No menu items!

நியூஸ் அப்டேட்: திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

நியூஸ் அப்டேட்: திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில்  உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வள்ளலாரை போற்றுவது திமுக அரசின் கடமை. வள்ளலார் பிறந்த நாளையொட்டி ஓராண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். பசி பிணியை தடுத்த வள்ளலார் வழியில் நடக்கும் திமுக அரசு, பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்து வருகிறது. சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது. சமூக நல்லிணக்கம் வேண்டும். திமுக அரசு ஆன்மீகத்துக்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது என சிலர் பரப்பி வருகிறார்கள். திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது” என்று  தெரிவித்தார்.

இமாச்சல பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த நிலையில், பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்தார். அதன்பின், எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டார்.

ராஜராஜன் இந்துவா? வெற்றிமாறன் கருத்துக்கு திருமாவளவன் ஆதரவு

திருமாவளவன் மணி விழா நிகழ்வின்போது, ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருந்தது வைரலாகியுள்ளது. வெற்றிமாறனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், “ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செயகின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர் மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தசரா விழாவை ஒட்டி விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், “இந்தியாவின் தற்போதைய தேவை, மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டமும், கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதுமே ஆகும். இவை இரண்டும் அசட்டை செய்யாமல் உடனே கவனிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மதம் சார்ந்து மக்கள் தொகையில் சமமற்ற நிலை உருவாகினால் அது தெற்கு சூடான், கொசோவோ நாடுகளில் ஏற்பட்ட நிலையை உருவாக்கும்.

மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப வளங்களும் தேவை. வளங்களைப் பெருக்கும் நடவடிக்கை எடுக்காமல் மக்கள் தொகை அதிகரிப்பதை அனுமதித்தால் அது சுமையாக மட்டுமே உருவாகும். ஆனால், அதே வேளையில் மக்கள் தொகை மிகப்பெரிய சொத்தாகவும் கருதப்படுகிறது. மக்கள் தொகை கொள்கையை வகுத்தால் தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும். மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு பூகோல ரீதியாகவும் எல்லைப் பிரச்சினைகளை உருவாக்கும். இவைதவிர கட்டாய மதமாற்றமும் ஊடுருவலும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்: காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ட்விட்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். அவர் நேற்று ரஜோரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதனை தொடந்து ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சுற்றுப்பயணத்தின் 2-ம் நாளான இன்று பாரமுல்லா மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.

இந்நிலையில், தான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதி நிலை திரும்பிவிட்டது என உள்துறை மந்திரி தம்பட்டம் அடித்துவரும் நிலையில் பத்தன் பகுதியில் உள்ள எனது கட்சி தொண்டரில் இல்ல திருமண செல்ல நினைத்ததால் நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். முன்னாள் முதலமைச்சரின் அடிப்படை உரிமை சுலபமாக ரத்து செய்யப்படும்போது, சாமானியர்களின் அவல நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...