No menu items!

அரிசி vs சிறு தானியம்: எது சத்தானது?

அரிசி vs சிறு தானியம்: எது சத்தானது?

எது சிறந்த உணவு? அரிசியா சிறுதானியங்களா என்பது நீண்ட காலமாகவே சமூக வலைதளங்களில் தொடரும் ஒரு முக்கிய விவாதம். இந்நிலையில் இந்த விவாதத்துக்கு முடிவுரை எழுதும் விதமாக அரிசி, கோதுமையை விட சிறு தானியங்களே சத்தானது என்று வெளியாகியுள்ளது ஒரு ஆய்வு!

ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்ப மண்டலத்திற்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி மையம் (ICRISAT – இக்ரிசாட்), ‘தானியங்களின் விளைச்சலுக்கான மாறுபாடு மற்றும் ஊட்டச் சத்து பண்புகள்’ என்னும் தலைப்பில் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரும் மூத்த விஞ்ஞானியுமான அனிதா சீதா, நான்கு நாடுகளில் நடந்த எட்டு பரிசோதனைகளை ஒன்றிணைத்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சிறு குழந்தைகள், பால்வாடி செல்லும் குழந்தைகள், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளிடையே, 3 மாதம் முதல் 4.5 ஆண்டுகள் வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சோளம், ராகி, கம்பு, குதிரைவாலி, கோடோ போன்ற சிறுதானியங்கள் உணவாக கொண்ட குழந்தைகள் ஒரு பகுதியினராகவும் அரிசியை உணவாக உண்ட பகுதி குழந்தைகள் ஒரு பகுதியினராகவும் எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் இரு பகுதியினரின் வளர்ச்சியும் ஒப்பிடப்பட்டது.

அதில் அரிசி உணவை உண்ட குழந்தைகளைவிட, சிறுதானிய உணவை உண்ட குழந்தைகளின் சராசரி உயரம் 28.2%, எடை 26%, புஜத்தின் சுற்றளவு 39%, மார்பளவு 37% அதிகரித்திருந்தன.

”இந்த ஆய்வுக்காக இருநூறு மாறுபட்ட தானியங்கள் மதிப்பிடுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றின் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து பண்புகளை அடையாளம் காணுவதுதான் இந்த ஆய்வின் நோக்கம். ஆய்வின் முடிவில் அனைத்து தானியங்களின் ஊட்டச்சத்து பண்புகளிலும் குறிப்பிடத்தக்க மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் அரிசி, கோதுமை போன்ற முக்கிய தானியங்களைவிட சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கது என்பது உறுதியானது. சிறுதானியங்களில் புரதம், துத்தநாகம், இரும்பு, கால்சியம் உட்பட ஊட்டச் சத்துக்கள் சீரான அளவில் உள்ளன.

இந்த சிறு தானியங்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. நம் குறு நிலங்களில் வறட்சியை தாங்கி நன்றாக வளரக்கூடியவை இவை.

பல்வேறு மண் வகைகள், தட்பவெப்ப நிலைகளிலும் அதிக மகசூல் தரக்கூடியவை. மேலும், மழைக்காலங்களில் நீர் தேங்கினால் வேர் அழுகாமல் தாங்கும் சக்தியும் கொண்டவை. எனவே அரிசி, கோதுமையைவிட நம் ஊர் வேளாண்மைக்கும் இவை ஏற்றவை’’ என்கிறார் அனிதா சீதா.

இந்தியாவில் இப்போது அரிசியும் கோதுமையுமே பெரும்பான்மை உணவாக இருக்கிறது. இதில் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அரிசியே பிரதான உணவு. ஆனால், அரிசியை தரும் நெல் விளைவதற்கு அதிக நாட்களும் அதிக தண்ணீரும்

தேவைப்படும். ஆனால், அனிதா சீதா குறிப்பிடுவதுபோல் சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும், குறைவான நீர் வசதியிலும், சாதாரண மண் வளத்திலும்கூட நன்கு செழித்து வளரும். பயிரிடப்பட்டு மிக குறுகிய காலத்திலேயே, அதாவது 65 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும்.

அரிசிக்கு முன்பு நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தை பிடித்திருந்தது சிறுதானியங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவைப் பொறுத்தவரைக்கும் நாம் பாரம்பரியத்துக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதையே அனிதா சீதாவின் ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...