No menu items!

நியூஸ் அப்டேட்: திமுக உட்கட்சி தேர்தல் – வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

நியூஸ் அப்டேட்: திமுக உட்கட்சி தேர்தல் – வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

திமுகவில் தமிழ்நாடு முழுவதும் 76 அமைப்பு மாவட்டங்களாக இருந்தது நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாக மறு சீரமைக்கப்பட்டிருக்கிறது. இந்த 72 மாவட்டங்களில் அவை தலைவர், மாவட்ட செயலாளர், 3 துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமை கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய எண்ணிக்கை அடிப்படையிலான தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளைத் திருத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் இருந்தது.

இதனிடையே, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அப் பொதுக்குழு தீர்மானங்கள் அடங்கிய புதிய பிரமாணப் பத்திரத்தை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று மீண்டும் தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், “விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, இந்த தீர்மானங்களை ஏற்று தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நேரில் வலியுறுத்தினோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. ஓபிஎஸ் தனது கடிதங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவது, சட்டத்துக்குப் புறம்பானது. நீதிமன்றங்களில் வழக்கு முடிந்த பிறகு, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவரது ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுவிட்டது” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அறிவிப்பாணை வெளியீடு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. அக்டோபர் 19-ம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தின் நோக்கம் சந்ததியை உருவாக்குவதுதான்; உடல் இன்பம் அல்ல: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவனை விட்டு பிரிந்த மனைவியொருவர், தனது இரு மகன்களையும் தன்னிடம் ஒப்படைக்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “திருமணம் என்பது சந்ததியினரை உருவாக்கத் தானே தவிர, உடல் இன்பத்திற்காக மட்டும் அல்ல. குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது அவர்களை துன்புறுத்தும் செயலாகும். ஒரு குழந்தையை அதன் பெற்றோருக்கு எதிராக திருப்புவது என்பது தனக்கு எதிராக திருப்புவதை போன்றதாகும். இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் மட்டுமின்றி, குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதாகும்” எனக் கூறி, இரு குழந்தைகளையும் தாயின் தற்காலிக கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத்தரவிட்டார்.

ஷூ-வில் கேமரா பொருத்தி குட்டைபாவடை பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்த டாக்டர்: லைசன்ஸ் ரத்து

சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் ஜூ பென் வி தனது அந்தரங்க வீடியோக்கள் வைத்திருப்பதாக கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு பெண் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் சோதனை மேற்கொண்ட அந்நாட்டு அதிகாரிகள், டாக்டர் ஜூன் பென் வி தனது காலனியில் (ஷூ) இரகசிய கேமரா ஒன்றை பொருத்தி, மருத்துவமனை, மால்கள், கல்லூரிகள், ரெயில் நிலையம் என பெண்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு சென்று அவர்களது வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளதை கண்டறிந்தனர். குறிப்பாக குட்டைப்பாவாடை பெண்களை குறிவைத்து அவர்களது அந்தரங்க வீடியோக்களை எடுத்து வந்தது தெரியவந்தது. அவரது அறையில் சோதனை செய்தபோது சுமார் 3200-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவரது பெயர் டாக்டர்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் மருத்துவக் கவுன்சிலுக்கான (எஸ்எம்சி) ஒழுங்குமுறை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...