இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று காலை பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரையாற்றிய திரௌபதி முர்மு, “நான் குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டுள்ளது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. அது இந்த நாட்டின் ஒவ்வொருவரின் சாதனை. ஏழை எளிய மக்களின் கனவு நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்தும் சாதனை. நான் நாட்டின் பெண்கள், இளைஞர்கள் நலனில் முக்கியத்துவம் செலுத்துவேன். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து முர்முவை குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இருக்கையில் ராம்நாத் கோவிந்த் அமரவைத்தார். திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது.
இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை பெரும் அளவில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட தலைநகரில் அதிமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கூடங்குளத்தில் முதல் அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் மூலம் தினமும் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் அணு உலைகளில் எரிந்த யுரேனியம் எரிகோல்களை மாற்றும் பணிகள் நடைபெறும். அதனை முன்னிட்டு அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 நாட்களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்தபின் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அங்கு மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.