No menu items!

நியூஸ் அப்டேப்: உதய்பூர் கொலையாளிகளுக்கு பாக்.  அமைப்புடன் தொடர்பு

நியூஸ் அப்டேப்: உதய்பூர் கொலையாளிகளுக்கு பாக்.  அமைப்புடன் தொடர்பு

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் நேற்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது கழுத்தை அறுத்தனர். தலையை தனியாக துண்டிக்க முயன்று முடியாத நிலையில்தான் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான போலீஸார் விசாரணையில், நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.  கன்னையா லாலை படுகொலை செய்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு நபர் கவுஸ் முகமது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சன்னி முஸ்லிம்களின் அடிப்படைவாத அமைப்பான தாவத் இ இஸ்லாமி குழுவுடனும், தெஹ்ரிக் இ லப்பைக் என்ற பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை நோக்கி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

குடியரசு தலைவர் தேர்தல்: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், யஷ்வந்த் சின்கா பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்து குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கேட்கவுள்ளார். இதற்காக, நாளை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை யஷ்வந்த் சின்ஹா சந்திக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு: ‘நமது அம்மா’ ஆசிரியர் மருது அழகுராஜ் விலகல்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ மற்றும் ‘ஜெயா டிவி’ சசிகலாவின் கைக்கு சென்றதால், புதிதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ‘நமது அம்மா’ மற்றும் ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியை அதிமுக மூத்த நிர்வாகிகள் தொடங்கினர். ‘நமது அம்மா’ நாளிதழ் நிறுவனர்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவர் பெயரும் இருந்து வந்தது. ஆனால், தற்போது ஏற்பட்ட பிரச்சனையால் ‘நமது அம்மா’ நாளிதழ் நிறுவனர் பெயரில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டது.

இந்தநிலையில் ‘நமது அம்மா’ பத்திரிக்கை தொடங்கியதில் இருந்து ஆசிரியராக செயல்பட்டு வந்த மருது அழகு ராஜ் இன்று தனது பதவியில் இருந்து விலகுவதாக டுவிட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நதிகாக்கும் இரு கரைகள் என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் ‘நமது அம்மா’ நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மருது அழகு ராஜ், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளராக அறியப்பட்டவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை தடுக்கக்கூடாது: முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து

செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் ‘அல்ட் நியூஸ்’ எனப்படும் இணையதள செய்தி நிறுவனத்தில் இணை நிறுவனராக பதவி வகிப்பவர் முகமது ஜுபைர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வலதுசாரி அமைப்புகளால் பரப்பப்பட்ட செய்தியை போலியானது என உறுதி செய்தார். அதனை ட்விட்டரிலும் பதிவிட்டார். இந்த பதிவானது வன்முறையை தூண்டும் விதமாகவும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருந்ததாக கூறி கடந்த திங்கள்கிழமை அவரை அகமதாபாத் போலீஸார் கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி டுஜாரிக்கிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டெஃபானி, “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். குறிப்பாக, பத்திரிகையாளர்களின் கருத்து சுதந்திரத்தை தடுக்கக் கூடாது. அவர்கள் மீது அடக்குமுறைகளை பயன்படுத்தி அச்சுறுத்தக் கூடாது” எனக் கூறினார்.

ரூ. 45,000 சம்பளத்துக்கு தவறுதலாக ரூ. 1.42 கோடி போட்ட நிறுவனம்: பணத்துடன் தலைமறைவான ஊழியர்!

சிலி நாட்டின் ‘கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல்’ நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கவனக்குறைவாக இந்திய மதிப்பில் ரூ.45 ஆயிரம்-க்கு பதிலாக ரூ.1.42 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த தவறு அந்த நிறுவனத்தின் கணக்கை சரி பார்த்தபோது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த நிறுவனம் சார்பில் அந்த ஊழியரை தொடர்புகொண்டு அதிகமாக அளித்த தொகையை திரும்ப கொடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்ற அந்த நபரும் தொகையை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளார். ஆனால், கூறியபடி பணத்தை திரும்ப ஒப்படைக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன அதிகாரிகள் இப்போது பணத்தை திரும்பப்பெற சட்ட அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...