No menu items!

திருந்துவாரா ரோஹித் ஷர்மா?

திருந்துவாரா ரோஹித் ஷர்மா?

இந்தியாவில் பிரதமர் பதவிக்கு அடுத்தபடியாக அதிக விமர்சனங்களை எதிர்கொள்ளும் பதவி இந்திய கிரிக்கெட் கேப்டன் பதவிதான். கோடிக்கணக்கான இந்தியர்களின் மனம்கவர்ந்த விளையாட்டு என்பதாலேயே கிரிக்கெட்டில் எப்போதும் இந்தியா ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் இங்கு அதிகம். வெற்றி பெற்றால் கேப்டனை கொண்டாடுவதும், தோற்றால் கடுமையாக விமர்சிப்பதும் இங்கே வாடிக்கை. அந்த வகையில் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்படும் நபராக மாறியிருக்கிறார் ரோஹித் சர்மா.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடமும், அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வியடைய, ரோஹித் சர்மா மீதான விமர்சனம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல ரோஹித் சர்மா என்ன செய்ய வேண்டும்? அவர் திருத்திக்கொள்ள வேண்டிய தவறுகள் என்ன என்று பார்ப்போம்.

அளவுக்கு மீறிய ஆக்ரோஷம்:

கோபம், வெறுப்பு, பயம், மகிழ்ச்சி என எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தண்மையாக அணியை வழநடத்திய ‘கேப்டன் கூல்’ தோனியைப் பார்த்த நாடு இந்தியா. அவரது அந்த தண்மையான குணம்தான் இந்தியாவுக்கு பல கோப்பைகளை வென்றுகொடுத்தது. ஐபிஎல் போட்டிகளில் மும்பைக்கு 5 கோப்பைகளை வென்றுகொடுத்த ரோஹித் சர்மாவும் இதே குணத்துடன்தான் இருந்தார். ஆனால் இந்திய அணியின் கேப்டனாக மாறியதும் அவரது இந்த குணம் மாறியிருக்கிறது. மைதானத்தில் அளவுக்கு மீறி ஆக்ரோஷப்படுகிறார். ஸ்லெட்ஜிங் செய்கிறார்.

கடந்த போட்டியில் பேட்டில் பந்து பட்டதா என்பதை சரியாக கணிக்கத் தவறிய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை அவர் நெரிக்கச் சென்றது (விளையாட்டாக இதை அவர் செய்ததாக பின்னர் தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்தார்) இதற்கு மிகப்பெரிய உதாரணம். இதுபோன்ற குணைத்தை அவர் மாற்ற வேண்டும். உள்ளுக்குள் எரிமலை வெடித்தாலும், புன்னகை மாறாமல் அணியை வழிநடத்திய தோனிபோல் மாறவேண்டும்.

அணித்தேர்வு:

இந்திய கிரிக்கெட் தேர்வு வாரியம் 16 வீரர்களோ அல்லது 14 வீரர்களோ கொண்ட அணியை தேர்வு செய்து கொடுத்தாலும் அதிலிருந்து மிகச் சரியான 11 வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு கேப்டனுக்கு உண்டு. இதிலும் அதிகமாக தவறு செய்கிறார் ரோஹித் சர்மா.

உதாரணமாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை அணியில் சேர்ப்பது என்பதில் ரோஹித்துக்கு மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை எதிர்காலத்துக்கான மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் இருக்கிறார். ஆனால் அவரைவிட, ஐபிஎல்லில் சிறந்த பினிஷராக இருந்த தினேஷ் கார்த்திக் மீதுதான் ரோஹித்துக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. அதனாலேயே அணியில் தினேஷ் கார்த்திக்கை சேர்த்துக்கொள்கிறார். ஆனால் அவரையும் 16-வது ஓவர்வரை பேட்டிங்குக்கு அனுப்புவதில்லை. அக்சர் படேல் வரை ஆடவைத்துவிட்டு கடசியில்தான் அனுப்புகிறார். இதனால் வெறும் 3 ஓவர் பேட்டிங் செய்யும் தினேஷ் கார்த்திக்குக்காக, ரிஷப் பந்த்தை வெளியில் உட்காரவைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

அதுபோல் கடந்த போட்டியில் தீபக் சாஹரை ஆடும் லெவனில் சேர்க்காமல், சர்வதேச டி20 போட்டிகளில் அதிகம் ஆடாத உமேஷ் யதவை பந்துவீச்சாளராக களம் இறக்கினார். அவருக்கும் 2 ஓவர்களை மட்டுமே கொடுத்தார். இது ஏன் என்ற விமர்சனம் பெரிதாக எழுந்துள்ளது.

முடிவெடுப்பதில் குழப்பம்:

கிரிக்கெட் போட்டியின்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு புதுமைகளைச் செய்ய வேண்டியது அவசியம். அதை விட்டுவிட்டு போட்டியின் சூழ்நிலை எப்படி இருந்தாலும், தான் ஏற்கெனவே போட்டுவைத்த திட்டங்களை ரோஹித் சர்மா மாற்றுவதில்லை. உதாரணமாக கடந்த பல போட்டிகளில் கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்குகிறார் புவனேஸ்வர் குமார். ஆனால் அப்படியும் கடைசி ஓவர்களில் அவரை பந்துவீச வைக்கிறார். இது அணியின் வெற்றியை பாதிக்கிறது. இதுபோன்ற சூழலில் அவர் சிறப்பாக பந்துவீசும் நேரத்திலேயே, அதாவது முதல் 10 ஓவருக்கு உள்ளேயே அவரை முழுமையாக பயன்படுத்தலாம். முழுக்க வலதுகை பேட்ஸ்மேகள் இருக்கும்போது ஒரு மாற்றத்துக்காக நடுவில் இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்தை பயன்படுத்தலாம். ஆனால் இதுப்பொன்ற முயற்சிகள் ஏதும் எடுக்காதது ரோஹித் சர்மாவின் தவறு.

இதுபோன்ற தவறுகளை இனியாவது அவர் திருத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் நடக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் பெறுவது வெறும் கனவாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...