No menu items!

நியூஸ் அப்டேட்: போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

நியூஸ் அப்டேட்: போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் இம்மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயகத்தில் ஆலோசனை நடத்தினார். காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் இறந்தது தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை பற்றியும் அப்போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர், சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருதால் பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19-வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

மன்னார்குடி ஜீயர் மீது காவல் நிலையத்தில் புகார்

கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள செண்டலங்கார ஜீயர் மீது மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் திராவிட கழகம் மற்றும் திமுக-வினர் புகார் மனு அளித்துள்ளனர். முன்னதாக தஞ்சை அருகே களிமேடு பகுதியில் கோயில் திருவிழாவில் தீ விபத்து நேர்ந்த பகுதியை பார்வையிடச் சென்ற மன்னார்குடி செண்பக மன்னார் செண்ட அலங்கார ஜீயர், செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது’ என கூறியுள்ளார். ஜீயரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிடர் கழகம் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மதுரையின் பொழுதுபோக்கே செல்லூர் ராஜூதான்: தங்கம் தென்னரசு கிண்டல்

மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு செல்லூர் ராஜூதான் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ பேசும்போது, “மதுரையில் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். பொழுது போக்குவதற்கு எந்த அம்சமும் இல்லை” என்றார். அப்போது குறுக்கிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “மதுரைக்கே சிறந்த பொழுது போக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டிற்கே தெரிந்த ஒன்று” என நகைச்சுவையாக கூறினார்.

பழிவாங்கும் நோக்கத்துடன் பட்டின பிரவேசத்துக்கு தடைஎடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பழிவாங்கும் நோக்கத்துடன் பட்டின பிரவேசத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கு மேலாக பட்டின பிரவேசம் நடந்து வருகிறது. அதற்கு தடை விதித்திருக்கிறார்கள். அது ஆன்மீகம் சார்ந்தது. திமுக அரசு அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் அதை தடை செய்திருக்கிறார்கள். ஆதீன எல்லைக்குள்தான் நடக்கிறது. இதை தடை செய்யவே அவர்களுக்கு அதிகாரம் இல்லை. இருப்பினும் வேண்டுமென்றே திட்டமிட்டு சில அரசியல் காரணங்களுக்காக, இந்த பட்டின பிரசேத்திற்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஆன்மீகத்தில் இந்த அரசு தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...