ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜப்பானின் நாரா என்ற பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஷின்சோ அபே உரையாற்றிக் கொண்டிருந்த போது மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். உடனடியாக ஹெலிகாப்படர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மரடைப்பு ஏற்பட்டு நினைவற்ற நிலையில் உள்ளதாக முதற்கட்ட மருத்துவமனை தகவல்கள் கூறியிருந்தன. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷின்சோ அபேவை தூப்பாக்கியால் சுட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பெயர் டெட்சுயா யமகாமி (வயது 41), கடற்படையில் பணியாற்றியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் மனு விசாரணைக்கே உகந்தது அல்ல – ஈபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி தரப்பால் ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் 2.15 மணியளவில் மீண்டும் தொடங்கியது. இந்த வழக்கில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பை அதிமுகவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று இபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “ஓபிஎஸ் மனு விசாரணைக்கே உகந்தது அல்ல. ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடத்த எந்த தடையுமில்லை என உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். எனவே, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய ஓ.பன்னீர் செல்வம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு 2,190 உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பொதுக்குழுவுக்கு தீர்மானம் கொண்டுவரவும் நிறைவேற்றவும் அதிகாரம் உள்ளது. அங்கு எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க உரிமை உள்ளது. எதிர் கருத்து இருந்தால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம். அதை விடுத்து நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு: முழு வீச்சில் கூட்ட ஏற்பாடுகள்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் முழு வீச்சில் கூட்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது. பொதுக்குழு மேடை 80 அடி நீளம், 40 அடி அகலத்தில் 300 பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. செயற்குழுவிற்கு தனியாக ஒரு கூடாரமும் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. மேடை 30 அடி நீளம், 15 அடி அகலத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதில் செயற்குழு உறுப்பினர்கள் 100 பேர் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட் அவுட்கள் வைக்கப்பட்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 10-ந் தேதியே சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்களை அழைத்து வர மாவட்ட செயலாளர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து வருவதற்கு பஸ் ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. அந்ததந்த மாவட்ட கழக செயலாளர்கள் பஸ்களில் அழைத்து வர ஏற்பாடு செய்து வருகின்றனர் என்று இபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் 31 மாணவர்களுக்கு கொரோனா: பள்ளிக்கு 3 நாள் விடுமுறை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 170 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் சிலருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளியில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 72 மாணவ-மாணவிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து பள்ளியில் உள்ள இதர மாணவ-மாணவிகள் மற்றும் தொற்று பாதித்த மாணவர்களின் பெற்றோர்களிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்த பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கும், பெற்றோர் 9 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இரண்டு நாட்களில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளியின் வகுப்பறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க குவாட்(ஜப்பான்,அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா) கூட்டமைப்பு உருவாக்குவதில் முக்கிய காரணமாக இருந்தவர் ஷின்சோ அபே என்பது குறிப்பிடத்தக்கது. ஷின்சோ அபேவின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (8.07.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் ஜூலை 10 வரை, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை, ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 12ஆம் தேதி வரை, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளது.