No menu items!

இன்று சுப்புலட்சுமி ஜெகதீசன்… நாளை? – மிஸ் ரகசியா!

இன்று சுப்புலட்சுமி ஜெகதீசன்… நாளை? – மிஸ் ரகசியா!

“திமுகவில் இது இலையுதிர் காலம். பழுத்த இலைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து வருகின்றன” என்று சொல்லிக்கொண்டே ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“நீ சொல்லும் இலைகளில் ஒன்று சுப்புலட்சுமி ஜெகதீசன் என்று தெரிகிறது. மற்ற இலைகள் யார் என்று தெளிவாகச் சொல்?”

“முதல்ல சுப்புலட்சுமி ஜெகதீசன் பத்தி சொல்லிடறேன். தனக்கு எதிர் கோஷ்டியான முத்துச்சாமியை அமைச்சராக்கி அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாலேயே திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவில் இருந்தும் கட்சியில் இருந்தும் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதா திமுகவுல சொல்றாங்க. அது ஒரு பக்கம் இருந்தாலும் இப்ப அவங்களால முன்ன மாதிரி தீவிர அரசியல்ல ஈடுபட முடியல.”
“ஆட்சிப் பொறுப்புல இருக்கிற கட்சியிலருந்து விலகுறது ரொம்ப அரிதான விஷயமாச்சே… அவங்க பாட்டுக்கு இருந்துட்டு போயிருக்கலாமே?”

“உண்மைதான். ஆனா கட்சியில இருந்தும் அவங்களால எந்தக் காரியத்தையும் செய்ய முடியல. அவங்களுக்குனு ஆதரவாளர்கள் இல்லை. 2021 சட்டப் பேரவைத் தேர்தல்ல மொடக்குறிச்சி தொகுதியில 281 வாக்குகள் வித்தியாசத்துல பாஜகவிடம் தோற்றுப் போனார். அப்போதிருந்தே சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கட்சியினர் மீது வெறுப்பு. அவங்க சரியா வேலை பார்த்திருந்தா ஜெயிச்சிருக்கலாம்னு. பாஜகவிடம் தோற்றுப் போனதால் கட்சிக்குள்ளும் மதிப்பில்ல. இப்படியே போய் அரசியலுக்கே முழுக்கு போட்டுட்டாங்க”

”இவங்கள மாதிரி வேற யாரு திமுகவுல அதிருப்தில இருக்கிறாங்க?”

“ஐ.பெரியசாமியும் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவார்னு சொல்றாங்க”

“ஐ.பெரியசாமியா? அவர்தானே திமுகவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிச்சவரு?”

“ஆமாம். அவரேதான். 1 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிச்சவர். ஆனா இப்ப அதிருப்தில இருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் இல்லாத துறையில் அமைச்சர் பதவியைக் கொடுத்ததுடன், தன்னைவிட ஜூனியர்களாக இருப்பவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுப்பது பெரியசாமிக்கு பிடிக்கவில்லையாம். அதனால் அவரும் கூடிய விரைவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகலாம் என்று அறிவாலய வட்டாரத்துல சொல்றாங்க.”

“இலைகள் அவ்வளவுதானா இல்லை இன்னும் இருக்கா?”

“திமுகவில் கசமுசாக்கள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆ.ராசாவின் சமீபத்திய சர்ச்சை பேச்சுகளை கட்சியின் தலைமை ரசிக்கவில்லை என்ற பேச்சு கிளம்பியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக தான் பெரிய அளவில் திட்டமிட்டு வரும் நேரத்தில் இந்துக்களின் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் ஆ.ராசா பேசுவது வாக்கு வங்கியை பெரிதாக பாதிக்கும் என்று திமுக தலைவரிடம் சொல்லியிருக்கிறார்கள் சில திமுகவினர். ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு அவரது கட்சிப் பதவிக்கு ஆப்பு வைக்கும் என்று கூட வெளியில் வந்து தெரிவித்தார்கள். ஆனால் ஆ.ராசாவை ஓரம் கட்ட திமுக தலைவர் ஸ்டாலின் நினைக்கவில்லை. இந்த சர்ச்சை பேச்சுக்குப் பிறகும் ஆ.ராசாவுடன் விழாக்களில் கலந்துக் கொண்டு ஆ.ராசாவுக்கு தனது ஆதரவை மறைமுகமாக தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் திமுகவின் மற்றொரு பிரிவினர் ”

”ஆ.ராசா பேச்சுக்கு பாஜகவினரிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் வருகிறது. போராட்டங்கள் நடத்துகிறார்கள், போஸ்டர் அடிக்கிறார்கள். ஆனால் திமுகவிடமிருந்து எந்த கருத்தும் வரவில்லையே?

“பிரச்சினையை வளர்க்க வேண்டாம் என்று திமுக கருதுகிறது. அதே சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக எதிர்ப்பு நிலைதான் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்றும் நம்புகிறது. பாஜகவுக்கு எதிரான ஆ.ராசா, பிடிஆர் பேச்சுக்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உதவும் என்றும் கணக்குப் போடுகிறது?”

“சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு மாற்றாக துணைப் பொதுச் செயலாளராக யார் வரப் போகிறார்?”

“சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்துக்கு கனிமொழியை கொண்டுவரலாமா என்று முதலில் யோசித்திருக்கிறார் முதல்வர். ஆனால் அந்த பதவியை ஏற்க கனிமொழிக்கு விருப்பம் இல்லை. துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருப்பதைவிட வேறு வலிமையான ஒரு பதவியை தனக்குத் தரும்படி கேட்டுள்ளார். அதனால் இப்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்தை கீதா ஜீவனுக்கு வழங்கலாமா என்று யோசிக்கிறார் முதல்வர். பூங்கோதை ஆலடி அருணாவும் இப்பதவியை பெற முயற்சிகள் செய்துக் கொண்டிருக்கிறார்.”

“அப்படியென்றால் கொங்கு மண்டலத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுமே?”

“அதையும் முதல்வர் யோசிக்காமல் இல்லை. ஐ.பெரியசாமி தனது பதவியை ராஜினாமா செய்தால், அந்த இடத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வெள்ளக்கோயில் சுவாமிநாதனை நியமிக்க திட்டமிட்டிருக்கிறாராம் முதல்வர்.”

“தமிழகத்தில் இப்போதைய கூட்டணி தொடரும் என்று முதல்வர் பேட்டி அளித்திருக்கிறாரே? கூட்டணி அத்தனை வலுவாக இருக்கிறதா?”

“ கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் கூட்டணி கட்சிகளின் சில செயல்கள் திமுகவை கோபப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே முரசொலியில் கம்யூனிஸ்டுகளை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டது. ஆனால் கூட்டணிக்கு இது சங்கடமான காலக் கட்டம். பரந்தூர் விமான நிலையம், எட்டு வழி சாலை என்று சிக்கல் திட்டங்கள் வரிசையாக நிற்கின்றன. அத்தனயும் கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளவை. ஆளுங்கட்சியை பொருத்தவரை பரந்தூர் விமான நிலையம் அவர்களது அஜெண்டாவில் முக்கிய இடத்திலிருக்கிறது. அந்த விமான நிலையம் நிச்சயம் வந்தே ஆகவேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்துகிறது விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்ற மறைமுக திட்டமும் அதில் அடங்கியிருக்கிறது. இது தெரியாமல் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அங்கு சென்று ஆறுதல் சொல்லி தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அறிவாலயம் இதை அவ்வளவாக ரசிக்கவில்லை.”

“பாஜக செய்திகள் ஏதும் இருக்கிறதா?”

“தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையை எப்படியாவது சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று திட்டமிடுகிறாராம் அமித் ஷா. கொங்கு மண்டலத்தில் சீக்கிரத்தில் ஒரு சீட் காலியாகும் அந்த தொகுதியில் அண்ணாமலையை வெற்றிபெறச் செய்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கட்சிக்காரர்களுக்கும், கூட்டணி கட்சிக்காரர்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறாராம் அமித் ஷா”

“கொங்கு மண்டலத்தில் எப்படி சீட் காலியாகும்? என்ன பிளான் அது?”
”கரூர் பகுதியை சேர்ந்த ஒரு திமுக எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய போகிறாராம். அந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று கூறுகிறார்கள். தேர்தலில் ஜெயித்து எதிர்கட்சிக் கூட்டணியின் தலைவராக சட்டமன்றத்தில் அண்ணாமலை செயல்படுவார் என்கிறார்கள் காவிக் கட்சியினர்.”

“தமிழக இடைத்தேர்தல்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இருக்கும் ஏழாம் பொருத்தத்தை தெரிந்துமா இப்படியெல்லாம் திட்டம் போடுகிறார்கள்?’

“அப்படியே மற்றொரு திட்டத்தையும் அமித் ஷா சொல்லியிருக்கிறார். மேற்குவங்கத்தில் சமீபத்தில் பாரதிய ஜனதா நடத்திய போராட்டத்தில் பெரிய அளவில் கலவரம் வெடித்து நாடுமுழுக்க பேசப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டிலும் போராட்டம் நடத்த வேண்டும். அதை விட்டுவிட்டு வெறும் அறிக்கை அரசியலை நடத்திக்கொண்டு இருக்கக்கூடாது என்று அண்ணாமலைக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் அமித் ஷா.”

“எடப்பாடி பழனிசாமி திடீரென்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்திருக்கிறாரே? அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை என்றும் சொல்லியிருக்கிறாரே?”

“ திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்று புகார் கொடுக்க சென்றேன் என்று கூறியிருக்கிறார். நம்புவோம். ஆனால் அரசியல் பேசவில்லை என்பதை எப்படி நம்புவது? எடப்பாடியைப் பொறுத்தவரை சட்டப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார். இனி தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்பதை அவர் கவனித்து வருகிறார். தேர்தல் ஆணையத்தில் தன் தரப்பு வெற்றிபெற பாஜக மேலிடத் தலைவர்களின் ஆதரவு தேவை என்பதாலேயே அதைப் பெற இப்போது டெல்லிக்கு சென்றிருக்கிறார் எடப்பாடி. டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததால்தான் அவர் போயிருக்கிறார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.”

“இதில் அமித் ஷாவின் நிலைப்பாடு என்ன?”

“இந்த முறை சசிகலா, தினகரன், ஓபிஎஸ் பிரச்சனைகளையெல்லாம் கிளற அமித்ஷா வுக்கு விருப்பமில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 10 இடங்கள் தர எடப்பாடி சம்மதித்தால் அவருக்கு ஆதரவாக காய்களை நகர்த்த அமித் ஷா தயாராக இருக்கிறாராம்.”

“பாவம் ஓபிஎஸ். அவர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”

“ராமேஸ்வரம் போய் மண் எடுத்து கங்கையில் கரைக்க காசி போகிறார் ஓபிஎஸ். ஆனால் இந்தப் பயணம் வெறும் பக்தி பயணம் அல்ல என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள். காசியில் ஆர்.எஸ்.எஸ்.ஸை சார்ந்த சிலரை சந்தித்து அரசியல் உதவி பெறவும் சென்றிருக்கிறார் என்கிறார்கள். ஓபிஎஸ்ஸின் நடவடிக்கைகள் தெரிந்தே எடப்பாடி டெல்லிக்கு பறந்தார் என்றும் சொல்கிறார்கள்.”

”கட்சியை தமிழ்நாட்டில் நடத்தினாலும் டெல்லி சொல்றதைதான் கேக்குறாங்க…பாவம்”

” என்ன செய்யறது…டாடி டெல்லில இருக்காங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...