No menu items!

நியூஸ் அப்டேட்: ‛அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம் வெளியீடு – இளையராஜா பங்கேற்கவில்லை

நியூஸ் அப்டேட்: ‛அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம் வெளியீடு – இளையராஜா பங்கேற்கவில்லை

‘புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்’ என்ற நிறுவனம் சார்பில், ‘அம்பேத்கரும் மோடியும் – சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. புத்தகத்தை முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

இந்த புத்தகத்திற்கு திரைப்பட இசையமைப்பாளரும் மாநிலங்களவை எம்.பி.,யுமான இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்த புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழில் இளையராஜாவும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் இளையராஜா பங்கேற்கவில்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி: அடுத்த மாதம் தொடக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டில் முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது.  தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நீட் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று: ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு இந்திய பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது, ‘இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்களை மையப்படுத்திய வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்தை குஜராத்தில் தொடங்கியது. பாரம்பரிய சிகிச்சைக்கான முதல் மற்றும் ஒரே உலகளாவிய மையம் இதுவாகும்” என்று தெரிவித்தார்.

சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம்

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு சில மாதங்களாக கோவிட் தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளது. எனவே, பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வரும் வேளையில் கோவிட் தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும், கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் சளி, காய்ச்சல் இருப்பின் சுய சிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவர்களை அணுகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

உக்ரைன் – ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்பி உள்ளனர். இவர்களை இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற குழு, ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது.

ஆனால், இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையமும், ஒன்றிய அரசும் எந்த பதிலும் கூறவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம்,  உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு இந்திய பல்கலைக் கழகங்களில் படிப்பை தொடர ஏற்பாடு செய்து தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் மருத்துவ கல்வியை இந்தியாவில் நிறைவு செய்ய அனுமதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, உக்ரைனில் இருந்து மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...