No menu items!

நியூஸ் அப்டேட்: நீட் முடிவு வெளியாவதில் தாமதம் – பி.இ. கலந்தாய்வு ஒத்திவைப்பு

நியூஸ் அப்டேட்: நீட் முடிவு வெளியாவதில் தாமதம் – பி.இ. கலந்தாய்வு ஒத்திவைப்பு

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கான தரவரிசை பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 4 சுற்றுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, நாளை தொடங்க இருந்த பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். “நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான 2 நாட்களுக்கு பிறகு பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும். காலியிடங்களை தடுக்கவும், மாணவர்களுக்கு ஏற்படும் வீண் சிரமத்தை தடுக்கவும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு கலந்தாய்வு நடைபெறும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை

பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமாரும் துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ்வும் பதவியேற்றுள்ளனர். இந்த அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.  243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்-க்கு 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது.

இதனிடையே, பிகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, நிலத்தை பெற்றுக்கொண்டு ரயில்வேயில் வேலை வழங்கியதாக கடந்த மே 18ஆம் தேதி லாலு, அவரது மனைவி, மகள்கள் மற்றும் 12 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக லாலு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: மத்திய அரசு அறிவுறுத்தல்

தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கும் நோய், கேரளாவில் கடந்த மே மாதம் 6ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 82-க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், நாடு முழுவதும் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்நோய்க்கு மருந்துகள் இல்லாத நிலையில், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகளையே பெரும்பாலும் தாக்கும் என்பதால், இதன் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் குறித்து குழந்தைகள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும். அறிகுறி ஏற்பட்டவர்களை 5 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை – த்ரிஷா மறுப்பு

நடிகை த்ரிஷா, காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாகவும் அதற்கானப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன், “த்ரிஷாவுக்கு அரசியலில் சேரும் எண்ணமில்லை. இப்படி ஒரு செய்தி எங்கிருந்து வந்தது, எப்படி பரவியது என்று தெரியவில்லை. அதில் துளியளவும் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அருவியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய கணவன்: அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளம்பெண் ஒருவரை பொது அருவியில் நிர்வாணமாக குளிக்க சொல்லி அவரது கணவரே வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அந்த பெண், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் சாமியார் ஒருவர் மீதும் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மவுலானா பாபா ஜமாதார் என அழைக்கப்படும் சாமியார்,  பொதுவெளியில் உள்ள அருவி ஒன்றில் நிர்வாணமாக குளித்தால் ஆண் குழந்தை பிறக்கும் என கூறியதன் அடிப்படையில் கணவரும் அவரின் குடும்பத்தினரும், ராய்கட் மாவட்டத்தில் உள்ள அருவிக்கு அழைத்து சென்று, நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தியதாக புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...