No menu items!

நியூஸ் அப்டேட்: இலவசங்கள் தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

நியூஸ் அப்டேட்: இலவசங்கள் தொடர்பான வழக்கு – 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

தோ்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடா்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய என்ற வழக்குரைஞா் பொதுநல வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி சி.டி. ரவிகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நேற்று திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான பி. வில்சன் ஆஜராகி தமது தரப்பு வாதத்தை முன்வைக்க முற்பட்ட, ​​தலைமை நீதிபதி என்.வி. ரமணா, “மிஸ்டர் வில்சன், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி பற்றி நான் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், நான் தலைமை நீதிபதியாக இருப்பதால் என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். ஞானம் என்பது உங்களுக்கோ தனிப்பட்ட கட்சிக்கோ உரியது என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் மட்டுமே அறிவார்ந்த கட்சி அல்ல. இந்த விஷயத்தில் எல்லோருக்குமே பொறுப்பு உள்ளது. உங்கள் தரப்பு பேசும் விதம், அறிக்கைகள் கொடுப்பது மற்றும் சொல்வதையெல்லாம் நாங்கள் முற்றாக கவனிக்கவில்லை என்று நினைக்காதீர்கள்,” என்று கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “ஆமாம், தமிழ்நாடு நிதியமைச்சர் உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக டிவியில் பேசிய கருத்துக்களை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அவை சரியானவை அல்ல” என்றார்.

இதையடுத்து நீதிபதி ரமணா, “இலவசங்களை மாநிலங்களால் வழங்க முடியாது என்று மத்திய அரசு நாளைக்கே ஒரு சட்டத்தை இயற்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சட்டம் நீதித்துறை ஆய்வுக்கு உட்படாது என்ற சொல்ல முடியுமா? நாட்டின் நலனுக்காக, இந்த விவகாரத்தை நாங்கள் விசாரிக்கிறோம்,” என்று தெரிவித்திருந்தார். தலைமை நீதிபதியின் இந்த பேச்சு நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தன்மானம் இல்லாத கூட்டம் அரசை விமர்சிக்கிறது – முதல்வர் பேச்சு

கோவை ஈச்சனாரியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.588 கோடி மதிப்பில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.272 கோடி மதிப்பில் முடிவுற்ற 229 திட்ட பணிகளையும், ரூ.663 கோடி மதிப்பில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 மாதங்களில் கோவை மாவட்டத்துக்கு 5 முறையாக வந்துள்ளேன். இந்த மாவட்டம் மற்றும் மக்கள் மீது வைத்திருக்கும் அடையாளம் தான் இது. அரசு விழா என்பதை விட கோவை மாநாடு என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் எதிர்கால தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை உங்கள் முகத்தில் பார்க்கும் மகிழ்ச்சியில் மூலம் அறிந்து கொள்கிறேன்.

என்ன செய்தோம் என்று சிலர் கேட்டுள்ளனர். அவர்களுக்கு நான் நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாக சொல்கிறேன் இதுதான் சாதனை. கடந்த ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் கோவையில் 1, 234 கோடிக்கு அதிகமான ரூபாயில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 185 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்காக இந்த அரசு இருக்கிறது. இந்த பல சாதனைகளை ஆற்றி கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக அறியலாம். தன்மானம் இல்லாத கூட்டம் திமுக அரசை விமர்சிக்கிறது’’ என்று கூறினார்.

விஜயகாந்தை கஷ்டப்படுத்தவில்லை – பிரேமலதா விளக்கம்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பேசிய அவர், “ஆக.15-ம் தேதியன்று 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும், அதற்காக நான் தலைமைக் கழகத்திற்கு வருகிறேன் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார். அதனால்தான் அன்று தலைவர் அழைத்துவரப்பட்டார். அவரது கையால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

ஆனால், பலபேர் அதனை திரித்து ஏன் அவரை கஷ்டபடுத்துகின்றனர்? எதற்காக அழைத்து வருகின்றனர்? என்று கேட்கின்றனர். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமாக இருப்பார். அதை ஒரு தவறான பிம்பத்துக்கு தயவுசெய்து யாரும் கொண்டு செல்ல வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

குற்றவாளிகள் விடுதலையாகக் கூடாது: பில்கிஸ் பானுவுக்கு குஷ்பு ஆதரவு

குஜராத் கலவரத்தில் 2002-ஆம் ஆண்டு பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமாகி ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர்களை அண்மையில் குஜராத் அரசு விடுதலை செய்தது. குஜராத் அரசின் இந்த முடிவுக்கு எதிராக பல்வேறு பெண்கள் நல அமைப்புகளும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். 11 பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, “பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு, பெண்ணின் ஆன்மாவை சிதைத்த எந்த நபரும் விடுதலையாகக் கூடாது. அப்படிச் செய்தால் அது மனித குலத்திற்கும் பெண்களுக்கும் நேரிட்ட அவமானம். பில்கிஸ் பானு மட்டுமல்ல எந்தவொரு பெண்ணுக்கும் அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஆதரவு தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படும்.

இதன்படி 2022ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவபுரஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் பால சாகித்ய புரஸ்கார் விருது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி. மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. யுவ புரஸ்கார விருது, ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதை தொகுப்புக்காக, எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...