No menu items!

நியூஸ் அப்டேட்: அக்டோபர் 9-ந்தேதி திமுக பொதுக்குழு

நியூஸ் அப்டேட்: அக்டோபர் 9-ந்தேதி திமுக பொதுக்குழு

திமுக உள்கட்சி தேர்தலில் கிளை கழகம், பேரூர் கழகம், நகரம், ஒன்றியம், வட்டம் பகுதி, மாநகர செயலாளர் பதவிகள் வரை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். தொடர்ந்து 72 மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னை உள்பட 66 மாவட்டங்களுக்கு ஏற்கனவே இருந்த மாவட்டச் செயலாளர்கள் அப்படியே மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 6 மாவட்டங்களுக்கு மட்டும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலைக்குள் அவர் மாவட்ட செயலாளர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிகிறது. இதன் பிறகு இன்னும் ஓரிரு நாளில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகும். இதன் முடிவுகள் பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்படும். இதற்காக வருகிற 9-ந் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் திமுக பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளனர். பொதுக்குழுவுக்கான முன் ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டது.

அமைச்சர் அன்பில் மகேஸுக்கு ஃப்ளூ காய்ச்சல்: மருத்துவத் துறை அமைச்சர் தகவல்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் காய்ச்சல் அறிகுறி காரணமாக நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் எச்1என்1 ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “அமைச்சர் அன்பில் மகேஸுக்கு எச்1என்1 காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சை முடிந்து நாளை அவர் வீடு திரும்புவார். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை” என்று தெரிவித்தார்.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்

முதுகலை மருத்துவப் படிப்பிற்காக அரசு கல்லூரிகளில் 1,162 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 763 இடங்களும் உள்ளன. முதுகலை பல் மருத்துவத்திற்காக 31 சுயநிதி கல்லூரிகளில் 296 இடங்களும், 94 பட்ட படிப்பு இடங்களும் உள்ளன. இந்த 2,346 இடங்களுக்கும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெறப்பட்டது. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு, முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் இன்று வெளியிட்டார்.

அரசு கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்காக பெறப்பட்ட 6,960 விண்ணப்பங்களில் 6, 893 விண்ணப்பங்கள் தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட 2,025 விண்ணப்ப்பங்களில் 286 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதுகலை பல் மருத்துவத்திற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா: அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

இந்திய குடியரசு தினவிழா ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக் குழுக்களும் மிகவும் புகழ்பெற்றவை. முப்படைகளின் அணிவகுப்பும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இதில் இடம்பெறும். அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் குடியரசு தினவிழாவுக்கு அனுப்பப்பட்ட பாரதியார், வேலு நாச்சியார், வ.உ. சிதம்பரனார் போன்றவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போரில் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை இணைக்கும் வாக்கெடுப்பில் ரஷ்யா வெற்றி

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்ட ரஷ்யா, அதற்காக அப்பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நடத்தியது.

நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். நேற்று வரை 5 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜபோரி ஜியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டொனெட்ஸ்கில் 99.23 சதவீதமும், ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களை ரஷ்யாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதின் நாளை மறுநாள் (30-ந்தேதி) அறிவிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இந்த பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...