No menu items!

கல்வியில் பின் தங்குகிறதா தமிழ்நாடு?

கல்வியில் பின் தங்குகிறதா தமிழ்நாடு?

தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குனரகம், 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இரு தினங்களுக்கு முன் (27-06-2022) வெளியிட்டது. இதில் இந்த ஆண்டு தேர்வு எழுதிய 8,43,675 பேரில் சுமார் 7,59,856 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டில் 96.04% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் 2022ஆம் ஆண்டில் 90.07% ஆக குறைந்துள்ளது.

இதுபோல் தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.  2020ஆம் ஆண்டில் சுமார் 10,677 பேர் தேர்வை எழுதாத நிலையில், 2022-இல் 41,376 பேர் தேர்வை எழுதவில்லை.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்ததுக்கு  என்ன காரணம்? இதை சரி செய்வது எப்படி? பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம்.

prince kajendrababu
பிரின்ஸ் கஜேந்திரபாபு

“2020-21 கல்வியாண்டில் முழுமையாக பள்ளிக்கூடங்கள் திறக்கவில்லை. 2021-22 கல்வியாண்டில் கொஞ்ச நாட்கள், அதுவும் இறுதியில்தான் பள்ளிக்கூடங்கள் நடைபெற்றது. எனவே, இந்த இரண்டு ஆண்டுகளிலும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாட்டில் மிகப்பெரிய அளவில் குறை இருந்தது. இந்த குறைதான் இந்த ஆண்டு +1 பொதுத் தேர்வில் குறைந்த தேர்ச்சி விகிதத்துக்கு முதன்மையான காரணம்.

2020-21 கல்வியாண்டில் முழுமையாக பள்ளிக்கூடங்கள் நடக்காததால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாமலே எல்லோருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்த மாணவர்கள்தான் 2021-22 கல்வியாண்டில் +1 தேர்வு எழுதியவர்கள். 11ஆம் வகுப்பிலும் கடைசி நேரத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு, சில நாட்களே வகுப்புகள் நடத்தப்பட்டதால், பாடங்கள் முழுமையாக கற்பிக்கப்படவில்லை.

இந்நிலையில், பள்ளிகள் திறந்தவுடன் அடுத்தடுத்து அவர்கள்மேல் ‘மாடல்’ தேர்வுகள் திணிக்கப்பட்டது. படிப்பதற்கு தேவையான நேரம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

இன்னொரு பக்கம் கொரோனா காலகட்ட வேலை இழப்பு காரணமாக நிறைய குடும்பங்களில் படிப்பதற்கு ஏற்ற சுமூகமான சூழல் இல்லை. இது போன்ற பின்னணிகள், மாணவர்கள் எந்தவிதமான மனநிலையில் இருக்கிறார்கள் போன்றவை கணக்கெடுக்கப்படாமல் பொதுத்தேர்வை சந்திக்கவும் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

உதாரணமாக நமது வீட்டுக்கு உணவுக்காக நாம் அழைத்திருக்கும் விருந்தினர்களைகூட அவர்கள் வந்தவுடன், ‘’சாப்பிடுங்கள்’’ என்று நாம் சொல்வதில்லை. அதற்கான மனநிலைக்கு அவர்கள் தயாராக சிறிது நேரம அவகாசம் கொடுப்போம். இது மாணவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் தேர்வுக்கு தயாராக நேரம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கு வந்த குழந்தைகள் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் நிர்வாக கடமையை முடிக்கும் அவசரத்தில் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டது. கற்றல், கற்பித்தல் செயல்பாட்டை அப்படி நிர்வாக ரீதியாக அனுக முடியாது.

நமது பள்ளிகளில் அனேக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதுவும் கல்வி தேர்ச்சி விகிதம் குறைய காரணமாக உள்ளது. எனவே, எதிர்காலத்தில் இந்நிலை வராமல் இருக்க காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

ஆசிரியர் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் நிரந்தர ஆசிரியர்களாக தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையம் மூலமே நியமிக்க வேண்டும். ஆசிரியர் அல்லாத ‘லேப் டெக்னிசியன்’ போன்ற பணிகளையும் நிரப்ப வேண்டும். அந்த பணிகளை ஆசிரியர்களை கொண்டு செய்வது கற்பித்தல் பணியை பாதிக்கும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் மட்டுமே பணியாக இருக்க வேண்டும். கற்பித்தல் அல்லாத பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது.

ஒப்பந்த அடிப்படையில், குறைவான சம்பளத்தில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் பல்வேறு தேவை மற்றும் நெருக்கடி சார்ந்த மன அழுத்தத்துடன்தான் எப்போதும் இருப்பார்கள். மன அழுத்தத்துடன் வகுப்பறையில் நிற்கும் ஆசிரியரால் மாணவர்களுக்கு சரியாக பாடங்களை கற்றுக்கொடுக்க முடியாது.

மேலும் ஜூலை முதல் பிப்ரவரி வரை எட்டு மாதங்களுக்கு அவர்களை ஒப்பந்தம் செய்வதாக சொல்கிறார்கள். எனவே, பிப்ரவரி மாதத்துக்குப் பின்னர் அவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள். ஆனால், மார்ச் மாதம்தான் மாணவர்களுக்கு மாடல் எக்ஸாம்கள் தொடங்கும். அப்போது பாடத்தில் சந்தேகம் வந்தால் மாணவர்கள் யாரிடம் கேட்பார்கள்?

எனவே, இந்த ஆண்டு +1 பொதுத் தேர்வு முடிவுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அரசும் பள்ளிக் கல்வித்துறையும் செயல்பட வேண்டும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...