No menu items!

விக்ரம் : சினிமா விமர்சனம்

விக்ரம் : சினிமா விமர்சனம்

’விக்ரம்’- 36 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது. 174.24 நிமிடங்கள் திரையில் பரபரக்கும் ஆக்‌ஷன் படம்.

போதைப் பொருளான கொகைன் தயாரிக்க பயன்படும் ரா சப்ஸ்டான்ஸையும், அதை தயாரிக்கும் கும்பலையும் க்ளைமாக்ஸில் கமல் & கோ துவம்சம் செய்வதே இந்த ‘விக்ரம்’ படத்தின் ஒன்லைன்.

1987-ல் பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் களமாடிய ப்ளாக் ஸ்குவாட்டின் கமாண்டர் கமல், அரசாங்கத்தின் ஸ்லீப்பர் செல் போல் அதிரடி காட்டும் ஃபஹத் ஃபாசில், கொகைன் தயாரிக்கும் அடாவடி தாதா விஜய் சேதுபதி, நேர்மையான காவல் அதிகாரிகளாக நரேன் மற்றும் காளிதாஸ் ஜெயராம், கொகைன் தயாரிப்புக்கு தோள் கொடுக்கும் காவல் அதிகாரி செம்பன் வினோத் ஜோஸ், போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தின் டான் சூர்யா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே பிஸ்டல், பீரங்கி, அர்னால்ட் துப்பாக்கி என ஆக்‌ஷனை பற்ற வைத்திருக்கிறது.

படத்தின் முதல் பாதியில் ஃபஹத் ஃபாசிலும், இரண்டாம் பாதியில் கமலும் ஆக்ரமித்து இருக்கிறார்கள்.

ஃபஹத்தின் நடிப்பு வழக்கம் போல் ஆரவாரமில்லாத ஆர்ப்பாட்ட நடிப்பு. கமல் தனக்கு இப்பொழுதும் கூட ஆக்‌ஷன் ஃபார்மூலா எடுபடும் என்பதை இப்படம் மூலம் நிரூபித்திருக்கிறார். விஜய் சேதுபதி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நரேன், காளிதாஸ் ஜெயராம், குமாரவேல், சந்தானபாரதி, அந்தந்த கதாபாத்திரங்களுக்கு அவசியமான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் செம்பன் வினோத் ஜோஸ், தமிழ் சினிமாவுக்கு நல்வரவு. யதார்த்தமான வில்லனுக்காக இவருக்கு இனி வாய்ப்புகள் வரலாம். அடுத்து ஏஜெண்ட் டினாவாக நடித்திருப்பவர். இவர் காட்டும் அதிரடி சண்டை எதிர்பாராத ஆக்‌ஷன் ட்ரீட்.

ஆனால் விஜய் சேதுபதியின் மனைவிகளாக வரும் ஷிவானி, மைனா நந்தினி, சின்னத்திரை தொகுப்பாளர் மகேஸ்வரி, ஹரிஷ் உத்தமன், அர்ஜூன் தாஸ், என பல நட்சத்திரங்கள் இன்னொரு பக்கம் ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

திரைக்கதையை ஆரம்பம் முதலிருந்தே விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்கள் அதற்காக கமலின் எண்ட்ரீயையும், ஆக்‌ஷன் காட்சிகளையும் இரண்டாம் பகுதியில் காட்டியிருப்பது கமல் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.

அதேபோல், கமலின் பேரக்குழந்தை திரைக்கதையில் இல்லாவிட்டாலும் கூட படத்தின் போக்கில் எந்தவிதமான தொய்வும் இருக்கப்போவதில்லை என்று தெரிந்தும், எமோஷனல் டச் வேண்டுமென்பதற்காக வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. போதைப் பொருளைக் கண்டறிந்து ஒளித்து வைக்கும் கமலின் மகன் காளிதாஸ் ஜெயராமை விஜய் சேதுபதி கொன்று விடுகிறார். அதற்கு ’பழிவாங்கவா இப்போது நீங்கள் துப்பாக்கியைத் தூக்கினீங்க என்று நரேன் கமலிடம் கேட்பார்.

என் மகனைக் கொன்னுட்டாங்கன்னு நான் இதைப் பண்ணல. ஒட்டுமொத்த தலைமுறையும் குரங்கு மாதிரி தன் நிலை தெரியாத மாதிரி மாறிடக் கூடாது. அதுக்குதான் போராடுறேன்’ என்றரீதியில் பதிலளிப்பார்.

ஆனால் இரண்டாம் பாதியில் கமலின் பேரக்குழந்தையைக் காப்பாற்ற எல்லோரும் அதிகம் மெனக்கெடுவார்கள். இந்த லாஜிக் மட்டும் கொஞ்சம் இடிக்கிறது.

சமீபகாலமாக பல படங்களுக்கு தனது ட்யூன்களால் முட்டுக் கொடுத்துவரும் அனிரூத், தொடர்ந்து கம்போஸ் செய்ததால் சோர்வடைந்து விட்டார் போலும். விக்ரமில் கொஞ்சம் ஓய்வு எடுத்திருக்கிறார். ’பத்தல பத்தல’ பாடலை தவிர்த்து அடுத்த பாடல்கள் காட்சியுடன் இணைந்தே வருவதால் தனித்து கேட்க முடியவில்லை.

பின்னணி இசையில் மாஸ்டர், பீஸ்ட் படங்களின் சாயல் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

க்ரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, அன்பறிவின் ஆக்‌ஷன் இப்படத்தின் டெம்போவை எகிற வைக்கின்றன.

கமல் மறந்தே போன ஆக்‌ஷன் அதிரடியை இப்படம் மூலம் மீட்டுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆக்‌ஷன் ஸ்கிரிப்டில் லோகேஷ் கனகராஜுவிற்கு இருக்கும் நேர்த்தி, இனி அவரை அடுத்த தலைமுறை இயக்குநர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற செய்திருக்கிறது என்று சொல்லலாம்.

அரசியலில் வெற்றி காணாமல் தவித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு இந்த விக்ரம் சினிமாவில் மீண்டும் பிஸியாக இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கும் துருப்புச்சீட்டு.

விக்ரம் – ஆக்‌ஷன் ப்ரியர்களுக்கான ‘Kick Rum’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...