No menu items!

மீண்டும் சாதித்த நீரஜ் சோப்ரா

மீண்டும் சாதித்த நீரஜ் சோப்ரா

சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை தராமல் போக்கு காட்டிய விளையாட்டுகளில் ஒன்று தடகளம். மில்கா சிங், பி.டி.உஷா ஆகியோரால்கூட ஒலிம்பிக், சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வெல்ல முடிந்ததில்லை. இந்த வரலாற்றை மாற்றி எழுதுவதற்காகவே பிறந்தவரைப் போல் சர்வதேச அரங்கில் பலமாக முன்னேறி வருகிறார் நீரஜ் சோப்ரா.

கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். அந்த சாதனை வரலாற்றை எழுதிய மையின் ஈரம் காயும் முன்னே, தற்போது ஈகன் நகரில் நடந்துவரும் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. இம்முறை அவருக்கு கிடைத்தது வெள்ளிப் பதக்கமாக இருந்தாலும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றபோது எறிந்த தூரத்தைவிட அதிக தூரத்துக்கு (88.13 மீட்டர்) ஈட்டியை எறிந்து அவர் சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் (இதற்கு முன்பு அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ளார்) என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வாங்குவது நீரஜ் சோப்ராவுக்கு புதிதல்ல. இதற்கு முன் ஏற்கெனவே 2021-ல் நடந்த ஒலிம்பிக் போட்டி,  2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, 2017-ம் ஆண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2016-ல் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டி, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்தவர்தான் நீரஜ் சோப்ரா. அந்த வரிசையில் தற்போது சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

ஹரியாணாவில் உள்ள காண்டிரா கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாக நீரஜ் சோப்ரா பிறந்தார். நீரஜ்ஜின் பாட்டிக்கு அவரை மிகவும் பிடிக்கும்.  எந்த நேரமும் ஏதாவது பலகாரங்களைச் செய்து அவருக்கு சாப்பிடக் கொடுப்பார். கேட்டால், “வளர்ற பிள்ளை நல்லா சாப்பிடட்டும்” என்று சொல்வார். பாட்டியின் அதீதமான அன்பினால் சிறு வயதிலேயே நீரஜ் சோப்ராவின் உடல் எடை கூடியது. 11 வயதில் 80 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட சிறுவன் ஆனார் நீரஜ் சோப்ரா.

நீரஜ்ஜின் எஅடை கூடுவதைப் பார்த்து கவலைப்பட்ட அவரது அப்பா சதீஷ்குமார், எடையைக் குறைப்பதற்காக தினமும் மைதானத்தில் நீரஜ்ஜை ஓடச்செய்வார். ஒரு நாள் அப்படி ஓடிக்கொண்டு இருந்தபோது பானிபட்டைச் சேர்ந்த ஈட்டி எறியும் வீரரான ஜெய்வீர். நீரஜ்ஜின் உடல் வாகு ஈட்டி எறிவதற்கு ஏற்றதாய் இருந்ததால் அவருக்கு பயிற்சி அளிக்க விரும்பினார். அவரின் தந்தையிடம் இதற்கு ஒப்புதல் கேட்க, அவரும் சம்மதித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெய்வீரின் மேற்பார்வையில் பயிற்சி பெற்ற நீரஜ் சோப்ரா, உள்ளூர் முதல் சர்வதேச போட்டிகள் வரை பல வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளார். ஈட்டி எறியும் போட்டிகளில் வல்லவரும், சர்வதேச சாம்பியனுமான உவே ஹானின் பார்வையில் நீரஜ் பட, அவரை மேலும் பட்டை தீட்டியுள்ளார். இந்த இருவரும்தாஅன் நீரஜ் சோப்ராவின் முக்கிய குருநாதர்கள்.

பொதுவாக தனது முதல் வீச்சிலேயே பதக்கத்தை உறுதி செய்வது நீரஜ் சோப்ராவின் பாணி. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்பில் அது மாறிவிட்டது. இம்முறை முதலில் ஈட்டியை எறியும்போது நீரஜ் சோப்ராவின் கால் எல்லைக் கோட்டைத் தொட அது பவுலாக அமைந்தது. அடுத்த முறை பவுல் ஆகாமல் இருப்பதில் நீரஜ் சோப்ரா அதிக கவனம் செலுத்த, அவரது ஈட்டி 82.39 மீட்டர் தூரமே சென்றது. இதனால் வரலாற்ரில் முதல் முறையாக தனது ரசிகர்களை நகம் கடிக்க வைத்தார் நீரஜ் சோப்ரா.

அவரது போட்டியாளர்கல் பலரும் 85 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டியை வீச, நீரஜ்ஜை வெற்றித் தேவதை ஏமாற்றிவிடுவாரோ என்று பலரும் சந்தேகித்தனர். ஆனால் 3-வது முறை புது வேகத்தில் ஈட்டியை வீசிய நீரஜ், 86.37 மீட்டரை தொட்டார். அதன்பிறகு இன்னும் ஆற்றலை பெருக்கிக் கொண்ட நீரஜ் சோப்ரா, 88.13 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஒலிம்பிக் போட்டியை விட இம்முறை அதிக தூரத்துக்கு ஈட்டியை எறிந்தும், நீரஜ்ஜுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. அவரது போட்டியாளரான பீட்டர்ஸ், இம்முறை 93.07 மீட்டருக்கு ஈட்டியை எறிந்ததே இதற்கு காரணம்.

நீரஜ்ஜுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்ததால் ரசிகர்கள் மகிழலாம். ஆனால் நீரஜ் சோப்ரா மகிழவில்லை. வெள்ளியால் அவர் திருப்திப்படவில்லை. அடுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வதே தனது இலக்கு என்கிறார்.

சரித்திர நாயகர்கள் இப்படித்தான்..  சிறிய வெற்றிகள் அவர்களை எப்போதுமே திருப்திப்படுத்தாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...