No menu items!

ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சு?

ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சு?

ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சு என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்… காரணம் ஸ்ருதி சில தினங்களுக்கு முன் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ தான்.

சமீபத்தில் தன்னுடைய உடற்பயிற்சி வழக்கத்தை பதிவிட்டிருந்தார். கூடவே தனது மாதவிலக்கு சார்ந்த பிரச்சனைக்கு அவர் ஃபாலோ பண்ணுவது இதுவே என்று தனக்கு பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவில் “ நான் பிசிஓஎஸ் (PCOS) மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) ஆகிய மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறேன்.

பெண்களுக்கு இது சவால்களுடன் கூடிய கடினமான போராட்டம் என்று எனக்குத் தெரியும் – ஆனால் இவற்றை எதிர்த்து சண்டையிடாமல், அதை இயற்கை நிகழ்வாக ஏற்றுக் கொண்டு சமாளித்து வருகிறேன்.

சரியாகச் சாப்பிட்டு நன்றாக உறங்கி, உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நான் நன்றி சொல்கிறேன் – என் உடல் இப்போது சரியாக இல்லை, ஆனால் என் இதயம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ளுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், மகிழ்ச்சி ஹார்மோன்கள் பெருகட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சரி, பிசிஓஎஸ் என்றால் என்ன?

பிசிஓஎஸின் விரிவாக்கம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்(Polycystic ovary syndrome). இது பெண்ணின் உடலில் ஹார்மோன்கள் சீராக இல்லாதபோது ஏற்படும் பிரச்சனை. பெண்ணின் கர்ப்பப்பையில் பல சிறிய அளவிலான நீர் கட்டிகள் உருவாகி இயற்கையாக ஏற்படும் மாதவிலக்கு சுழற்சியை சீரற்றதாக செய்துவிடும். இதனால் கருமுட்டை உருவாகும் அந்த சுழற்சி பாதிக்கப்படுவதுடன், உடல் எடை கூடுதல், அதிகமாக முடி வளர்தல், மலட்டு தன்மை போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பெண்களுக்கு பிசிஓஎஸ் வருகிறது என்பதற்கான சரியான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.

ஆனால், பொதுவாக சர்க்கரை நோயும் ரத்த அழுத்த நோயும் அக்கா தங்கை போல்; உடல் எடை அதிகரித்தால் கூடவே பிசிஓஎஸ் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அல்லது பிசிஓஎஸ் வந்தால் அதிகமாக எடை கூடும் வாய்ப்புள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண் ஹார்மோனான ஆன்ட்ரோஜன் அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் முகத்தில் மீசை, தாடி போல சில பெண்களுக்கும் வளர தொடங்குகிறது.

எண்டோமெட்ரியாசிஸ் என்றால் என்ன?

இந்தப் பெயரை சொல்லவே வலிக்கிறது. இந்த பிரச்சினையிலும் அவ்வளவு வலி இருக்கிறது. எண்டோமெட்ரியாசிஸ் பிரச்சனையில் பெண்ணின் கர்ப்பப்பையில் வளர வேண்டிய திசுக்கள் சற்று கர்பப்பைக்கு வெளியிலும் வளரும். இதனால் மாதவிடாய் ஏற்படும்போது இந்த திசுக்களால் அதிகமான வலி ஏற்படும்.

இந்த பிரச்சனைகள் கேட்கவும் படிக்கவும் மிக பயங்கரமாக தோன்றலாம் ஆனால், இந்த சிக்கல்கள் பல பெண்களுக்கு ஏற்படுகிறது. முறையான உணவுப் பழக்கம், சீரான உடற்பயிற்சி, கூடவே மருத்துவர் அறிவுரைகளுடன் இந்தச் சிக்கல்களை தீர்த்துவிட முடியும்.

ஸ்ருதி ஹாசனின் பதிவைக் கண்டு பலவிதமான கருத்துக்கள் வந்த நிலையில் ஸ்ருதி மீண்டும் ஒரு பதிவிட்டார்.

தன் மீது அக்கறை கொண்டு நலம் பெற வாழ்த்திய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன். மருத்துவமனையில் சிகிச்சையில் இல்லை. இந்தப் பதிவு மற்ற பெண்களுக்கு ஊக்கம் தருவதற்காக பதிவிட்டேன். இது போன்ற விஷயங்களை பற்றி பேசுவது மக்களின் புரிதலை வளர்த்துக் கொள்ள உதவும், என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

உண்மைதான். பிரச்சினைகளை பேசினால் புரிதல் கிடைக்கும். தீர்வுதானாக வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...