No menu items!

பொன்னியின் செல்வன் – கதாபாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் – கதாபாத்திரங்கள்

தமிழர்களின் வரலாற்று பெருமைகளில் ஒன்று சோழப் பேரரசு. உலக சரித்திரத்தில் மிக நீண்ட காலம் நீடித்த பேரரசு சோழப் பேரரசுதான். 846 முதல்1246 வரை நானூறு ஆண்டுகள் சோழர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்!

400 ஆண்டுகள் நீடித்த சோழப் பேரரசின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் சோழப் பேரரசு புகழ்பெற்று விளங்க முக்கிய காரணமாக இருக்கும் தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய அதே ராஜராஜ சோழன்தான்.

ராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கு முன்னால் நடைபெற்ற வரலாற்று சம்பவங்களை மையமாக வைத்து கற்பனை கலந்து எழுத்தாளர் கல்கி எழுதிய நாவல்தான் ‘பொன்னியின் செல்வன்’. இந்த நாவலைத்தான் இப்போது இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் யார், யார் என்ன வேடத்தில் நடித்துள்ளார்கள். அவர்கள் கதாபாத்திரத்தை ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் கல்கி எப்படி சித்தரித்துள்ளார் என்பதை பார்ப்போம்…

கார்த்தி – வந்தியத் தேவன்

ராஜராஜ சோழன் பற்றிய நாவல்தான் என்றாலும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாநாயகன் வல்லவரையன் வந்தியத் தேவன் தான். சோழ இளவரசர் ஆதித்ய கரிகாலனின் நண்பர்களில் ஒருவராக வருகிறார் வந்தியத் தேவன்.
வாணர் குலத்தைச் சேர்ந்த இளவரசன், வந்தியத் தேவன். வீரம் மிகுந்தவன், முன்யோசனையின்றிச் செயலில் இறங்குபவன், சோழ இளவரசி குந்தவையின் காதலன்.

வந்தியத் தேவன் பயணத்தில் இருந்துதான் பொன்னியின் செல்வன் நாவலின் கதையே தொடங்குகிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் இளவரசர் ஆதித்ய கரிகாலன், தஞ்சாவூரில் இருக்கும் தன்னுடைய தந்தை சுந்தர சோழருக்கும் சகோதரி குந்தவை தேவிக்கும் வந்தியத் தேவனிடம் ரகசியமாக ஓலை கொடுத்து அனுப்புவார். தொண்டை மண்டலத்தில் அவருடைய பயணம் தொடங்கினாலும், வீர நாராயண ஏரிக்கரையில்தான் கல்கி அவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் இந்தப் பயணம்தான் ‘பொன்னி நதி பார்க்கணுமே’ பாடலாக வருகிறது.


காஞ்சிபுரத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில், நண்பன் கந்தமாறனின் சம்புவரையர் மாளிகையில் தங்கும் வந்தியத் தேவன், மதுராந்தகரை அரியணையில் அமர்த்த பழுவேட்டரையர் தலைமையில் நடக்கும் சதியாலோசனையை தற்செயலாகக் கேட்டறிகிறான். இடையில், சோழ அரசின் அமைச்சர் அநிருத்த பிரம்மாயரின் ஒற்றன் ஆழ்வார்க்கடியானைச் சந்தித்து, அவன் மூலம் அவனது சகோதரியும் பழுவேட்டரையரின் மனைவியுமான நந்தினியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறான். அவர் கொடுக்கும் பனைமர முத்திரை சின்னத்தை தஞ்சை அரண்மனைக்குள் நுழையப் பயன்படுத்திக் கொள்ளும் வந்தியத் தேவன், ஒரு வழியாக சுந்தர சோழரை சந்தித்து ஓலையைக் கொடுக்கிறான். அங்கிருந்து பழையாறை சென்று குந்தவை தேவியிடம் அவருக்கான சேதியைச் சொல்லி ஓலையைக் கொடுக்கிறான். இதைத்தொடர்ந்து அவர் செய்யும் சாகசங்கள்தான் பொன்னியின் செல்வனின் முக்கிய கதை.


த்ரிஷா – குந்தவை

சோழ நாட்டு இளவரசி. ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மரின் சகோதரி.
`செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்தவள் குந்தவை தேவி. அழகில் ரதியையும் அறிவில் கலைமகளையும் அதிர்ஷ்டத்தில் திருமகளையும் ஒத்தவள்’ என்கிறார் குந்தவை பற்றி கல்கி.

அழகில் மட்டுமல்ல அறிவிலும் சிறந்து விளங்கும் குந்தவை எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாக முடிவெடுப்பவர். அன்பினாலும் அனைவரையும் அரவணைத்தவர். சோழ தேசமெங்கும் மருத்துவ சாலைகள் அமைக்கப் பல்வேறு உதவிகளைச் செய்தவள். சோழ அரசுக்கு எதிரான உள்நாட்டுப் பகையை முறியடிக்க தன்னாலான எல்லா முயற்சிகளை செய்பவர்.

சோழ தேசத்தை உயிராக நேசிப்பவள். இதற்காகவே வெளிநாடுகளைச் சேர்ந்த எந்தவொரு அரசனையும் மணந்து விடக் கூடாது என்று முடிவெடுக்கும் குந்தவை ஆதித்ய கரிகாலனின் நண்பனும் சாகச விரும்பியுமான வந்தியத் தேவன் மீது காதல் கொள்கிறார்.


ஐஸ்வர்யா ராய் – நந்தினி

பழுவூர் இளையராணி. பொன்னியின் செல்வனில் பலம்வாய்ந்த இரண்டு பெண் பாத்திரங்களில் ஒருவர் குந்தவை என்றால் இன்னொருவர் நந்தினி. குந்தவையின் அழகிலும் அறிவிலும் சளைத்தவர் இல்லை நந்தினி என்கிற விதமாகவே கல்கி வர்ணித்திருப்பார். நந்தினி, தன்னுடைய பரம வைரியாக நினைப்பது குந்தவையைத்தான்.

நந்தினிக்கு 12 வயதாக இருந்தபோது தஞ்சாவூருக்கு வருகிறாள். அப்போது, சிறுபிராயத்தில் இருக்கும் சுந்தர சோழரின் மகன்களாகிய ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மர் மற்றும் மகளான குந்தவை ஆகியோருடன் சிறிதுகாலத்தைக் கழிக்கிறார். இதில், பட்டத்து இளவரசாக பின்னாட்களின் முடிசூடப்பட இருக்கும் ஆதித்ய கரிகாலனுக்கு நந்தினி மீது காதல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் பிரிய நேரிடுகிறது.

தன் எதிரில் இருக்கும் ஆண்களை மயக்கி, தான் நினைத்த காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் வலிமையும் வல்லமையும் நந்தினிக்கு உண்டு. ஒரே நேரத்தில் சுந்தர சோழர், அருள்மொழி வர்மர், ஆதித்ய கரிகாலன் மூன்று பேரையும் கொல்ல சதித் திட்டம் தீட்டுகிறார் நந்தினி. எதற்காக அவர் சோழ தேசத்தின் எதிரியானார் என்பது மற்றொரு சுவாரஸ்யமான கதையாக விரிகிறது.


விக்ரம் – ஆதித்ய கரிகாலன்

ராஜராஜ சோழனுக்கு பதிலாக சோழ சாம்ராஜ்யத்தின் மன்னராக வந்திருக்க வேண்டியவர் இவர்தான். சோழப் பேரரசரான சுந்தர சோழரின் மூத்த மகன். இராஜராஜசோழனைவிட மாபெரும் வீரன். பதினாறு வயதிலேயே போர்க்களம் புகுந்து பல செயற்கரிய செயல்களைச் செய்பவன். வடதிசையில் சோழ அரசுக்கு தொல்லை கொடுத்து வந்த ராஷ்டிர கூடர்களையும் சோழ குலத்தின் மிகப்பெரிய எதிரியாகக் கருதப்பட்ட வீரபாண்டியனை கொன்று ‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி’ என்று பெயர் பெற்றவர்.

பாண்டியர்கள் ரகசியத் திட்டம் வைத்து ஐந்து அந்தணர்கள் மூலம் ஆதித்ய கரிகாலனை கொலை செய்துவிடுகிறார்கள் என்கிறது உடையார்குடி கல்வெட்டு. ஆனால், பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்ய கரிகாலனை யார் கொலை செய்தது என்பதை மர்மமாகவே விட்டுவிடுகிறார் கல்கி. காரணம், ஆதித்ய கரிகாலன் மறைவுதான் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் பெரிய ட்விஸ்ட்.


சரத்குமார் – பெரிய பழுவேட்டரையர்

பழுவூரை தலைநகராக கொண்ட சிற்றரசை ஆண்டு வந்தவர்களைப் பழுவேட்டரையர்கள் என்று அழைக்கின்றார்கள். ராஜராஜ சோழன் தந்தை சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் பழுவூர்ச் சகோதரர்கள் இருவர் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். ஒருவர் கண்டன் அமுதனார், இன்னொருவர் காலாந்தகக் கண்டர். இதில் கண்டன் அமுதனார் தான் பெரிய பழுவேட்டரையர். சோழ நாட்டுத் தனாதிகாரியாக இருந்தவர். வயது முதிர்ந்த காலத்தில் நந்தினியைத் திருமணம் செய்துகொண்டு தனது இளைய ராணி ஆக்கினார்.

இருபத்து நான்கு யுத்தகளங்களில் பங்கெடுத்து அறுபத்து நான்கு விழுப்புண்கள் பெற்ற வீரராகவும், நந்தினியை திருமணம் செய்து அவள் காதலுக்காக உருகுவதாகவும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பொன்னியின் செல்வனில் உருவாக்கப்பட்டுள்ளது. நந்தினி தேவி தானே சோழப் பேரரசை ஆளவேண்டுமென ஆசை கொண்டாள். அதற்காகவே பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்ததாகவும் கல்கி கூறுகிறார். நந்தினியின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு இறுதியாக அவளை விரட்டிவிட்டு, தன்னுடைய கையினாலேயே மரணத்தினைத் தழுவுகிறார் பெரிய பழுவேட்டரையர்.


பார்த்திபன் – சின்ன பழுவேட்டரையர்

பெரிய பழுவேட்டரையரின் சகோதரர் காலாந்தகக் கண்டர்தான் சின்ன பழுவேட்டரையர். பெரிய பழுவேட்டரையரைக் கேட்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடாதவர். ராஜ விசுவாசி. சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காத்த தளபதி. இவரது பாதுகாப்பில்தான் கீழ் தஞ்சை அரண்மனை பொக்கிசமும், தானிய அறையும் இருந்தது. மேலும் பாதாளச் சிறையொன்றினையும் தஞ்சை கோட்டையிருந்து வெளியே செல்லும் பாதாளச் சுரங்கத்தினையும் இவரே நிர்வகித்து வந்தார். பேரரசர் சுந்தர சோழர் உடல்நலமின்றி இருக்கும் போது, பலத்த காவல் புரிந்து கோட்டையைப் பாதுகாத்தவர்.

பெரிய பழுவேட்டரையர் நந்தினி தேவி எனும் மோகினியிடம் சிக்கி வதைபடுவதைக் கண்டு வருந்துகிறார்.

கொடும்பாளூர் வேளாருக்கும் பழுவேட்டரையர்களுக்கும் நெடுங்காலமாகப் பகை இருந்து வருகிறது. இந்நிலையில், தஞ்சை கோட்டையினை ஈழத்துப் போரில் படைக்குத் தலைமை வகித்த கொடும்பாளூர் பெரிய வேளார் கைப்பற்றி விடுகிறார். எனவே, தஞ்சை கோட்டை தன்வசமாகும் வரை அக்கோட்டைக்குள் பிரவேசிக்க இயலாதென மறுத்துவிடுகிறார். அதனை அறிந்த சுந்தர சோழர் மீண்டும் சின்ன பழுவேட்டரையருக்கு கோட்டை பொறுப்பினை அளிக்கின்றார்.

தன்னுடைய மருமகன் சோழ குலத்தவன் அல்ல, பாண்டிய மைந்தன் என்பதை அறிந்து தன்னுடைய மகளை மீட்டுக் கொண்டுவர புறப்படும் சின்ன பழுவேட்டரையர், மதுராந்தகனுடன் நடக்கும் சண்டையில் இறந்துவிடுகிறார்.


ஜெயராம் – ஆழ்வார்க்கடியான்

சோழப் பேரரசின் முதல் மந்திரி அநிருத்தப் பிரமராயரின் ஒற்றன; நந்தினி தேவியை வளர்த்த சகோதரர்; வந்தியத் தேவனுடன் பயணிப்பவர் என பொன்னியின் செல்வனில் வரும் முக்கிய கதாபாத்திரம் ஆழ்வார்க்கடியான். கல்கியின் வாசகர்களால் அதிகம் கவரப்பட்ட கதாபாத்திரம்.

உடல் முழுவதும் திருநாமம் இட்டுக் கொண்டும், கையில் எப்போதும் தடியுடன் இருப்பவர். ராஜாங்கக் காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், நிதானமாக செயல்படும் தன்மையுடையவர். நகைச்சுவை ததும்ப பேசுவதும், அறிவுப்பூர்வான ஆலோசனைகள் சொல்வதிலும் வல்லவர்.

தன்னுடைய வளர்ப்புச் சகோதரி நந்தினிதேவி பழுவூர் இளையராணியாகி, சோழநாட்டினைக் கைப்பற்ற நினைக்கும் போதும், சோழர்களின் நலவிரும்பியாக ஆழ்வார்க்கடியான் இருக்கிறார். குந்தவையின் வேண்டுகோளின்படி ஈழத்திற்கு சென்று அருள்மொழிவர்மனுக்கு ஓலை கொடுக்க செல்லும் வந்தியத் தேவனை அநிருத்தாின் கட்டளைப்படி ஆழ்வாா்க்கடியான் பல இடர்களிலிருந்து காத்து இளவரசரிடம் சேர்ப்பிக்கிறார்.


ஜெயம் ரவி – அருள்மொழிவர்மர் என்கிற ராஜராஜ சோழன்

பொன்னியின் செல்வன் இவர்தான்.

அண்ணன் ஆதித்ய கரிகாலன் மறைவால் மன்னரானாலும் சோழப் பேரரசு ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் புகழ்பெற்று விளங்க முக்கியமான காரணமாக இருக்கும் தஞ்சை பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் அருள்மொழிவர்மர்தான்.

அக்கா குந்தவை மேல் தனி மரியாதை வைத்திருக்கும் அருள்மொழி வர்மர் , சின்ன வயசில் இருந்தே அவர் பேச்சை மீறாமல் வளர்ந்து வந்தவர். அண்ணன் ஆதித்ய கரிகாலன் மேலேயும் மதிப்பு வைத்திருந்தவர். வீரத்தோடு புத்திசாலித்தனமும் கொண்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...