்லாருக்காதுனு தனிக் கட்சி ஷோ காட்டிட்டு இப்ப தாய்க் கட்சியான பாஜகவுக்கே வந்துட்டார். அங்கேயும் ஓரமாதான் உக்கார்ந்துக்கிட்டு இருக்கணும். அரசியல்ல எத்தனை நாடகம் பார்க்க வேண்டியிருக்கும் பாருங்க”

“அரசியலே மக்கள் முன் நடத்தற நாடகம்தானே. சரி, கவர்னர் ரவி மீண்டும் டெல்லி போயிருக்காரே.. என்ன காரணம்? அடிக்கடி டெல்லி போறாரே”

“அவருக்கு டெல்லியிலும் வீடு இருக்கு, அதனால அங்க அடிக்கடி போறார். ஆனா இந்த தடவை அவர் போறதுக்கு காரணம் மாதா அமிர்தானந்தமயி. அவங்க அமைப்பை சார்ந்தவங்க ஹரியானா ஃபரிதாபாத்தில் பிரமாண்டமான மருத்துவமனை கட்டியிருக்காங்க. பிரதமர் மோடி 24ஆம் தேதி திறந்து வைக்கிறார் அதுல கலந்துக்கிறதுக்காக டெல்லி போயிருக்கார். ஆனா கூடவே சில ஃபைல்களையும் எடுத்துட்டு போயிருக்கார்”

“என்ன ஃபைல்”

“மத்திய அரசையும் பிரதமர் மோடியை விமர்சனம் செஞ்சு பிடிஆர் பேசுனது வட மாநிலங்கள்லயும் பெரிய ஹிட்டாகியிருக்கு. அதுல பாஜக மேலிடத்துக்கு ரொம்ப கோபம். பிடிஆர் பத்தின அனைத்து டீடெய்ல்சையும் விசாரிக்க சொல்லி அமித்ஷா உத்தரவு போட்டிருக்கிறார். ஜஸ்டிஸ் பார்ட்டி தொடங்குனதுல ஆரம்பிச்சு பிடிஆரின் குடும்ப வரலாறையே எடுக்க சொல்லியிருக்கார். அது மட்டுமில்லாம பிடிஆர் வேலை பார்த்த இடங்கள், அங்கு நடந்த விஷயங்கள் என எல்லாமே விசாரிச்சு சொல்ல சொல்லியிருக்கிறார். பிடிஆர் முருகபக்தர் என்பதும் மீனாட்சி அம்மன் மீது அளவில்லா பற்றுள்ளவர் என்பதும் அமித்ஷாவை கவர்ந்துள்ளது. இவர் நம்ம கட்சில இருந்திருக்கணும்னு சொன்னதாகவும் தகவல் இருக்கு. இப்போ பிடிஆரைப் பற்றிய முதல் கட்ட ஃபைல்கள் ரெடியாகியிருக்கு. அதை உளவுத் துறை அதிகாரிகள்தான் கொடுக்கிறதாதான் இருந்தது. ஆனா நானே அமித்ஷாகிட்ட கொடுத்துடுறேன்னு வாங்கிட்டு போயிருக்காராம் கவர்னர்”

“கொடுத்துட்டாராமா?”

“இப்ப..உங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கிறவரை அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்க்க முடியலை. அப்பாயிண்ட்மெண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார்”

”பிடிஆர் எல்லாத்தையும் சமாளிச்சிடுவார். ஆமா, பிரதமர் இலவசங்களை எதிர்க்கிறார். ஆனா புதுச்சேரி பாஜக ஆட்சி பட்ஜெட்ல பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவிச்சிருக்காங்களே?”

“ஆமா, புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது திமுகவுக்கும் பிரச்சினையை கொடுத்திருக்கு. திட்டத்தை அறிவிச்சிருக்கிற புதுவை அரசு உடனடியா இந்தத் திட்டத்தை செயல்படுத்துவாங்கனு சொல்றாங்க”

“யூனியன் பிரதேசமாச்சே உடனே பண்ன முடியுமா? மத்திய அரசு அனுமதி வேணுமே?

“மத்திய அரசோட அனுமதியோடுதானே இதை அறிவிச்சிருக்காங்க. புதுச்சேரில ஆயிரம் ரூபாய் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா, தமிழக அரசுக்கு அழுத்தம் அதிகரிச்சுடும். அங்க கொடுக்கிறாங்க உங்களாலே முடியாதா என்ற கேள்விகள் எழும்பும். திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கத்தான் அந்தத் திட்டத்தை அறிவிச்சிருக்காங்கனு சொல்றாங்க”

“அதிமுக விவகாரம் பற்றி லேட்டஸ்டா ஏதும் தகவல்கள் இருக்கா?”
“இரு அணிகளும் மீண்டும் இணைய வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த ஆடிட்டர் அறிவுரை சொல்லியுள்ளார். ஆனால் அவர் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர் என்பதால் இதை ஏற்க மறுத்துள்ளார் எடப்பாடி. அந்த ஆடிட்டரின் சங்காத்தமே வேண்டாம். ஓபிஎஸ்ஸின் சிநேகமும் வேண்டாம். இருவரின் திட்டமும் வேறு என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார் எடப்பாடி. அதேநேரத்தில் மாவட்டச் செயலாளர்களுடனும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். எதிரணியைச் சேர்ந்தவர்கள் உங்களை சமாதானமாகப் போகச்சொல்லி விலைபேசக்கூடும். ஜாக்கிரதையாக இருங்கள் என்று அவர்களை எச்சரித்து வருகிறார்.”

“ஓபிஎஸ்ஸின் நிலை என்ன?”

“தான் பொதுக்குழுவைக் கூட்டினால் என்ன என்று சட்ட நிபுணர்கள் சிலரிடம் கருத்து கேட்டுள்ளார் ஓபிஎஸ். பொதுக்குழுவை கூட்டி பதில் நடவடிக்கையாக எடப்பாடியை கட்சியைவிட்டு நீக்குவது அவரது திட்டம். ஆனால் சட்ட நிபுணர்கள், ‘இது தேவையில்லாமல் உங்களுக்கு புதிய சங்கடத்தை ஏற்படுத்தும். பழைய நிலை தொடரும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், நீங்கள் இருவரும் இணைந்து முடிவுகளை எடுக்கவேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்’ என்று விளக்க, பொதுக்குழு நடத்தும் திட்டத்தை கைவிட்டிருக்கிறார் ஓபிஎஸ்.”

“கோட்டை வட்டார செய்திகள் ஏதும் இருக்கிறதா?”

“தமிழக காவல்துறை மீது தமிழக முதல்வர் ஏக வருத்தத்தில் இருக்கிறாராம். வேலூரில் 6,000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் மீது வேலூர் சரக டிஐஜி நடவடிக்கை எடுக்காமல் இருந்தது, அச்சரப்பாக்கம் ஆய்வாளர் கைது என காவல்துறையினர் மீதே பல குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர் டென்ஷனில் இருக்கிறார் எனக்கே இப்போது காவல்துறை மீது நம்பிக்கை போய்விட்டது. மக்கள் எப்படி நம்புவார்கள் என்று முக்கிய காவல்துறை அதிகாரிகளை அழைத்து வறுத்து எடுத்து விட்டார். கூடவே உளவுத்துறை மீதும் தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார் முதல்வர்.”

“அன்புமணி ஏதோ வருத்தத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேனே?”

“பாமகவின் தலைவராக ஜி.கே.மணி இருந்தபோது டாக்டர் ராமதாஸ்தான் முக்கிய அறிக்கைகளை வெளியிடுவார். ஜி.கே.மணி இதில் தலையிடுவதில்லை. இப்போது அன்புமணி ராமதாஸ் தலைவர் ஆனவுடன் அறிக்கைகளை தான்தான் வெளியிட வேண்டும். கட்சியை தான்தான் முழுமையாக நடத்த வேண்டும் என்று விரும்புகிறாராம். ஆனாலும் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கருத்து அறிக்கை என்று ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பதால் மீடியா அன்புமணியை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. இதனால் ‘நானும் டம்மி தலைவர்தானா தைலாபுரத்தில் புலம்புகிறாராம் அன்புமணி.”

“ராகுல் காந்தியின் நடைபயணத் திட்டம் எந்த அளவில் இருக்கிறது?”

“கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் நடந்தே சென்று பாரதிய ஜனதாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய செப்டம்பர் ஏழாம் தேதி ராகுல்காந்தி கன்னியாகுமரி வருகிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் இந்த பாதயாத்திரை தொடங்குகிறது. தினமும் குறைந்தது 20 கிலோமீட்டர் நடைபயணம் செல்லவும், ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டங்களை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விரும்புகிறார்கள். அது நடக்குமா என்று சஸ்பென்சுடன் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...