No menu items!

நியூஸ் அப்டேட்: கலைஞர் 99-வது பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை

நியூஸ் அப்டேட்: கலைஞர் 99-வது பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது டிரோன் மூலமாக கருணாநிதியின் சிலைக்கு பூக்கள் தூவப்பட்டன. முதல்வரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ரயில்களில் அதிகம் லக்கேஜ் எடுத்து சென்றால் அபராதம்: ரயில்வே அறிவிப்பு

ரயில்களில் அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்க வகை செய்யும் விதிமுறை கடந்த 30 வருடங்களாக அமலில் உள்ளது. அதன்படி ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி2-டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ, ஏசி3-டயர் படுக்கை, ஏசி இருக்கையில் 40 கிலோ, இரண்டாம் வகுப்பில் 40 கிலோ, பொது வகுப்பில் 35 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறை நடைமுறையில் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், இனி அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ரயில் டிக்கெட் முன்பதிவின் போது பயணிகள் கூடுதல் லக்கேஜுக்கு கட்டணம் செலுத்தலாம். அப்படி செய்யாமல் அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேல் பயணிகள் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்வது உறுதியானால் அந்த எடைக்கான கட்டணத்தை காட்டிலும் ஆறு மடங்கு கூடுதல் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேட வேண்டாம்: மோகன் பகவத் பேச்சு

நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாமின் நிறைவு விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது, “ஞானவாபி விவகாரம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அது அன்றைய காலத்தில் நடந்தது. இன்றைய முஸ்லிம்களின் மூதாதையர்களும் அக்காலத்தில் இந்துக்களாக இருந்தனர். நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்களே. எனவே, இது போன்ற பிரச்சினைகளுக்கு பரஸ்பர தீர்வு காணுங்கள்.

ஆனால், தினமும் ஒரு புதிய பிரச்னையை எழுப்பக்கூடாது. நாம் ஏன் இதுகுறித்து சண்டையிட வேண்டும்? ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்? இனி வரும் காலங்களில் கோயில் குறித்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த போராட்டத்தையும் தொடங்காது,” என்று கூறினார்.

சிறுமியை பலாத்காரம் செய்து கருமுட்டை விற்பனை: தாயே திட்டமிட்டு நடத்திய கொடூரம்

ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 8 முறை கருமுட்டையை விற்பனை செய்ய வைத்த வழக்கில், சிறுமியின் தாய்  உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில், “பாதிக்கப்பட்ட சிறுமியின் 12 வயதில் இருந்தே அவரது கருமுட்டையை விற்பனை செய்ய சிறுமியின் தாயும் அவரது காதலனும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தாயின் காதலன் பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்வதற்கு அவரது வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதால், போலி ஆவணங்களை தயார் செய்துள்ளனர். இந்த போலி ஆவணத்தை பயன்படுத்தி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிறுமியை அவரது தாயும் புரோக்கர் மாலதியும் அழைத்து சென்று கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர்.

இதேபோல் சிறுமியை மொத்தம் 8 முறை கருமுட்டையை கொடுக்க வற்புறுத்தி உள்ளார்கள். மேலும், கருமுட்டை கொடுப்பதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய், தாயின் காதலன், புரோக்கர் மாலதி ஆகிய 3 பேர் மீது போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்: இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் அண்மையில் டெக்சாஸ் அருகே உள்ள தொடக்க பள்ளியில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 19 மாணவ-மாணவிகள், 2 ஆசிரியர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர். அடுத்ததாக அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவல் அதிகாரி உட்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்காவில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது.

கடந்த மே 20-ல் போக்குவரத்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 37 வயது நபரின் இறுதி ஊர்வலத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்லறை தோட்டத்தில் புகுந்த மர்ம கும்பல் குழுமியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. படுகாயம் அடைந்தவர்களின் முழு எண்ணிக்கை தெரியவராத நிலையில், 5-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...