No menu items!

நியூஸ் அப்டேட்: அரிசிக்கு ஜிஎஸ்டி – நிர்மலா சீதாராமன் விளக்கம்

நியூஸ் அப்டேட்: அரிசிக்கு ஜிஎஸ்டி – நிர்மலா சீதாராமன் விளக்கம்

சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலின் 47-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேக்கிங் செய்யப்பட்ட கோதுமை மாவு, அரிசி, தயிர், லஸ்சி, மோர், பன்னீர் போன்ற பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய வரிவிதிப்பு நேற்று அமலுக்கு வந்தது. இதனால் சில்லறை விற்பனையில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை உயர்ந்திருந்தது. ஒரு மூடைக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை (தரத்துக்கு ஏற்ப) விலை உயர்ந்தது.

இதனையடுத்து அரிசிக்கு வரி விதிப்பதா என்று எதிர்ப்புகள் கிளம்பின. இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்களும் அரிசி வியாபாரிகளும் நேற்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், “அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மாற்றம் தமிழக அரசு நடவடிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி இண்டர்நேசனல் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி (வயது 17), கடந்த 13-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்தது. இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கள்ளகுறிச்சி எஸ்.பி. செல்வக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம்: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு திருநெல்வேலியில் இன்று நிருபர்களிடம் கூறும்போது, “சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரையும், துணைச் செயலாளராக அக்ரி. எஸ். கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்க வேண்டும் என சட்டமன்ற அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி ஒரு கடிதத்தை எனது அலுவலகத்தில் வழங்கி உள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் இது சம்பந்தமாக ஓ.பன்னீர் செல்வமும் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சட்ட விதிகளின்படியும், சட்டமன்ற விதிகளின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இதுதொடர்பாக நீதிமன்றம், தேர்தல் கமிஷன் உள்ளிட்டவைகளில் முறையிட்டுள்ளார்கள். எனவே ஜனநாயக முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 66 பேருமே இரட்டை இலை சின்னத்தில் இருந்து வெற்றி பெற்றவர்கள். அந்த கட்சியில் யார் தலைவர்? யார் செயலாளர்? என்பதை அவர்களுக்குள் பேசி முடித்துக்கொள்வார்கள். இதில் சட்டமன்ற தலைவர் தலையிடமாட்டார்” என்றும் அப்பாவு தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுத்த டி.ஆர். பாலு, கனிமொழி

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழ் பிரதமர் மோடியிடம் இன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆகியோர் சந்தித்து, 28.7.2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழையும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ‘தம்பி’ சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் மாணவிகள் உள்ளாடை கழற்றப்பட்டதாக புகார்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று முன் தினம் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில், கேரளாவில் கொல்லம் மாவட்டம்,  மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத சென்ற மாணவியின் மேல் உள்ளாடையை கழட்ட பெண் அலுவலர்கள் நிரபந்தித்துள்ளனர் என மாணவியின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், “தேர்வின்போதே அல்லது தேர்வு முடிந்த பின்னரோ இது தொடர்பாக எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்த மின்னஞ்சலையும் புகாரையும் என்டிஏ பெறவில்லை. தேர்வர் தேர்வும் எழுதியுள்ளார். மாணவியின் தந்தை கூறுவது போன்ற எந்த செயலையும் நீட் தேர்வுக்கான ஆடை விதிகள் அனுமதிப்பதில்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...