No menu items!

நியூஸ் அப்டேப்: ப. சிதம்பரம் வீடுகளில் மீண்டும் சிபிஐ சோதனை

நியூஸ் அப்டேப்: ப. சிதம்பரம் வீடுகளில் மீண்டும் சிபிஐ சோதனை

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், அவரது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, அருகில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்கள், டெல்லியில் உள்ள சிதம்பரம் வீடு மற்றும் கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

2010 – 2014 காலகட்டத்தில் 250 சீனாகாரர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் அதற்காக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது. அதில், 250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவர் மீதும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பாகிஸ்தானில் அதிகரிக்கும் வெப்ப அலை: உலக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை

இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இது தொடர்பாக உலக வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கடந்த சில நாட்களாக 45 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் 50 டிகிரி செல்சியஸை நெருங்கியுள்ளது. எனவே, சுகாதாரம் மற்றும் வெப்ப அலை திட்டங்கள் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

தாஜ்மகால் அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை: புகைப்படத்தை வெளியிட்ட தொல்லியல் துறை

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளை திறக்க உத்தரவிட கோரி கடந்த 4-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த அறைகளில் இந்து கடவுள்களின் சிலை இருக்க வாய்ப்பு உள்ளதால் திறந்து சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தனது பருவ இதழில் தாஜ்மகால் அறைகளின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என்று ஏஎஸ்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளை பராமரிக்கும் பணி நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை கல்குவாரி விபத்து: உயிரிழப்பு 2 ஆக உயர்வு

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள சுமார் 400 அடி ஆழம் கொண்ட தனியார் கல்குவாரியில், கடந்த 14ந்தேதி இரவு கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் குவாரிக்குள் இறங்கி 6 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3வது நபர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில், கல்குவாரியில் இருந்து 4வது நபராக மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளியான முருகன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனால், கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் இருவர் குவாரிக்குள் சிக்கியுள்ள நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சாராயம் விற்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்: போலீசார் மீது புகார்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராமச்சந்திரன் என்பவர் பெரம்பூர் போலீசார் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “முன்பு சாராய விற்பனை செய்து வாரந்தோறும் போலீசாருக்கு ரூ.7 ஆயிரம் மாமுல் கொடுத்து வந்தேன். பின்னர் திருந்தி சாராய விற்பனையை நிறுத்திவிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இனி சாராய விற்பனை செய்யமாட்டேன் திருந்தி வாழ விரும்புகிறேன் என்று எழுதிகொடுத்து சென்றேன். ஆனால், பெரம்பூர் போலீசார் சாராயம் விற்பனை செய்யவில்லை என்றாலும் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டுமென்று கூறி மிரட்டி என்மீதும் எனது பிள்ளைகள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுகின்றனர். இது குறித்து உரிய விசாரணை செய்து திருந்திவாழ நினைக்கும் என்னையும், எனது குடும்பத்தாரையும் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...