மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எதிர்க்கட்சி தாலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது, அதிமுக நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும் தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப்பொருள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக்கூடிய சூழ்நிலையை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடக்கிறது. அதையும் நாங்கள் உள்துறை அமைச்சரிடம் சுட்டிக் காட்டியுள்ளோம்” என்றார்.
தமிழகத்தில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம்
தமிழகத்தில் நாளை 1000 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சுகாதரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் 1,166 நபர்கள் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் மருத்துவமனைகள் என மொத்தம் உள்ள 11,333 மருத்துவமனைகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூடுதலாக நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம் நடைபெறும்” என்றார்.
தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது
தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுடன் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. ஒரு கூட்டத்தொடர் முடிந்ததும் அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது பேரவை விதியாகும். அந்த வகையில் அடுத்த மாதம் தீபாவளிக்கு முன்னதாக 2-வது வாரத்தில் சட்டசபை கூட்டத்தை 5 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அ.தி.மு.க. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தின் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார்? ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதே இருக்கையில் இடம் ஒதுக்கப்படுமா? அல்லது வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்ற விவரம் அடுத்த மாதம் நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் தெரிந்து விடும். இதனால் இந்த சட்டசபை கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு விரைவு பேருந்துகளுக்கான தீபாவளி முன்பதிவு நாளை தொடக்கம்
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் (சனி, ஞாயிறு) அரசு விடுமுறையாக இருப்பதால் அக்டோபர் 21-ந் தேதியே பயணத்தை தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது. ரெயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு நாளை (21-ந் தேதி) முதல் தொடங்குகிறது.
வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன்- சுப்புலட்சுமி ஜெகதீசன்
வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் என்று தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருந்து அப்பதவியில் அப்பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியுள்ளார்.
இதைத்தொடர்பாகஅவர் அளித்துள்ள பேட்டியில், “நான் பெரியார் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு உள்ளேன். வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே விலகினேன். ஓய்வுபெற தேவையில்லை என்றால் தொடர்ந்து தி.மு.க.விலேயே இருந்திருப்பேன். நான் ஏன் வேறு கட்சிக்கு செல்லப்போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.