No menu items!

நியூஸ் அப்டேட்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

நியூஸ் அப்டேட்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க. ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் இன்று காவேரி மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொடர்பான அறிகுறிகள் குறித்து மு.க ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள்: பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி (ஜூலை 18) தொடங்குகிறது. இந்ந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில், “சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி, ஜெய்சந்த், வினாஷ் புருஷ் ஆகிய பார்த்தைகள் அவை நாகரிகம் அற்றவை. உறுப்பினர்கள் இவற்றைப் பயன்படுத்தினால் அவைக் குறிப்பில் இருந்து அந்த வார்த்தைகள் நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘இவை தாண்டியும் கூட்டத்தொடரின போது அவ்வப்போதைய நிலவரத்திற்கு ஏற்ப சில வார்த்தைகளை சபாநாயகரோ மாநிலங்களவை துணைத் தலைவரோ அவைக் குறிப்பில் இருந்து நீக்கலாம். அந்த வார்த்தைகள் எல்லாம் எந்த இடத்தில் பிரயோகப்படுத்தப்படுகிறது என்பதையும் பொருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது முடிவு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்குள் நுழைந்ததா குரங்கு அம்மை? சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், “அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு அம்மை தொற்று இருப்பதை உறுதி செய்ய முடியும். வெளிநாட்டில் குரங்கு அம்மை நோயாளி ஒருவருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகளும் இருந்ததால் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சாமி கும்பிட வந்த ஒன்பது வயது சிறுமிக்கு கோயிலுக்குள் பாலியல் தொல்லை:  போக்சோவில் பூசாரி கைது

தமிழ்நாடு – கேரளா எல்லையில் வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் விபின் என்ற 32 வயது நபர் பூசாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கோயிலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சாமி தரிசனம் செய்வதற்காக தனியே வந்துள்ளார். அப்போது பூசாரி விபின் சிறுமியை பூஜை பொருள்கள் வைக்கும் அறைக்கு கூட்டிச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

உடல் முழுக்க வலியால் துடித்த அந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதிருக்கிறார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பூசாரி மீது வண்டிப்பெரியாறு காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள். இதையடுத்து கோயில் பூசாரி விபின் மீது வண்டிப்பெரியாறு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து பீருமேடு கிளைச் சிறையில் அடைத்தனர்.

அமெரிக்காவில் பணவீக்கம் 9.1% ஆக உயர்வு: 41 ஆண்டுகளில் முதன்முறை

கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் போன்ற காரணங்களால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு உலக அளவில் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், “மே மாதம் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் 1 சதவீதமும், ஜூன் மாதம் 1.3 சதவீதமும் அதிகரித்து 9.1 சதவீதம் என்ற மோசமான நிலையை அமெரிக்கா அடைந்துள்ளது” என்று அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 1980 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 9 சதவீதத்தைத் தொட்டது. அதன் பின்பு இப்போதுதான் 9 சதவீத அளவீட்டை தாண்டி 9.1 சதவீத அளவீட்டை தொட்டுள்ளது.

இந்தியாவில், கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 12.94% ஆக இருந்ததாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எட்டு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மோசடி மன்னன்!

ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் ஐதராபாத் பிரஸ் கிளப்பில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, “குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி மேட்ரிமோனியில் பதிவிட்டிருந்தார். அவர் கூறுவதை உண்மை என நம்பிய நாங்கள் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் எங்களிடமிருந்த விலை உயர்ந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார். இதே போல் பல பொய்களை சொல்லி 8 பெண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதில் சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர். இது தொடர்பாக சைபராபாத் போலீஸ் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலும் பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...