No menu items!

புதிய கிரிக்கெட் விதிகள் – சொல்வதென்ன?

புதிய கிரிக்கெட் விதிகள் – சொல்வதென்ன?

கிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யமாக்கவும், கால நிலைக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தவும் அவ்வப்போது புதிய விதிகளை ஏற்படுத்துவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) வழக்கம். அந்த வகையில் தற்போது புதிதாக சில விதிகளை அறிவித்துள்ளது ஐசிசி.

புதிய விதிகள் சொல்வது என்ன?

பந்தை பளபளப்பாக வைத்திருக்கவும், ஸ்விங் ஆவதற்கு ஏற்ற வகையில் வைத்திருக்கவும், பந்து வீச்சாளர்களும், பீல்டர்களும் அதை எச்சில் கொண்டு தேய்க்கும் பழக்கம் இருந்துவந்தது. கொரோனா காலகட்டத்தில், தொற்றைப் பரப்பலாம் என்ற காரணத்தால் இந்த முறைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை இனி நிரந்தரமாக அமலில் இருக்கும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இனி எந்த வீரரும் எச்சில் தொட்டு பந்தை தேய்க்கக் கூடாது.

எதிரணி பீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஒரு வீரர் ஆட்டம் இழந்தால், அடுத்ததாக வரும் பேட்ஸ்மேன்தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும். ‘கேட்ச் பிடிப்பதற்குள் அந்த பேட்ஸ்மேன் பாதி கிரீசைக் கடந்துவிட்டார். அதனால் எதிரில் இருந்த பேட்ஸ்மேன் அடுத்த பந்தை எதிர்கொள்ளலாம்’ என்ற வழக்கம் இனி பொருந்தாது.
டி20 போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவரைப் போட்டு முடிக்காவிட்டால், மீதமுள்ள ஓவர்களின்போது 5 பீல்டர்களை 30 யார்ட் வட்டத்துக்குள் நிறுத்தி பந்துவீசவேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதி இனி ஒருநாள் போட்டிகளிலும் அமல்படுத்தப்படும். (இந்த விதி மட்டும் 2023 ஐசிசி உலகக் கோப்பை சூப்பர் சீரிஸ் தொடருக்குப் பிறகு அமலாகும்)

ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகும் பட்சத்தில், அடுத்து வரும் பேட்ஸ்மேன் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இதன்படி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 2 நிமிடங்களுக்கு உள்ளும், டி20 போட்டிகளில் 90 நொடிகளுக்குள் புதிய பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

ஒரு பந்துவீச்சாளர் பந்து வீச ஓடிவரும்போது பீல்டர்கள் எந்த இடத்தில் நிற்கிறார்களோ, அதே இடத்தில் பந்துவீசி முடிக்கும்வரை நிற்கவேண்டும். பந்து வீசும்போது பீல்டிங் இடத்திலிருந்து மாறினால் பேட்டிங் அணிக்கு ஐந்து ரன்கள் கொடுக்கப்படும். அந்த பந்தும் டெட் பாலாக அறிவிக்கப்படும்.

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சர்ச்சையாக இருந்துவந்த விஷயம் ‘மங்கட்’ முறையில் ரன் அவுட் ஆக்குவது. இதன்படி பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன் ரன்னராக இருப்பவர் கிரீசை விட்டு வெளியேறினால், பந்தை திருப்பி வீசி அவரை ரன் அவுக் ஆக்கலாம். இது தார்மீக விதிப்படி சரியல்ல என்ற கருத்து நிலவிவந்தது. இந்நிலையில் மங்கட் முறையில் செய்யும் அவுட்டை ‘ரன் அவுட்’ என்று முறைப்படி அழைக்கலாம் என்று புதிய விதி தெரிவிக்கிறது.

பேட்ஸ்மேனை அச்சுறுத்தும் வகையில் வீசப்படும் பந்தால் பேட்ஸ்மேன், ஆடுகளத்தை விட்டு நகர்ந்தால் அந்த பந்து “ டெட் பால்” என்று அழைக்கப்படும்.

ஒரு பந்துவீச்சாளர் பந்து வீச வரும்போது அவரின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பேட்ஸ்மேன் இறங்கி வந்து அடிக்க முற்படுவார். அப்போது பந்தை விக்கெட் கீப்பரிடம் வீசி ரன் அவுட் செய்யலாம். இந்த முறை இனிமேல் “ டெட் பால்” என கருதப்படும்.

அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...