No menu items!

சிறுகதை: கல் ஊற்று – கவிப்பித்தன்

சிறுகதை: கல் ஊற்று – கவிப்பித்தன்

அந்த வெடி வண்டி ஊருக்குள் நுழைந்ததுமே பரபரப்பானார் காத்தவராயன். காலையிலிருந்து அந்த வண்டிக்காகத்தான் சாலையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.

முன்புறம் பார்ப்பதற்குச் சாதாரண டிராக்டர் மாதிரிதான் இருந்தது அந்த வண்டியும். லக்குவான் அடித்தவனின் முடங்கிப்போன கை விரல்களைப் போன்ற நீளமான கலப்பைக்கு பதிலாக, அதன் பின்புறம் ஒரு சதுர வடிவப் பெட்டி இருந்தது. அதில் ஒரு மலைப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதைப் போல வளையம் வளையமாகச் சுருட்டி வைக்கப்பட்ட கருப்பு ரப்பர் பைப்பு. அதன் பக்கத்திலியே நீள் சதுரத்தில் இரண்டு சிறிய இரும்புப் பெட்டிகள்.

ஓட்டுநர் இருக்கையில் ஒருவரும், பெரிய பெரிய பின்புறச் சக்கரங்களுக்கு மேலிருந்த பலகைகளில் பக்கத்துக்கு இரண்டு பேருமாக மொத்தம் ஐந்துபேர் அந்த வண்டியில் இருந்தனர். வண்டியின் குறுக்கில் கை நீட்டினார் காத்தவராயன்.

“நாந்தாங்க போனு பண்ணது… எங்க கணத்துலதாங் வெடி வைக்கணும்…” என்றார் பெருமையாக.

வண்டி சட்டென நின்றது. அதன் இன்ஜின் மட்டும் தடதடவென ஆடியபடி கர்ரும்… கர்ரும்…. என உருமிக் கொண்டே இருந்தது.

வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியிலிருந்த நடுத்தர வயதுகாரர் ஒருவர் கையைத் தூக்கி வணக்கம் வைத்தார். இடது கை அக்குளில் கருப்பு நிற லெதர்ப் பை ஒன்றை இறுக்கமாக அழுத்திப் பிடித்திருந்ததார்.

“கெணறு எங்க இருக்கு அண்ணாச்சி…” காத்தவராயனைப் பார்த்து ரொம்பவும் மரியாதையாகக் கேட்டார்.

“இப்டிகாவே நேரா போயி பீசக் கை பக்கமா திரும்பணும்… பக்கத்துலதாங்… நானு முன்னால போறங்… பின்னாலியே வாங்க…”

ஓரமாக நிறுத்தியிருந்த தனது மிதிவண்டியைத் தள்ளி சட்டென அதில் ஏறி மிதித்தார். வெடி வண்டி அவருக்குப் பின்னாலேயே மெதுவாக நகர்ந்தது. காக்கி நிறத்தில் பேண்டுகளும் தூசும் கறைகளுமாய் வெவ்வேறு நிறங்களில் சட்டைகளும் அணிந்திருந்த மற்றவர்களும் வெள்ளை வேட்டிக்காரரோடு சேர்ந்து சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தபடி வந்தனர்,

மண் பாட்டையில் சுமாராக அரை மைல் தூரம் போனதும் வலது கையை குறுக்கில் நீட்டி அசைத்துவிட்டு, மிதிவண்டியிலிருந்து இறங்கினார் காத்தவராயன். வேலியோரம் உயரமாய் நின்றிருந்த நுனா மரத்தின் கீழே மிதிவண்டியை நிறுத்தினார். அந்த நுனா மரம் முழுவதும் வெண்ணிறப் பிஞ்சு நட்சத்திரங்களைப் போல ஏராளமான பூக்கள் பூத்திருந்தன. சட்டென ஒரு காற்று சுழன்று வீச… சுற்றிலும் மல்லிகையின் மனம் குபீரெனப் பரவியது. நன்றாக மூச்சை இழுத்து அந்த வாசனையை முகர்ந்தார் வெள்ளை வேட்டிக்காரர். சட்டென அவர் முகத்தில் ஒரு பரவசம்.

வேட்டியை மடித்துக் கட்டி, வேலிக்குப் பக்கத்திலிருந்த உயரமான வரப்பில் ஏறி நடந்தார் காத்தவராயன். அவரைத் தொடர்ந்து வேலியையும் சில வரப்புகளையும் லேசான உறுமலுடன் ஏறிக் கடந்த வண்டி, புழுதி ஓட்டாமலிருந்த தாளடிக் கரம்பில் இறங்கியது. போன போகத்தில் நெல் அறுத்து மொக்கு மொக்காய் இருந்த நெல் தாளடிகள் டிராக்டர் சக்கரங்களில் மொருமொருவென நொறுங்க, வண்டி மெதுவாக முன்னே சென்றது.

அதன் பக்கத்துக் கொல்லையிலிருந்த கேழ்வரகுப் பயிர்கள் வதங்கிப் போயிருந்தன. முழம் நீளத்தில் பட்டை பட்டையாய் நிமிர்ந்து நிற்க வேண்டிய கேழ்வரகு சோகைகள் துவண்டு கீழே சரிந்திருந்தன. சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சு விரல்களைப் போன்று பச்சையும் மஞ்சளுமாய் வானத்தை நோக்கி கூம்பியிருந்தன கேழ்வரகுக் கதிர்கள். பால் பிடிக்கிற நேரம். பெரும்பசியில் முகம் சோர்ந்துபோன பருவப் பெண்களைப் போல உடல் வதங்கி துவண்டு கிடந்தன மொத்தப் பயிர்களும்.

வடக்கும் தெற்குமாய் அரை ஏக்கரா அளவிற்கு நீண்டிருந்தத் தாளடித் துண்டின் இறுதியில் சதுரமாய் இருந்தது அந்தக் கிணறு. கிணற்று மேட்டில் பிரமாண்டமான ஒரு எட்டி மரமும் ஒரு அவுஞ்சி மரமும் நின்றிருந்தன. அவுஞ்சி மரத்தில் தேன் மிட்டாய்களைப் போல சிவப்பு நிறப் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்துத் தொங்கின. திராட்சைக் குலைகளைப் போன்று அவை பார்க்கப் பார்க்க அழகாக இருந்தன.

கிணற்று மேட்டில் நான்கு பேர் நின்று இந்த வண்டியையே குறுகுறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று பேர் லுங்கியும் கை பணியனுமாக இருக்க, ஒருத்தன் மட்டும் டிரவுசரும் தலையில் முண்டாசுமாக நின்றிருந்தான். அவன் சுப்பராமன். காத்தவரானின் பங்காளி.

தூர் வாரிய முரம்பு மண்ணும் சிறிதும் பெரிதுமான கற்களும் கிணற்று மேட்டில் வெள்ளையும் பழுப்புமாய்க் குவிந்திருந்தன. எட்டி மரத்தின் கீழே வரிசையாக ஐந்து செங்கற்கள் நடப்பட்டு, அவற்றில் மஞ்சளும் குங்குமமும் பூசி இருந்தன. அவற்றின் எதிரில் கூர் கூராக பிடித்து வைக்கப்பட்ட மண் பிள்ளையார்கள் புத்தம் புதுசாக நின்றிருந்தன.

கிணற்றின் மேற்குப் புறத்தில் நடப்பட்டிருந்த ஒரு பெரிய களுப்புக் கொம்பின் மேல்… கை காட்டி மரம் போல ஒரு பெரிய கம்பு கட்டப்பட்டு, அது பாதிக் கிணறு வரை தலை நீட்டி… கிணற்றையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

கிணற்றின் வடக்குப் பக்கமாக வண்டி நின்று, இஞ்சின் அணைந்தது. வண்டியிலிருந்த ஐந்து பேரும் குதித்து இறங்கி, கிணற்றை எட்டிப் பார்த்தனர்.

அறுபதடி ஆழக் கிணறு. நல்ல அகலம். தண்ணீரே வற்றாத கிணறு. சுற்றுப்பட்டு கிணறுகள் எல்லாமே கோடையில் சுத்தமாக வறண்டு போகும். அந்த சித்திரை, வைகாசியிலும் கூட இந்தக் கிணற்றில் மட்டும் ஒரு ஆள் ஆழத்துக்காவது தண்ணீர் இருக்கும். ஏரியும் ஊர் சேந்தக் கிணறும் ஒரே நேரத்தில் வறண்டு போய், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நேரத்தில்… ஊரே இந்தக் கிணற்றை நம்பித்தான் தொண்டையை நனைத்துக் கொள்ளும் காத்தவராயனின் அப்பா காலத்திலிருந்தே எல்லா வீடுகளிலும் இந்தத் தண்ணீரில் தான் உலை கொதிக்கும். ஆடு மாடுகளுக்கும் இது தான் உயிர் நாடி.

இப்போது குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஊருக்குள் குழாய்த் தண்ணீர் வந்துவிட்டாலும் இங்கே ஆயில் இஞ்சின் ஓடிக்கொண்டிருந்தால் மந்தை மந்தையாய் ஆடுகளை ஓட்டி வந்து தண்ணீர் காட்டுவார்கள்.

இது எல்லாமே போன வருசம் வரைதான். கடந்த ஐப்பசியில் நீவாநதியில் கரைபுரண்டபடி வெள்ளம் ஓடியது. ஏரியும் நிரம்பிக் கடலாய்த் தளும்பியது. ஆனாலும் ஏரியின் கீழிருக்கும் நஞ்சையில் பாதிப்பேர்தான் நடவு போட்டனர். ஏரியின் பாதித் தண்ணீர்தான் பயிருக்கானது. மீதித் தண்ணீரை வானமும் பூமியுமே குடிக்க… இந்த வைகாசியில் ஏரி உலர்ந்து… மண் பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கிறது.

ஏரியே வற்றிப் போன பிறகு கிணறுக்கு எங்கிருந்து ஊற்று வரும். வடவாண்டை நிலத்துக்காரன் ஏட்டு முனிகான் போன சித்திரையில் தனது கிணற்றில் தூர் எடுத்து வெடி வைத்தான். வெடிக்குப் பிறகு அந்தக் கிணற்றின் வடக்கிலிருந்து புதிதாக ஒரு ஊற்று பிடுங்கிக் கொண்டு ஊற்றியது. அதே நாளில் இந்தக் கிணற்றில் பீறிட்டுக்கொண்டிருந்த வடவாண்டை ஊற்று சட்டென கண்களை மூடிக்கொண்டது. அதிலிருந்துதான் இந்தக் கிணற்றில் இப்படித் தண்ணீர் தட்டுப்பாடு.

மீண்டும் நெல் நடவு போட்டால் கிணறு தாக்குப் பிடிக்காது என்றுதான் அரை ஏக்காரவில் மட்டும் கேழ்வரகு நட்டார் காத்தவராயன். கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்று சுரக்க சுரக்க… காத்திருந்து காத்திருந்து ஆயில் மிசினை விட்டுத் தண்ணீர் பாய்ச்சினார்.

தங்கத்தைப் போல தினம் தினம் விலையேறும் டீசலை வாங்கி மிசினுக்கு ஊற்றிக் கட்டுப்படி ஆகவில்லை. கால்வாயில் ஓடுகிற தண்ணீரை துளிகூட வழியாமல் கொள்ளாமல் பார்த்துப் பார்த்து மடை திருப்பினார்.

உச்சி வெய்யிலில் மந்தை மந்தையாக தண்ணீர் குடிக்க வரும் செம்மறி ஆடுகளைக் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் விரட்டி அடித்தார். ஆடு, மாடுகள் குடிக்கிறத் தண்ணீர் கூட கூடுதலாக ஒரு பாத்திக்குப் பாயுமே என்று கணக்குப் போட்டார். ஆடு, மாடுகள் அந்தப் பக்கம் தலை காட்டினாலே அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வரும்.

இப்படி நெஞ்சில் ஈரமே இல்லாமல் அவர் ஆடு, மாடுகளைத் துரத்தி அடிப்பது ஊர்க்காரர்களுக்கும் ஆத்திரமாகத்தான் இருந்தது. கையில் பணம் சேரச் சேர ஆள் மாறிவிட்டதாக அவரைக் கரித்துக் கொட்டினர்.

“எறைக்கற கணறுதான சொரக்கும்…. இவனே இப்டி பிசினாரியா ஆய்ட்டாங்… கணறு மட்டும் பிச்சிகினு ஊத்துமா… கணறு காய்ஞ்சி மண்ணாதாம் போவும்….” என சாபமிட்டது ஊர்.

காத்தவராயன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. எது எப்படியோ… பார்த்திருக்கும் போதே கூர் கூராக கதிர் விட்டு, விரல் விரலாய் மலர்ந்தன கேழ்வரகுக் கதிர்கள். ஒவ்வொரு கதிரும் சாம்பலும் பச்சையுமாய்ப் பூத்து, பால் பிடிக்கிற நேரம். அந்த நேரத்தில் பொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் சொதசொதத்தது அடிக் கிணறு.

பத்து நாட்களாக துளித் தண்ணீரும் பார்க்காமல் பயிர் காய்கிறது. சோறில்லாமல் வயிறு காய்ந்தால் கூட சம்சாரிக்குத் தூக்கம் வரும். பயிர் காய்ந்தால் தூக்கம் வருமா…? இரவு பகலாக மனசுக்குள்ளாகவே தவித்தார். கூலி ஆட்கள் ஐந்து பேரைத் தேடிப் பிடித்து கிணற்றில் இறக்கி அடி மண்ணை வாரி எடுத்தார். கிணறு தூர் எடுத்தே பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட, ஜமீன்தாரின் பரம்பரைச் சொத்தைப் போல… வார வார சேறும் முரம்புமாய் அடிக்கிணறு வற்றாமல் சுரந்து கொண்டே இருந்தது.

அவற்றை வாரி வாரி ராட்டினக் கயிற்றில் ஏற்றி மேலே அனுப்ப அனுப்ப, கிணற்று மேட்டில் மலைபோலக் குவிந்தன. ஐந்தடிக்கும் அதிகமாக அடிக்கிணறு ஆழமானது. ஆனாலும் கிணற்றில் தண்ணீர் மட்டும் ஊறவில்லை.

“மின்னலு மின்னி மறஞ்சி பூட்ற மாதிரி சட்னு மறஞ்சி பூட்சேயா அந்த வடவாண்ட ஊத்து…” என்று அங்கலாய்த்துக் கொண்டார் அவரது பக்கத்து வீட்டுக்காரர் குப்பன்.


அதற்குமேல் கிணற்றில் மண்ணையும் தோண்டி எடுக்க முடியவில்லை. வானத்துக்கு முதுகைக்காட்டிக் குப்புறப் படுத்துக் கிடக்கும் எருமை மாடுகளைப் போல…. இரண்டு பெரிய பெரிய பாறைகள் நடுக் கிணற்றினுள் அக்கடா என படுத்துக் கிடந்தன.

“யோவ் மாமா… இந்தப் பாறைங்கள வெடி வெச்சி ஒட்ச்சாதாங் ஊத்து வரும்… பால்மாறாம வெடி மிசினக் கூப்டு…” அவரது சம்மந்தி துரைக்கண்ணு கறராகச் சொல்லிவிட்டார்.

“அவனுங்க கண்த்துல காலவெச்சாவே பத்தாயிரம் பதினஞ்சாயிரம்னு புடுங்குவானுங்களே… அவ்ளோ துட்டுக்கு நானு எங்க போற்து…?”

“வெடி வெச்சாலும் கண்த்துல ஊத்து வர்றதுக்கு ஜவாப்பு இல்ல… அதுக்கும் நம்ப கொலதெய்வம் கண்ணத் தறக்கணும்பா…” குப்பன் புது கிலியைக் கிளப்பி விட்டார்.

காத்தவராயனுக்கு யோசனையாகிவிட்டது. கிணற்றிலிருந்து மண்ணை வாரி எடுக்கவே ஆள் கூலி, சாப்பாட்டுச் செலவு என ஒரே வாரத்தில் பத்தாயிரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அதுவே இரண்டு மூன்று பேரிடம் கைமாத்து வாங்கியதுதான். இதற்கு மேல் வெடி செலவுக்கு எங்கே போவது…?

மனசு தவிக்கத் தவிக்க வரப்பில் சுற்றிச் சுற்றி வந்தார். பித்துப் பிடித்தவராக நிலத்துக்கும் கிணற்றுக்கும் வீட்டுக்கும் அலைந்தார்.

குட்டிப் போட்ட நாயைப் போல மனசு கிடந்து தவித்தது. கண் திறக்காத குட்டிகளை புதரில் விட்டுவிட்டு, பசிக்காக ஊர்ப் பக்கம் ஓடி சட்டிப் பானைகளை உருட்டினாலும் ஞாபகம் பூராவும் குட்டிகளின் மீதே கிடந்து தவிக்க, நடுநடுவில் ஓடிப்போய் குட்டிகளை ஒரு எட்டு பார்த்துவிட்டு வரும் நாயைப் போல…. இருட்டிலும் கூட நடந்து போய் பயிரைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தார்.

மனசு தவியாய்த் தவித்தது. இப்படியே காய்ந்தால்… இரண்டொரு நாளில் பயிர்கள் நிற்க வலுவில்லாமல் பாதியில் ஒடிந்து சாய்ந்துவிடும். அதனால்தான் துணிந்து அந்த முடிவுக்கு வந்தார்.

தனது சம்சாரம் லல்லியின் மாங்காய் நெக்கலசை எடுத்துப் போய் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்தார். இருபதாயிரம் ரூபாய் வாங்கி வந்ததும் முதலில் பெரியாண்டவனுக்கும் கிணற்று மேட்டிலிருக்கும் முனீஸ்வரனுக்கும் தனித்தனியாக சேவலறுத்துப் பொங்கல் வைத்தார். அதற்குப் பிறகுதான் வெடி வண்டிக்குப் போன் போட்டார்.

“அண்ணாச்சி பாற ரொம்ப கெட்டிப்பாற… சாதா வெடிக்கு அசையாது… ரிக்க ஸ்ட்ராங்கா புட்ச்சி, வெடிய டபுளா வைக்கணும்… ரேட்டும் டபுளா ஆவும்…” பாறையைத் தட்டிப் பார்த்துவிட்டுக் கிணற்றிலிருந்து மேலே ஏறி வந்த வெள்ளை வேட்டிக்காரர் சொன்னார்.

அதைக் கேட்டதும் காத்தவராயனுக்குள் மீண்டும் பெரும் கவலை தொற்றிக் கொண்டது. கிணற்று மேட்டிலிருந்த செங்கல் சிலைகளைப் பார்த்துப் பெருமூச்சோடு கை கூப்பினார்.

“பவரா மருந்து வைக்கறதுக்கு சர்க்கார்ல இப்ப பர்மிசன் இல்ல… தெர்ஞ்சும் தெரியாமலும்தான் வைக்கணும்… வெடி ரொம்ப பவர்புல்லா வெடிக்கும்… போலீஸ் கீலீஸ் வந்தா நாங்க பார்த்துக்கறம்… வெடி வெடிக்கும் போது ஆடு மாடு ஆளுங்க நடமாட்டம் இல்லாம நீங்கதாம் பார்த்துக்கணும்…”

“ஆளுங்க வராம நாங்க பார்த்துகறம்… ரேட்ட மட்டும் பார்த்துப் போடு தொர… ஊட்டுக்காரி நகய வெச்சிதாங் செலவு பண்ணிகினு கீறங்…” என்றார். குரலில் பிசிறடித்தது.

“நம்பகிட்ட எப்பவுமே நாயமான ரேட்டுதான் அண்ணாச்சி… ஊருக்குள்ள இப்பவே ஆள உட்டு தகவல சொல்லிட்டு வர சொல்லுங்க… வெடி வெடிக்கும் போது யாரும் ஊட்ட உட்டு வெளிய தல காட்டக் கூடாது…”

கிணற்று மேட்டிலிருந்தவர்களில் ஒருவர் ஊர்ப்பக்கம் ஓட, சுப்பராமன் கழனிக்கட்டுப் பக்கம் ஓடினான்.

வெடி வண்டிக்காரர்கள் ஐந்து பேரும் படியில் இறங்கி, படிக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து அனாயசமாக கிணற்றில் இறங்கினர். மலைப் பாம்பைப் போன்ற அந்தக் கருமை நிறப் பைப்பும் வண்டியின் நீண்ட வால் போல கிணற்றுக்குள் இறங்கியது. அந்தப் பைப்பின் முனையில் ஒரு டிரில்லிங் ராடு இணைக்கப்பட்டது.

பாறையை மீண்டும் தட்டித் தட்டி, அங்கங்கே பெருக்கல் குறி போட்டார் வெள்ளை வேட்டிக்காரர். துப்புரவாக மண் வாரப்பட்ட கிணறு… தண்ணீர் தெளித்துப் பெறுக்கிய தெரு வாசலைப் போல ஈரமாக இருந்தது.

ஓட்டுநரும் வெள்ளை வேட்டிக்காரரும் மட்டும் மேலேறி வந்தனர். ஓட்டுநர் வண்டியில் சாவியைப் போட்டுத் திருக, அது மெதுவாக அதிர்ந்து ஓடத் தொடங்கி, காதைப் பிய்க்கிற சத்தத்துடன் விடாமல் கத்தத் தொடங்கியது.

கிணற்றில் இருந்தவர்கள் டிரில்லிங் ராடை பாறையில் வைத்து அழுத்திப் பிடிக்க, முதலில் கடகடவென சுழன்ற ராடு, மெதுவாகப் பாறையைத் துளைக்கத் தொடங்கியது. சுற்றிலும் புகையைப் போல பாறைத் துகள்கள் எழும்ப, நடுநடுவே நெருப்புப் பொறி பறந்தது.

கை கனத்தில், ஒரு முழம் ஆழத்தில் முதல் துளை போட்டு முடிந்தது. அதே போல அடுத்தத் துளை. இரண்டு பாறைகளிலும் இப்படியே இருபது துளைகள். இடைவிடாத காட்டுச் சத்தத்தில் காதுகள் அடைத்துக் கொண்டன காத்தவராயனுக்கு, கிணற்று மேட்டில் நின்றிருந்தவருக்கு கிணறே புகை மண்டலமாகத் தெரிந்தது. டிராக்டர் இன்ஜினின் ஓயாத அலறலில் அவரது உடலும் சேர்ந்தே அதிர்ந்தது.

மொத்தம் இரண்டே மணி நேரத்தில் இருபது வெடிகள் வெடிக்கத் தயாராகிவிட்டன. பெரிய பெரிய ஊது வத்திக் குழல்களைப் போல முழம் நீளத்திலிருந்த வெடி மருந்துகள் ஒவ்வொரு குழியிலும் பாம்புகளைப் போல நுழைந்து கொண்டன. அதன் மேல் எதையோ வைத்துத் திணித்து அந்தக் குழிகள் முழுமையாக மூடப்பட்டன. அவற்றிலிருந்த வெள்ளை நிற ஒயர்கள் மேலே நீட்டிக்கொண்டிருந்தன.

மொத்த ஒயர்களும் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டு அவை மொத்தமும் ஒரு பெரிய மஞ்சள் நிற ஒயரில் இணைக்கப்பட்டன. அந்த ஒயரை கிணற்றுக்கு மேலே இழுத்து வந்து, அங்கிருந்து முன்னூறு மீட்டர் தூரத்தில் இருந்த பெரிய புங்க மரத்தின் பின்பக்கம் வரை கொண்டு போனார்கள். அங்கே ஒரு சதுரமான பெட்டியைப் போன்ற பேட்டரியை வைத்து அதனோடு இணைத்தனர். அங்கேயே ஒருவர் உட்கார்ந்துகொள்ள, வெடி வண்டி கிணற்றின் அருகிலிருந்து கிளம்பி, மண் பாட்டைக்குப் போய், ஊருக்குள் நுழைந்து, ஒரு ஒதுக்குப் புறமாக நின்று கொண்டது.

“அண்ணாச்சி… மொத்தம் பதினேழாயிரம் ரூவா ஆவுது… இந்தப் பயிரப் பார்த்தா எனுக்கே கஸ்டமா இருக்குது… ஆயிரம் டிஸ்கவுண்ட்… பதினாறு குடுங்க போதும்…“.

காத்தவராயன் எதுவுமே பேசாமல், டிரவுசர் ஜோபியிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து எண்ணி அவரிடம் கொடுத்தார். கிணற்றை மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தார். ஒரு ராட்சத சிலந்தி வலைப் பிண்ணி வைத்திருப்பதைப் போல கிணறு முழுவதும் குறுக்கும் நெடுக்குமாய் ஒயர்கள்.

“இன்னொரு வாட்டி ஊருக்குள்ள ஓடிப் போயி தகவல் சொல்லுங்க அண்ணாச்சி… வெடி சத்தம் கேட்டு பத்து நிமிசம் யாரும் ஊட்ட உட்டு வெளிய வரக்கூடாதுனு கறாரா சொல்லுங்க… பவர்புல் ஜெலட்டின் குச்சிங்க… ஒரு மைல் தூரத்துக்குக் கூட கல்லு பறந்து போயி விழும்…”

கிணற்று மேட்டிலிருந்த எல்லோருமே ஊரை நோக்கி ஓடினர்.


காத்தவராயன் மிதிவண்டியைத் தள்ளி, ஏறி உட்கார்ந்து ஊரை நோக்கி வேகமாக மிதித்தார், வெடிகாரரும் பேட்டரிப் பெட்டி இருந்த புங்க மரம் பக்கம் போனார்.

“வெடி… வெடி… வெடி… …. வெடி… வெடி… வெடி…” ஊருக்குள் நுழைந்ததும் அடித் தொண்டையில் கத்தினார் காத்தவராயன்.

மாடுகளை ஓட்டிக்கொண்டு சாவகாசமாக நடந்து கொண்டிருந்த செவுட்டு ரங்கம்மாவைப் பார்த்து கைகளை ஆட்டி ஆட்டிக் கத்தினார். மாடுகளின் கயிற்றைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள் அவள்.

ஊருக்குள் ஒவ்வொரு வீட்டையும் பார்த்துக் கொண்டே போனார். எல்லா கதவுகளும் மூடப்பட்டிருந்தன. அமாட்டி வீட்டுக் கதவு மட்டும் ஒருக்களித்திருக்க… அமாட்டி தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான்.


“கதவ நல்லா மூட்றா மச்சாங்..…” அவனைப் பார்த்து அதட்டினார்.

மாடுகள் மாட்டுக் கொட்டகைக்குள் கட்டப்பட்டிருந்தன. தெருவில் சுத்தமாக ஆள் நடமாட்டம் இல்லை.

“வெடி… வெடி… வெடி…” மீண்டும் ஒரு முறை சத்தமாககக் கத்திவிட்டு, மிதிவண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓடிப்போய் செங்கல்வராயனின் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்.

மீண்டும் கழனிக்கட்டுப் பக்கம் போன சுப்பராமன் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களை அதட்டி, ஒரு மைல் தூரதுக்கு அப்பால் ஓட்டச் சொன்னான். ஏரிக்கரையில் துடைப்பம் அறுத்துக் கொண்டிருந்த வெள்ளச்சியை அதட்டி, ஏரி மதகிற்குள் இறங்கி மறைவாய் உட்கார வைத்தான். வயல் வெளிகளில் ஒரு ஈ காக்கா தென்படவில்லை.

ஓடிப்போய், சுந்தரேசனின் பம்புசெட்டுக்குள் நுழைந்தவன், வெடி கிணற்றுப் பக்கம் தலையை மட்டும் நீட்டிப் பார்க்கத் தொடங்கினான்.

காத்தவராயனின் மனசு படபடவென துடித்துக் கொண்டிருந்தது. நல்லபடியாக வெடி வெடித்து, பாறை தூள் தூளாக நொறுங்கி, அதன் அடியிலிருந்து ஒரு பெரிய ஊற்று பிறக்க வேண்டும். கிணற்றின் கல் கட்டடத்துக்கும் எந்த சேதாரமும் வந்து விடக் கூடாது.

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சா உனுக்கு காஞ்சிவரத்து பட்டுப்பொடவ சாத்தறம்மா கங்கம்மா தாயே….” என்று கிழக்கைப் பார்த்து வாய்விட்டே வேண்டிக் கொண்டார்..

கிணற்றுப் பக்கமிருந்து “வெடி வெடி வெடி…” என வெடிகாரரின் பெரும் கத்தல் கேட்டது.

ஊரே அமைதியானது. அடுத்த ஐந்தாவது நொடி… பெரிய இடி முழங்குவதைப் போல ஒரு பெருஞ்சத்தம்.

சுப்பராமன் பம்ப்செட்டிலிருந்து நன்றாகத் தலையை நீட்டிப் பார்த்தான். தண்ணீரிலிருக்கும் ஏரிக்கோழிகள் சட்டென எழும்பி வானத்தில் பறப்பதைப் போல…. கிணற்றுக்கு மேலாக குபீரென சீறி எழுந்த கற்கள் நாலாபுறமும் சிதறிப் பறந்தன.

அந்த பம்ப்செட்டின் வாசல் வரை பறந்து வந்த இரண்டு கற்கள் படீர் படீரென கீழே விழுந்து நொறுங்கின.

“அய்யோ… எவ்ளோ தூரம் வந்து விய்துரா கல்லு… பெரிய வெடிகாரங்கடா இவங்க…” அதிசயப்பட்டான் சுப்பராமன்.

மெதுவாக பம்பசெட்டை விட்டு வெளியே வந்தான். கற்கள் கீழே விழுவது அடங்கியதும் வேகமாக கிணற்றை நோக்கி ஓடத் தொடங்கினான்.

தெருவில் அங்கங்கே விழுந்து சிதறிக் கிடந்த கற்களைப் பார்த்துக்கொண்டே கிணற்றை நோக்கி ஓடினார் காத்தவராயனும். மிதிவண்டி அங்கேயே கிடந்தது. ஜனங்கள் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வர, சிலர் மாடுகளை அவிழ்த்து வெளியே ஓட்டிக் கொண்டிருந்தனர்.

காத்தவராயனின் மனம் திடுக் திடுக்கென அடித்துக் கொள்ள கிணற்றை நெருங்கினார். வெடிகாரர் கிணற்று மேட்டில் நின்றிருந்தார். இவர் பெரும் ஆர்வத்தோடு கிணற்றை எட்டிப் பார்த்தார். கிணற்றுக்குள் ஒரே புகை மூட்டம். எதுவுமே தெரியவில்லை.

“பத்திருவது நிமிசம் போனாதாங் கெணறு தெரியும்… வெடி நல்லாவே வெடிச்சி இருக்குது அண்ணாச்சி…..”

வெடிகாரர் சொன்னதைக் கேட்தும் காத்தவராயனுக்கு மனசு பூரித்தது. சுப்பராமனும் மூச்சிறைக்க ஓடி வந்து கிணற்றை எட்டிப் பார்த்தான்.

அப்போது கிழக்குப் பக்கமிருக்கும் நடுவூரிலிருந்து ஏதோ கூச்சல் கேட்டது. நான்கைந்து பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் கத்துவதைப் போல இருந்தது. மூவரும் தலையைத் திருப்பி அந்த ஊர்ப் பக்கம் பார்த்தனர்.

அப்போது அந்த ஊர்ப்பக்கமிருந்து ஓட்டமாக ஓடிவந்தான் சின்னாகோணி. அவன் முகம் வியர்த்து வழிந்தது. முகத்தில் பெரும் கலவரம்.

“ணோவ்… ஒரு கல்லு நடுவூர்ல வந்து விய்ந்திச்சி… நாகஸ்வரம் ஊதற சஞ்சீவிக்கு மண்ட ஒடஞ்சி ரத்தமா ஊத்துது…”

“அய்யோ… கெங்கம்மா தாயே…” என அலறினார் காத்தவராயன்.

இப்போது அவருக்குள் ஒரு வெடி வெடித்து உடல் அதிர்ந்தது. தடதடவென உதறலெடுத்தது. அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்தார்.

“அவ்ளோ தூரத்துக்கு கல்லு போவாதுனுதாங் அந்த ஊர்ல சொல்லல… அந்தூரு ஒரு மைலு தூரத்துக்கு மேலயே இருக்குமே…” என்றான் சுப்பராமன்.

“ரொம்ப பவர்புல் மர்ந்துனு நாந்தாங் அப்பவே சொன்னனே… போயி போலீஸ் கேசு எதுவும் ஆவாம பார்த்துக்கங்க… நாங்க களம்பறம்…” தபதபவென நடந்து, பாட்டையில் இறங்கி வண்டியை நோக்கி வேகமாகப் போனார் வெடிகாரர்.

“ணோவ்… எய்ந்திர்னா… மன்ச உட்ராத… வெள்ளிமல முருகரு மேல பாரத்த போட்டுட்டு எய்ந்து வா…”

 அசைவில்லாமல் கிடந்தார் காத்தவராயன்.

“அவன மொதுல்ல ஆஸ்பத்திரிக்கு தூக்கினு போலாம்… உயிர காப்பாத்திட்டா பெரிய கண்டம் போய்டும்…”.

மலங்க மலங்க விழித்த காத்தவராயன், சட்டென எழுந்து நடுவூரை நோக்கி ஓடத் தொடங்கினார். சுப்பராமன் அவர் பின்னாலேயே ஓடினான்.

வீட்டு வாசலில் அலங்கோலமாக சரிந்து கிடந்தான் சஞ்சீவி. நினைவு தப்பியிருந்தது. முகம் முழுவதும் ரத்தம். அவனது வெற்று உடலில் வழிந்து, வேட்டியை நனைத்து, தரையிலும் கொஞ்சம் தேங்கியிருந்தது. ஆடறுத்த ரத்தம் போல கருப்பாக உறைந்திருந்தது.

ஒரு டவல் மட்டும் தலையில் சுற்றிக் கட்டியிருக்க, அவன் சம்சாரம் அவன் பக்கத்திலேயே மயங்கிக் கிடந்தாள். அவர்களைச் சுற்றி கிலியோடு நின்றிருந்த ஒரு கும்பல் காத்தவராயனை ஆத்திரத்தோடு பார்த்தது.

காத்தவராயனின் உடல் மேலும் கூனிக் குறுகியது. வாய் உலர்ந்து நாக்கு வறண்டது. கைகள் உதறிக் கொண்டிருந்தன.

சுப்பராமன் ஓடிப்போய் நாயுடு நாராயணனின் ஆட்டோவை அழைத்து வந்து நிறுத்தினான். ஆதாபாதையாக சஞ்சீவியைத் தூக்கி பின் இருக்கையில் படுக்க வைத்தனர்.

காட்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர். முதல் நாளே பதினைந்தாயிரம் கட்டவேண்டியிருந்தது. சுப்பராமன்தான் எங்கேயே ஜவாப்தாரியாக இருந்து பத்து வட்டிக்கு பத்தாயிரம் வாங்கி வந்து காத்தவரானிடம் கொடுத்தான். கையிலிருந்த மிச்ச சொச்சத்தையும் போட்டுக் கட்டினார்.

முன் தலையில் கல் விழுந்ததால் உடனடியாக உயிருக்கு ஆபத்தில்லாமல் போனது. அதே கல் உச்சந்தலையிலோ, பின் தலையிலோ விழுந்திருந்தால் ஆள் ஸ்தலத்திலேயே போய் சேர்ந்திருப்பான்.

ஆனாலும் நெற்றியில் ஒரு குத்துச் சதையை வெட்டி எடுத்துவிட்டிருந்தது. தொடையிலிருந்து சதையை வெட்டி எடுத்து, நெற்றிப் பள்ளத்தில் வைத்துத் தைத்து, தலையிலும் முகத்திலும் பெரிய கட்டுப் போட்டனர். ஒரு வாரம் கழித்துதான் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மீண்டும் பத்து நாட்கள் கழித்து நெற்றிக் கட்டைப் பிரித்த மருத்துவர்கள் கறாராகச் சொன்னார்கள்…

“இனிமே நாதஸ்வரம் வாசிக்கவே கூடாது… தம் புடிச்சி ஊதற காத்து அடிபட்ட குழியில போயி பலூன் மாரி உப்பும்… அது உயிருக்கே டேஞ்சராயிடும்…”

சஞ்சீவிக்கு அப்போதே முகம் செத்துவிட்டது.

அவன் குடும்பம் ஊருக்கே ஒற்றைக் குடி. கல்யாணம், காரியம், காதுகுத்து, ஊரத் திருவிழா என வாசிக்கிற சாதாரண உள்ளுர்த் தொழிலாளி அவன்.

நாதஸ்வரத்தை ஊதினால்தான் அவன் வீட்டில் உலை கொதிக்கும். அவன் சம்சாரம் ஏற்கனவே ஆஸ்த்துமா நோயாளி. பாதி நாள் கொர கொர என மேலும் கீழுமாய் மூச்சை இழுத்துக்கொண்டு படுக்கையி்ல் கிடப்பவள்.

இனி அவர்களின் சோற்றுக்கு என்ன வழி…?

ஊரே சேர்ந்து காத்தவராயனைத்தான் திட்டித் தீர்த்தது. தாகத்திற்குத் தண்ணீர் குடிக்க வரும் ஆடுகளைக் கூட துரத்தியடிக்கிற கபோதி. தன் வீட்டு உலை கொதிக்க இவனது குடியைக் கெடுத்துவிட்டானே பாவி எனத் தூற்றியது.

வெடிக்குப் பிறகும் கிணற்றில் ஒரே ஒரு சுமாரான ஊற்றுதான் கிளம்பியது. கிணறு முழுவதும் நிரம்பிக் கிடந்த கற்களையும் மண்ணையும் வாரி எடுத்து மேலே கொட்டுவதற்குள் அவர் தலை மேலும் மொட்டையானது. முதல் நாள் சஞ்சீவியை மருத்துவனையில் சேர்த்துவிட்டு வந்தவர்தான். திரும்பவும் அந்தப் பக்கமே போகவில்லை.

எப்படியோ சிறுகச் சிறுக தண்ணீரைப் பாய்ச்சி கேழ்வரகை அறுத்துவிட்டார். அறுத்தக் கதிர்களை டிராக்டரில் எடுத்துப்போய் களத்தில் கொட்டி, மெருக்கடித்து, தூற்றி, ராசி கட்டியபோது அவருக்கு மனசு பொங்கியது. ஒரே மாதிரி ரத்தச் சிவப்பில் மணி மணியாய் மின்னியது கேழ்வகு.

மரக்காலில் அளந்து பார்த்தபோது மொத்தமே ஏழு மூட்டைகள்தான் ஆனது. விலையைக் கணக்குப் போட்டுப் பார்த்தவருக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. பத்தாயிரம் ரூபாய் கூட தேராது. வெடி வைத்த செலவு, மண் எடுத்த செலவு என இருபத்தைந்துக்கு மேல் ஆகியிருந்தது. இதில் சஞ்சீவியின் மருத்துவமனை செலவு தனி.

“ஏகாம்பூரு வேபாரிய வர்சொல்ட்டுமாணா…?” என்று கேட்டான் அவரது பங்காளி ஏகாம்பரம்.

பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் காத்தவராயன்.

“பண்ண செலவுல கால்வாசி கூட வராதேணா… இதுல அந்த பர்தேசி நாய்க்கி ஆஸ்பத்திரி செலவு வேற… தர்மாஸ்பத்திரில சேக்காம எதுக்குணா தனியாரு ஆஸ்பத்திரில சேத்த….?” என்று அவரைப் பார்த்தான் ஏகாம்பரம்.

ஏதோ யோசனையாய் இருந்தார் காத்தவராயன்.

“அவன யாரு வாசல்ல ஒக்காந்து பீப்பிய ஊத சொன்னது….? பெரிய வித்துவானு… அந்த கருப்பு சனின ஒட்ச்சி அடுப்புல வைக்கணும்ணா…”

திடுமென தலையை உதறிக் கொண்டு அவனைப் பார்த்தார் காத்தவராயன்.

“செரி… வேபாரிய வர்சொல்டா… அதுக்கு முன்னால ஒரு மூணு மூட்டய அள்ந்து தனியா போடு…”

“எதுக்குணா…”

“அத எட்த்துகினு போயி சஞ்சீவி ஊட்ல போட்டுட்டு வந்துரு…”

ஏகாம்பரம் சட்டென அவரை நிமிர்ந்து பார்த்தான். அவர் முகம் தெளிவாக இருந்தது.

ஓவியம்: வேல்

kavippiththan
கவிப்பித்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...