No menu items!

நியூஸ் அப்டேட்: ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு – பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

நியூஸ் அப்டேட்: ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு – பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகள் பெரும் இழப்புடன் வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில் நேற்றும் (திங்கள் கிழமை) வர்த்தகம் சரிவுடனே தொடங்கியது. காலையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை சரிந்து 57,000 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. தேசிய பங்கு சந்தையான நிப்டி 250 புள்ளிகள் வரை சரிந்து 17,000 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அனைத்து துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்து ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. பின்னர் வர்த்தகத்தின் இடையில் சிறிய அளவிலான முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும் வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 950 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தை நிப்ஃடி, 310 புள்ளிகளையும் இழந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இதே போல் இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் திங்கள் கிழமையும் வரலாறு காணாத அளவில் சரிவை அடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 81 ரூபாய் 38 காசுகள் என்ற  நிலையில் உள்ளது.

அமைச்சர் சேகர்பாபு சகோதரர் தூக்கிட்டு தற்கொலை

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த சகோதரரான பி.கே.தேவராஜ், சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 2 மகன்களும் பட்டப்படிப்பை முடித்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் அவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 63 வயதான பி.கே. தேவராஜ், கடந்த சில வாரங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. எனினும், தற்கொலைக்கான காரணம், விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்று கூறப்படுகிறது.

அதிமுக ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்: ஓ.பி.எஸ். அறிவிப்பு

ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக அரசியல் ஆலோசகராக, கழக அமைப்புச் செயலாளரும் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தாலான விலங்குகள் உருவம் கண்டெடுப்பு

ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து மத்திய தொல்லியல் துறைசார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இந்த அகழாய்வில் இதுவரை 85-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப்பட்டம் உட்பட பல பொருட்கள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது வெண்கலத்தாலான நாய், மான், ஆடு உருவங்கள், நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்புவாள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. சோதனை:  கர்நாடகாவில் 45 பேர் கைது

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமாக 15 மாநிலங்களில் உள்ள இடங்களில் கடந்த வியாழக்கிழமை (22-ந்தேதி) என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். 93 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 109 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரிடமும் டெல்லியில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணையின் அடிப்படையில் பிஎஃப்ஒஐ இடங்களில் மீண்டும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து, நேற்று நள்ளிரவு முதலே பல இடங்களில் அதிரடி வேட்டை தொடங்கி விட்டது. அசாம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில் நடந்து வரும் சோதனையில் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கர்நாடகாவில் மட்டும் 45 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...